/

கால்வாய் பாசனத்துக்கும் மேட்டூர் திறப்பு இல்லை

சேலம், ஜூலை 31: மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்தைத் தொடர்ந்து கிழக்கு, மேற்குக் கரை கால்வாய்களிலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 45,00

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:19 pm

க. தங்கராஜா

சேலம், ஜூலை 31: மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்தைத் தொடர்ந்து கிழக்கு, மேற்குக் கரை கால்வாய்களிலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால், மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 45,000 ஏக்கர் நிலங்களில் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

தமிழகத்தின் 11 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்துக்கு தண்ணீர் வழங்கும் மேட்டூர் அணை, ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டு, ஜனவரி 28-ம் தேதி மூடப்படும்.

அணையின் 78 ஆண்டு கால வரலாற்றில் கடந்த ஆண்டில் முன் கூட்டியே பாசனத்துக்கு  தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்ட நிலையிலும் அணை திறப்புக்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையே உள்ளது.

கவலை அளிக்கும் வகையில் நீர்வரத்து: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு கடந்த சில மாதங்களாகவே நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடிக்கும் குறைவாக உள்ளது.

அணை திறக்கப்படாத நிலையிலும் பவானி, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக கடந்த 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சுமார் 400 கன அடி வீதம் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவ மழையை நம்பி இனி பலனில்லை என்ற நிலையில், வட கிழக்குப் பருவ மழைக்காக வரும் அக்டோபர் மாதம் வரையிலும் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஆனால், அதற்குள் நீர்மட்டம் 50 அடிக்கும் குறைந்து, அடுத்த ஆண்டின் வேளாண் உற்பத்தியையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

டெல்டா விவசாயிகளின் நிலை இப்படி இருக்க, மேட்டூர் அணையை நம்பியுள்ள சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கிழக்கு, மேற்கு கால்வாய் விவசாயிகளின் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்டாவுக்கு தண்ணீர் செல்லும் அதே நேரத்தில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படும்.

கால்வாய் பாசனத்துக்கு 10 டி.எம்.சி. தேவை: வினாடிக்கு 1,000 கன அடி வீதம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 137 நாள்களுக்கு மொத்தம் 9.60 டி.எம்.சி. நீர் கால்வாயில் திறக்கப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீர் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

அடுத்த பருவ மழை வரும் வரையிலுமோ அல்லது கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வரும் வரையிலுமோ மேட்டூரில் இருக்கும் 36 டி.எம்.சி.யில் இருந்துதான் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய முடியும்.

இந்த நிலையில், கால்வாய் பாசனத்துக்கு தேவைப்படும் 10 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அரசு திறக்க உத்தரவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், டெல்டா விவசாயிகளுடன் சேர்த்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட கால்வாய் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

50 டி.எம்.சி. தண்ணீரை வழங்குமா கர்நாடகம்?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடகம் ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதியில் இருந்து மே 31-ம் தேதி வரை 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இதன்படி ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஜூலை 31-ம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) மாலை நிலவரப்படி 3.30 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. அதன்படி, இன்னும் 50 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும். கடந்த 10 நாள்களாக கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால், அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து நல்ல நிலையில் உள்ளது.

64 அடி மொத்த உயரம் கொண்ட கபினி அணையில் இப்போது 56 அடிக்கு தண்ணீர் உள்ளது. 129 அடி உயரம் கொண்ட ஹேரங்கியில் 123 அடிக்கும், 117 அடி உயரம் கொண்ட ஹேமாவதியில் 91 அடிக்கும் தண்ணீர் இருப்பு உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் (கிருஷ்ணராஜ சாகர்) மட்டும் சற்றுக் குறைவாக அதாவது, 124 அடி உயரத்தில் 76 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் கே.ஆர்.எஸ்., ஹேமாவதி ஆகியவற்றில் தலா 4,000 கன அடி தண்ணீரும், கபினியில் 3,400, ஹேரங்கியில் 2,800 கன அடி வீதமும் தண்ணீர் வரத்து உள்ளது. கர்நாடக அரசு இந்தப் புள்ளி விவரத்தை தெரிவித்தாலும், உண்மையான நீர்வரத்து இதைக் காட்டிலும் கூடுதலாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.