தீவுகளான 3 மலைக் கிராமங்கள்!
தருமபுரி மாவட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட தீவுகளைப் போன்று அலகட்டு, கோட்டூர்மலை, ஏரிமலை ஆகிய மூன்று மலைக் கிராமங்கள் காட்சியளிக்கின்றன.


தருமபுரி மாவட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட தீவுகளைப் போன்று அலகட்டு, கோட்டூர்மலை, ஏரிமலை ஆகிய மூன்று மலைக் கிராமங்கள் காட்சியளிக்கின்றன.
வத்தல்மலைக்குகூட சாலை வசதி வந்துவிட்ட சூழலில், பிரிட்டிஷ் காலத்திலிருந்து மக்கள் வசித்து வரும் இந்த மலைக் கிராமங்களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட என்த வசதியும் இன்னும் செய்து தரப்படவில்லை.
தருமபுரி மாவட்ட மலைப் பகுதிகளிலேயே மிகவும் உயரமான மலைப் பகுதியாக இருப்பது அலக்கட்டு, கோட்டூர்மலை, ஏரிமலை ஆகிய கிராமங்கள்தான். கடல் மட்டத்திலிருந்து 1739 அடி உயரத்தில் உள்ளன. இந்த மூன்று கிராமங்களுமே பென்னாகரம் ஒன்றியத்துக்குள்பட்ட வட்டுவனஹள்ளி ஊராட்சியில் வருகின்றன. 24 கிராமங்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் 3 மலைக் கிராமங்களுக்கு வசதிகள் செய்து தருவதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது.
அன்று தொடங்கி இன்று வரை வனத் துறையின் குறுக்கீட்டாலேயே இந்தக் கிராமங்களுக்குத் தேவையானவற்றை செய்ய முடியாத நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முடங்கியுள்ளன.
அலகட்டு கிராமத்தில் 50 வீடுகளும், ஏரிமலை, கோட்டூர் மலையில் தலா 100-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. அலகட்டில் லிங்காயத்துகளே அதிகம் உள்ளனர். ஏரிமலை, கோட்டூர் மலையில் இருளர், குருமன்ஸ், எஸ்சி, எஸ்டி, வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமங்களில் இந்து ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்டவை தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவர்களுக்குத்தான் அரசு எதையும் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.
அலகட்டு மலைக்குச் செல்ல வேண்டும் எனில் பாலக்கோடு ஒன்றியத்துக்குள்பட்ட சீங்காடு கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவு மலைப் பாதையில் செல்ல வேண்டும். செங்குத்தாக உள்ள மலையில் கரடு, முரடான கல்கள், மணல் பாதைகளை கடும் சிரமத்துக்கிடையே கடந்து சென்றால்தான் அலகட்டு கிராமத்தை வந்தடைய முடியும்.
இதேபோல, ஏரிமலை, கோட்டூர் மலைக்குச் செல்ல வேண்டும் எனில் 8 கி.மீ. தொலைவு வரை மலைப் பாதையைக் கடந்து செல்ல வேண்டும்.
கழுதையும், தலைச் சுமையும்: இந்தக் கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தலைச் சுமையாகவும், கழுதைகள் மூலமாகவும் கொண்டு செல்கின்றனர். அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையம், நியாய விலைக் கடைகளுக்குச் செல்லும் பொருள்களும் கழுதைகள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.
இயங்க முடியாத பள்ளிகள்: அலகட்டு கிராமத்தில் தொடக்கப் பள்ளியும், ஏரிமலையில் உயர்நிலைப் பள்ளியும், கோட்டூர்மலையில் நடுலைப் பள்ளியும் இயங்குகின்றன. பெயருக்குத்தான் இவை இயங்குகின்றன. இங்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், சத்துணவு அலுவலர்கள் மலைக்கு வந்து செல்ல வேண்டுமெனில் தினமும் குறைந்தது 8 மணி நேரம் நடக்க வேண்டும். எனவே, வாரம் இரு முறையோ இல்லையெனில், இரு ஆசிரியரில் ஒருவரோ வந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாக உள்ளது. 5 தலைமுறையைக் கடந்த அலகட்டு கிராமத்தில் இப்போதுதான் பசுவராஜ் என்ற மாணவர் பட்டப்படிப்பை தொலைவழிக் கல்வி முறையில் படிக்கத் தொடங்கியுள்ளார். பெரும்பாலான மாணவர்கள் 5ஆம் வகுப்போ, 8ஆம் வகுப்போ முடித்தவுடன் நின்றுவிடுகின்றனர்.
