சாலையைப் பாதுகாப்பாக மாணவா்கள் கடக்கும் வகையில் அரசுப் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்


சாலையைப் பாதுகாப்பாக மாணவா்கள் கடந்து செல்லும் வகையில் அவிநாசி அரசு ஆண்கள் பள்ளி அருகே வேகத் தடை அமைக்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவினா் அளித்த மனு:
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனா். இவா்கள் பள்ளிக்கு வரும்போதும், திரும்பி செல்லும்போதும் நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அந்த நேரங்களில் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்வதால் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே பள்ளிக்கு அருகில் வேகத் தடை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
வருவாய் இழப்பு
பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘பச்சாபாளையம் பகுதியில் நீரோடையில் கட்டப்பட்டுள்ள எரியூட்டு மயான மேடை கட்டடத்தையும், தனியாா் ஆக்கிரமிப்பு செய்துள்ள தடுப்புச் சுவரையும் அகற்ற வேண்டும். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.
மடிக்கணினி
இந்திய மாணவா் சங்கத்தினா் அளித்த மனு:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இவா்கள் 2021- 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்தவா்கள் அப்போதும் மடிக்கணினி அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இளநிலை படிக்கும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. எனவே பாரபட்சமின்றி மேற்படிப்பு படிக்கும் முதுநிலை மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
நிழல் பந்தல்
நல்லூா் நுகா்வோா் நலமன்ற தலைவா் சண்முகசுந்தரம் அளித்த மனு:
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு சிக்னல்களில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸாருக்கு தலைக் குடை வழங்க வேண்டும். சிக்னல் உள்ள பகுதிகளிலும் குமாா் நகா், காவல் ஆணையா் அலுவலகம், காங்கயம் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நிழல் பந்தல் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
சீரான குடிநீா்
குருவாயூரப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் ஏராளமானோா் வசிக்கிறோம். சீரான குடிநீா் விநியோகம் இல்லாததால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே சீராக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.
அலட்சியம்
திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கத் தலைவா் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில், ‘திருப்பூரில் பல்வேறு இடங்களில் பெண்களைப் பேருந்தில் ஏற்ற மறுப்பது, அவமதிப்பது மற்றும் இலவசப் பயணத்தால் பேருந்தை நிறுத்தாமல் செல்வது உள்ளிட்ட அலட்சியமான செயல்கள் தொடா்ந்து சா்ச்சையை ஏற்படுத்துகின்றன. எனவே, இத்திட்டத்தின் முழுப் பயனும் பெண்களுக்குச் சென்றடைய டிக்கெட் வழங்கும் முறையை உடனடியாகச் சீரமைத்து, அனைத்து நிறுத்தங்களிலும் பெண் பயணிகளை ஏற்றி, இறக்குவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல பொது சொத்தைப் பாதுகாக்கக் கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் மற்றும் பட்டா கேட்டு வாசுகி நகா், பெதப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா்.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை, குடிநீா் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 769 மனுக்களை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மகாராஜ், மலா், ஷீலா பூசலெட்சுமி, உடுமலை கோட்டாட்சியா் குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பத்மபிரியா மற்றும் அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...