திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிறு தானியங்களை பொது விநியோகத் திட்டத்தில் வழங்க மத்திய அரசு முடிவு: வரவேற்கும் தமிழ்நாடு பாரம்பரிய வேளாண் ஆர்வலர்கள்!

உடலுக்கு உறுதியைத் தரும் சிறு தானியங்களை பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்து

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:48 pm

சா. ஜெயப்பிரகாஷ்

உடலுக்கு உறுதியைத் தரும் சிறு தானியங்களை பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்து,  இதற்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது.  இந்த முடிவை தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய வேளாண் ஆர்வலர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
கிராமப் பகுதிகளில் கம்பு,  சோளம்,  கேழ்வரகு வகைகள் பிரபலம்.  அண்மைக் காலமாக நீரிழிவு நோய் அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த வகைகள் ஓரளவுக்கு நகருக்கும் அறிமுகமாகியிருக்கின்றன.  ஆனால்,  வரகு,  சாமை,  திணை,  குதிரைவாலி போன்றவை இன்னமும் பெரும்பகுதி மக்கள் மத்தியில் சென்றடையாத சிறு தானியங்கள்.
இவற்றை நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிட முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு.  மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இதற்கான அறிவிப்பை கடந்த ஏப். 13ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து உணவு குறித்து தீவிரமாகப் பேசி வரும் சித்த மருத்துவர் கு. சிவராமன் கூறியது:
சிறு தானியங்கள் என்றுகூட நான் இவற்றைச் சொல்ல மாட்டேன். இவை அருந்தானியங்கள்.  பாரம்பரிய வழக்கத்தில் பெரும்பான்மையான மக்களோடு நெருக்கமாக இருந்தவை. காலப்போக்கில் இவற்றின் பெயரை அறிமுகப்படுத்துவதே பெரும்பாடாகி விட்டது.  நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு மத்திய அரசு இவ்வாறு அறிவித்திருக்கிறது.
இரும்புச் சத்து,  மாவுச் சத்து,  நார்ச்சத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இவற்றில் இருக்கின்றன.  கொழுப்பைக் கரைக்கும் தன்மையும், மலச்சிக்கலை நீக்கும் தன்மையும் இவற்றுக்கு உண்டு.  நெல்லரிசியைப் போலவே, வகைவகையான சோறு,  பொங்கல்,  உப்புமா,  பிரியாணி எல்லாமும் செய்யலாம் என்கிறார் சிவராமன்.
இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் 'வானகம்' உயிர்ச்சூழல் நடுவத்தின் செயலர் மருதம் குமார் கூறியது:
தமிழ்நாட்டில் வரகில் பனிவரகு,  செவ்வரகு என ஆறு,  ஏழு வகைகள் இருக்கின்றன.  ராகி எனப்படும் கேழ்வரகில் கருப்பு,  வெள்ளை, சிவப்பு,  இளஞ்சிவப்பு என 30 வகைகள் இருக்கின்றன.  சோளத்தில் செஞ்சோளம்,  தலைவிரிச்சான் என நிறைய வகைகள் உள்ளன.
சாமையில் மணி சாமை, செஞ்சாமை என பல வகைகளும், கம்பில் காட்டுக் கம்பு,  நாட்டுக் கம்பு போன்றவையும்,  திணையில் 3 ரகங்களும், குதிரைவாலியில் மட்டும் ஒரேயொரு ரகமும் இருக்கின்றன.
 புழுதியிலும் புழுதியாக வாழும் மானாவாரி விவசாயிகளைப் பற்றி கவனிப்பார் யாருமில்லையே என நம்மாழ்வார் சொல்வார்.  இப்போது மத்திய அரசு எடுத்திருக்கும் முயற்சி மிகப் பெரியது. வெறுமனே மானாவாரி விவசாயிகளுக்கு மட்டுமல்ல,  நோய்களால் தவிக்கும் பொதுமக்களுக்கும் உள்ளபடியே அக்கறையான செயல்.
பொதுவாக,  சிறு தானியங்களை புழுங்கல் அரிசியாக மாற்றி விட்டால்,  3 முதல் 4 மாதங்களுக்குப் பாதுகாக்க முடியும்.  ஓராண்டு வரை பாதுகாக்க வேண்டுமானால்,  அவற்றைத் தோல் நீக்காமல் வைத்திருந்தால் போதும். நாடு முழுவதும் அமைக்கும் கிட்டங்கிகளுக்கு அருகேயே சிறிய அளவில் இயந்திரங்களை வைத்து அரைவை செய்ய முடியும் என்றார் குமார். 
இயற்கை வேளாண் ஆர்வலர் அறச்சலூர் செல்வம் கூறியது:
நெல்லும்,  கோதுமையும் மட்டுமே உணவு என வேளாண் துறையினர் இதுவரை தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளனர்.  சிறு தானியங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கம் அளித்து,  உதவிகளை வேளாண் துறை வழங்க வேண்டும்.  நல்ல வருமானம் கிடைக்கும் என்ற செய்தியை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உலகில் சர்க்கரை நோயில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியாவுக்கு, மத்திய அரசு தற்போது எடுத்துள்ள முடிவு மிகவும் அவசியமானது.  குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் வருகிறது.  சிறு தானியங்கள்தான் இவற்றுக்கான தீர்வு என்றார் செல்வம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.