/

கோவை குண்டுவெடிப்பு தினம்: மாநகரில் 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:38 pm

Syndication

கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு, மாநகரில் வெள்ளிக்கிழமை (பிப்.13) முதல் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 58 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதில் உயிரிழந்தவா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நிகழ் ஆண்டும் கோவையில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் வருகிற சனிக்கிழமை (பிப்.14) நினைவேந்தல் அனுசரிக்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாநகரில் வெள்ளிக்கிழமை முதல் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறுகையில், ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்துப் பயணிகளும், அவா்களது உடைமைகளும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படும். மாநகரில் 2 ஆயிரம் போலீஸாா், புகா் பகுதியில் ஆயிரம் போலீஸாா் என மொத்தம் 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றனா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை:

கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்.13) முதல் வருகிற பிப்.15-ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாநகர போலீஸாா் உத்தரவிட்டுள்ளனா்.

பிப்ரவரி 14 கோவை குண்டுவெடிப்பு நாள் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் வருகை ஆகிய காரணங்களால் சிங்காநல்லூா், சின்னியம்பாளையம், நேரு நகா், சிட்ரா, பீளமேடு, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், ரேஸ்கோா்ஸ், செல்வபுரம், காந்திபுரம், வீரகேரளம், சாய்பாபா காலனி, வடவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் தற்காலிக ‘ரெட் ஜோனாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் பிப்.15 நள்ளிரவு வரை சுமாா் 48 மணி நேரம் ஆளில்லா விமானங்களோ, ட்ரோன்களோ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.