என்ன பிழை செய்தோம் நாங்கள்? குமுறும் கோட்டூர் மலைக் கிராம மக்கள்
தருமபுரி அருகே கோட்டூர் மலையில் சாலை வசதியின்றி காட்டு வழிப் பாதையை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு சுமார் 600 பேர் வசித்து


தருமபுரி அருகே கோட்டூர் மலையில் சாலை வசதியின்றி காட்டு வழிப் பாதையை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு சுமார் 600 பேர் வசித்து வருகிறார்கள். விவசாய விளைபொருள்களை கீழே கொண்டு வரவும், மகப்பேறு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு தூளி கட்டி இறங்கி வரவும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் இவர்கள்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வருவாய் வட்டம் மற்றும் வட்டுவனள்ளி ஊராட்சிக்குள்பட்டது கோட்டூர் மலை. இங்கு பெரும்பான்மையாக வெள்ளாளர் சமூகத்தினரும், கணிசமாக தலித் மற்றும் பழங்குடி இருளர் இன மக்களும் வசிக்கிறார்கள். ஏறத்தாழ 500 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 21 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு மலைக்கு கீழே திருமல்வாடிக்குத்தான் வர வேண்டும்.
பாலக்கோடு-பெல்ரம்பட்டி அருகேயுள்ள கன்சால்பெயில் என்ற இடம்தான் கோட்டூர் மலையின் அடிவாரம். கீழிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவு கடுமையான மலைப்பாதை. இடையிடையே எப்போதோ கற்களால் அமைத்த நடைபாதை உள்ளது. கோட்டூர் மலையில் வாழ்ந்து வரும் மக்கள் இந்தப் பாதையில் அரை மணி நேரம் நடக்கிறார்கள். மற்றவர்கள் மேலே செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும். கொஞ்சம் தவறினாலும் சில அடிகள் கீழே உருண்டு விழும்படியான பகுதிகளும், பாறைகளும் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்ட ஆட்சியர்களாக இருந்த சித்திக், அமுதா ஆகியோர் மலை மேல் ஏறிச் சென்றிருக்கிறார்கள். சாலை அமைப்பதற்கான முயற்சிகளும் நடந்துள்ளன. ஆனால், தொடர்ந்து கவனித்து, அதனை அமைத்து தருவதற்கான சூழலும், நேரமும் இம் மக்களுக்கு இன்று வரை அமையவில்லை என்பது பெரும் துயரம்.
* இங்கு பெரும்பாலும் கேழ்வரகு பயிரிடப்படுகிறது. 100 கிலோ கேழ்வரகு மூட்டையை (தலா இரண்டாகக் கட்டி) மேலிருந்து கீழே இறக்க கழுதைக்கு மட்டும் ரூ.250 வரை கூலி கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் கோட்டூர் மலையைச் சேர்ந்த சின்னப்பையன். கேழ்வரகின் சந்தை விலையே சராசரியாக கிலோ ரூ.30 தான் என்கிறார் அவர்.
* இங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கும், பகுதிநேர நியாயவிலைக் கடைக்கும் அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட அத்தனையையும் கழுதை மேல் சுமையாக ஏற்றித்தான் கொண்டு வர வேண்டும். இதற்கான செலவு பெரும்பாலும் பொதுமக்கள் மேல்!
* எங்கள் துயரங்களைப் போக்க வேண்டுமானால், சாலையொன்றை அமைத்துத் தந்தால் போதும். அதைத் தாண்டி நாங்கள் எதையும் கேட்கவில்லை என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த ராமலிங்கம்.
* சம்பூரண கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடந்த 2003-04-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனைக் கட்டடம் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் வரை ஒரேயொரு பெண் மருத்துவர் வந்து சென்று கொண்டிருந்தார். அவரது மாற்றலுக்குப் பிறகு புதிதாக மருத்துவர் நியமிக்கப்படவில்லை.
* குடிநீருக்காக அங்குள்ள பழைமையான கிணறு ஒன்றிலிருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சார இயந்திரம் செயலிழந்தால் ஒரு மாதமாகும் சீரமைக்க. இதற்கான மின்வாரியப் பணியாளரும் இதே கரடுமுரடான பாதையில்தான் ஏறி வர வேண்டும்.
* மகப்பேறு உள்ளிட்ட மருத்துவ வசதி தேவையான எதற்கும் தூளி கட்டி தூக்கிச் செல்வோம். வழியிலேயே இறந்தவர்களும் உண்டு என்கிறார் ஈஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...