தேவை சாலை வசதி: இந்தக் கிராமங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டுமெனில், முக்கியத் தேவையாக இருப்பது சாலை வசதி. கடந்த 2007ஆம் ஆண்டு பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தில் ரூ.1.14 கோடியில் கோட்டூர்மலை, ஏரிமலை வரை 14 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், வனத் துறை அனுமதியளிக்காததால், நிதி வேறு திட்டத்துக்கு திருப்பப்பட்டது. அலகட்டுக்கு சாலை அமைக்க வேண்டுமெனில், சீங்காடு கிராமத்திலிருந்து கன்னியம்மன் கோயில் வழியாக சத்தியாக்கல் கிராமத்தைக் கடந்து சுமார் 10 கி.மீ. தொலைவு சாலை அமைக்க வேண்டும்.
குடிநீரும் கேள்விக்குறி: இந்தக் கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமும் இல்லை. மலைப் பகுதிகளில் சுனைகளில் வரும் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். கடந்த 3 மாதங்களாக வறட்சியால் ஒரு வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர்கூட கிடைக்காததால், தண்ணீரைத் தேடி அலகட்டு கிராமத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட மலைகளுக்குச் சென்றுவிட்டு இப்போதுதான் திரும்பியுள்ளனர். இந்தக் கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலைப் பாதையில் இரும்புக் குழாய்கள் பதிக்க வனத் துறை அனுமதி மறுப்பதால் அதுவும் நின்றுபோனது.
இதுதொடர்பாக, வட்டுவனஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் என். முருகன் கூறியது:
இந்தக் கிராமங்களுக்கு சாலை அமைத்துக் கொடுத்துவிட்டால் அனைத்து தேவைகளையும் ஊராட்சி திட்டத்திலிருந்தே நிறைவேற்றித் தர முடியும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தயாராக இருந்தும், மத்திய அரசின் வனத் துறையினரது முட்டுக்கட்டையால் இந்தக் கிராமங்கள் முடங்கிப்போயுள்ளன. இவர்களுக்கு எப்படியாவது வருவாய் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இயன்ற பணிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார் அவர்.
பறிபோகும் உயிர்கள்!
உடனடி மருத்துவ உதவி கிடைக்காததால் அலகட்டு கிராமத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். மருத்துவ உதவி வேண்டுமெனில் 18 கி.மீ. தொலைவுள்ள பெல்ராம்பட்டிக்கு வர வேண்டும். இதில், மலைப் பாதையில் 10 கி.மீ. தொலைவுக்கு "டோலி' மூலம் நோயாளியைத் தூக்கி வர வேண்டும். இவ்வாறு டோலியில் தூக்கி வந்தவர்களில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 5 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறுகின்றனர் அலகட்டு கிராமத்தினர். இதே நிலைதான் கோட்டூர்மலை, ஏரிமலைக் கிராமங்களிலும் உள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக தூக்கி வரப்படும் நபர்கள் மலைப் பாதையில் வரும் வழியிலேயே உயிரை விடும் நிலை தொடர்கிறது
வனத் துறை வழிவிடுமா?
இந்த மலைக் கிராம மக்களுக்கு மருத்துவம், கல்வி, குடிநீர், ரேஷன் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டுமெனில் சாலை வசதி மட்டுமே சரியான தீர்வு. சாலை வந்துவிட்டால் அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தக் கிராமங்களுக்கு எளிதில் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், வனத்துறை அனுமதி அளித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்பி-க்கள் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி வனத் துறை அனுமதியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...