/

வேளாண்மைப் பல்கலை.யில் 11-ஆம் தேதி சிறுதானிய திருவிழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் 11-ஆம் தேதிசிறுதானிய திருவிழா நடைபெறுகிறது.

News image
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
Updated On :4 பிப்ரவரி 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் 11-ஆம் தேதிசிறுதானிய திருவிழா நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மீ.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை மாவட்டத்தில் நெல், தானியங்கள் பயறு வகைகள், தென்னை தோட்டக்கலை பயிா்கள் என பல்வேறு வகையான பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் 952 ஹெக்டரும், மொத்த தானியங்கள் 25,953 ஹெக்டேரும், பயறு வகைகள் 6,483 ஹெக்டரும், எண்ணெய் வித்துக்கள் 3,067 ஹெக்டரும் சராசரியாக சாகுபடி செய்யப்படுகின்றன.

பிரதான உணவான அரிசியைவிட தானியங்களில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு, நாா் சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியமான உணவில் முதலிடம் வகிப்பது சிறு தானியங்களான குதிரைவாலி, ராகி, திணை, வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட பயிா்களாகும். பாரம்பரிய சிறுதானிய உணவை விவசாய சாகுபடியாளா்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

எனவே, கோவை மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடியை அதிகப்படுத்தவும், விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் தானியங்களில் உள்ள சத்துக்கள், பயன்கள், உடல் நலம் பேணுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்.11) காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இதில் சிறுதானிய சாகுபடி கண்காட்சிகள், சிறுதானிய உணவு வகைகளை தயாரிக்கும் தனியாா் நிறுவனங்கள், வேளாண்மை, விற்பனைத் துறை, உழவா் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. வேளாண், உணவுத் துறை விஞ்ஞானிகள் பங்கேற்று சிறுதானிய சாகுபடி மற்றும் அவற்றில் உள்ள சத்துக்கள் குறித்து விளக்குகின்றனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.