ராணுவ "கேன்டீன்' இல்லாத மாவட்டம்
தருமபுரி, நவ. 27: தருமபுரியில் படைவீரர்கள் பயன்படுத்தும் ராணுவ "கேன்டீன்' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்புவரை ராணுவத்


தருமபுரி, நவ. 27: தருமபுரியில் படைவீரர்கள் பயன்படுத்தும் ராணுவ "கேன்டீன்' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்புவரை ராணுவத்தில் அதிகம் சேருவோர் பட்டியலில் 2-வது இடம் பிடித்து வந்தது தருமபுரி மாவட்டம். அத்தகைய பெருமைப்பெற்ற இம்மாவட்டத்தில் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர்கள் சுமார் 1900 பேர் உள்ளனர்.
ஆனால், முன்னாள் படைவீரர்களுக்கான நல அலுவலகம், பண்டகசாலை (கேன்டீன்), ஜவான் பவன், சமுதாயக்கூடம், போரில் உயிரிழந்தவர்களின் நினைவகம் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இங்கு இல்லை.
இங்கிருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள், தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் நகரங்களில் உள்ள பண்டகசாலைகளுக்கு சென்று வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் எல்லைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள், கிருஷ்ணகிரிக்குச் செல்ல வேண்டுமெனில் 75 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரியிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இருப்பதால் அங்குள்ள பண்டகசாலையில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். சேலத்தில் 2 கேன்டீன்கள் இருந்தாலும் அங்கும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், தருமபுரியில் உள்ள சில முன்னாள் ராணுவ வீரர்கள் பெங்களூர் செல்கின்றனர்.
தருமபுரில் முன்னாள் படைவீரர்களுக்காக பண்டகசாலை அமைத்தால், இங்குள்ள ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள். கிருஷ்ணகிரியிலும் கூட்டம் குறைந்து அங்குள்ளவர்களும் நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள் என்கின்றனர் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர்கள்.
"தமிழக அரசின் கணக்குப்படி தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,900 முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். இங்கு பண்டகசாலை வசதி இல்லாததால் 900-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், பெங்களூரில் பதிவு செய்துள்ளனர். எங்களது சங்கம் எடுத்துள்ள கணக்குப்படி தருமபுரி மாவட்டத்தில் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், இங்கு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது எனக் காரணம் காட்டி பண்டகசாலையை அமைக்க ராணுவ அதிகாரிகள் மறுக்கின்றனர். மாநில அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி தருமபுரியில் பண்டகசாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் தமிழ்நாடு முன்னாள் தரை, கடல், வான் படைவீரர்கள் சங்கத்தின் (எஸ்ஸô) மாநிலப் பொதுச்செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி.
"தருமபுரி மாவட்டத்தைவிட, நாமக்கல் மாவட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் தான்
முன்னாள் ராணுவத்தினர் (1,200 பேர்) உள்ளனர்.
ஆனால் அங்கு ஜவான் பவன், பண்டகசாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தருமபுரியில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களின் குறைகளைக் களைய பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம்' என்கிறார் எஸ்ஸô மாநிலத் தலைவர் ஜி.நாகராசன்.
"கிருஷ்ணகிரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் இருப்பதால் பண்டகசாலையில் கூட்டம் அதிகமாக உள்ளது.
தருமபுரியில் ஒரு பண்டகசாலை அமைத்தால் கிருஷ்ணகிரியில் கூட்டம் குறையும். முன்னாள் படை வீரர்களுக்கான கேன்டீன் அமைப்பது மத்திய பாதுகாப்புத்துறையின் பணி. தருமபுரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் கொடுக்கும் மனுக்களை 4 மாதங்களுக்கு ஒருமுறை, ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து வருகிறோம். ஆனால், கேன்டீன் அமைக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் பேர் இருக்க வேண்டும் என ராணுவ உயர்அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர். முன்னாள் படை வீரர்களுக்கான கேன்டீனை, தருமபுரி மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்புடன் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறைக்கு கடிதம் அனுப்பிவருகிறோம்' என்கிறார் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கான முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் மேஜர் முத்துராமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...