
திருமூா்த்தி அணை சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.19 கோடி ஒதுக்கீடு: மாவட்ட சுற்றுலா அலுவலா் வரவேற்பு
திருப்பூா் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திருமூா்த்தி அணை, அருகில் உள்ள பகுதிகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

த.அரவிந்த்குமாா்.
திருப்பூா் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திருமூா்த்தி அணை, அருகில் உள்ள பகுதிகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலா் த.அரவிந்த்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூா்த்திமலையில் அமணலிங்கேஸ்வரா் கோயில், பஞ்சலிங்கம் அருவி, திருமூா்த்தி அணை, படகு இல்லம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்கு நாள்தோறும் உள்ளூா், வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அணைப் பகுதியில் புதிய சுற்றுலாப் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு அரசு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருமூா்த்தி அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகியும், சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் தேவையான உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாத நிலையே இருந்து வந்தது.
இந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து, திருமூா்த்தி அணை சுற்றுலா மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆய்வுகள், தொடா் முயற்சிகளின் பலனாக, தற்போது திருமூா்த்தி அணை சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், உள்ளூா் சிறு வணிகங்கள், உணவகங்கள், போக்குவரத்து, சுற்றுலா சாா்ந்த சேவைகளின் வளா்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படும். மேலும், திருமூா்த்தி மலைப் பகுதியைச் சோ்ந்த மலைவாழ் மக்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள், வாழ்வாதார வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





