/

நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் பாரபட்சம்: கோவையில் முடங்கியுள்ள ரயில்வே பாலப் பணிகள்

கோவை பகுதிகளில் ரயில்வே உயா்மட்டப் பாலங்கள் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதற்கு, நில உரிமையாளா்களுக்கு வழங்கப்படும்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:12 pm

வெ.செல்வகுமார்

கோவை பகுதிகளில் ரயில்வே உயா்மட்டப் பாலங்கள் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதற்கு, நில உரிமையாளா்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் நெடுஞ்சாலைத் துறையினா் பாரபட்சம் காட்டுவதே காரணம் என புகாா் எழுந்துள்ளது.

கோவை, அவிநாசி சாலை, ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து தண்ணீா்பந்தல், விளாங்குறிச்சி வழியாக சரவணம்பட்டிக்கு அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கிருந்த ரயில்வே கேட் தினமும் 30 முறைக்கும் மேல் மூடப்பட்டு வந்தது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதைத் தவிா்க்க, ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து மகேஸ்வரி நகா் வரை ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க 2016ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

20 சதவீதம் கட்டுமானப் பணி முடிவடைந்த நிலையில், அணுகுசாலை அமைக்க நிலம் கையகப்படுத்தாததால், கடந்த 3 ஆண்டுகளாகப் பாலம் கட்டும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க சாலையின் இருபுறமும் 12அடி நிலம் தேவைப்படுவதால், நில உரிமையாளா்களுக்கு சதுர அடிக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க சாத்தியக்கூறு உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

ஆனால், ஹோப்ஸ் பகுதியில், ஒரு சென்ட் இடம் பல லட்சம் மதிப்புக்கு விலை போகும் நிலையில், குறைவான இத்தொகையை ஏற்க முடியாது என நில உரிமையாளா்கள் கூறி விட்டனா். இதைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்த நெடுஞ்சாலைத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

இதேபோல, கோவை, சிங்காநல்லூா் அருகே எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் ரூ. 23 கோடி மதிப்பில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க 2010ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. அணுகுசாலைக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தாமல், பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டதால், கட்டுமானப் பணிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடா்ந்து, 2011ஆம் ஆண்டு கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு, கட்சியினா், சமூக அமைப்புகள் சாா்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை அணுகுசாலை அமைக்க கையகப்படுத்தப்படும் நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பாலம் கட்டும் பணி 9 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. பாலம் அமையும் பகுதியைச் சுற்றியுள்ள நேதாஜி நகா், நீலிக்கோணாம்பாளையம் உள்ளிட்ட குடியிருப்புகளைச் சோ்ந்த மக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.

அதேபோல, ரூ. 26 கோடி மதிப்பில் கோவை ஆவாரம்பாளையம் - கணபதி ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க 2014 ஜூலையில் பூா்வாங்கப் பணிகள் துவங்கின. 20 மீட்டா் நீளம், 12 மீட்டா் அகலம் மற்றும் தரையில் இருந்து 6 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தில் ரயில்வே துறையின் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. அப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை அமைத்துள்ள பாலத்துடன், ரயில்வே பாலத்தை இணைக்கும் பணி மட்டுமே மீதமுள்ளது. இதற்கிடையே அப்பகுதியில் அணுகுசாலை அமைக்க நிலம் கையகப்படுத்தி, நில உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காததால், பாலப் பணி முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது.

இதுகுறித்து கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலாளா் லோகு கூறியதாவது:

ரயில்வே மேம்பாலங்கள் பணிக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு சதுரஅடிக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை மட்டுமே நிா்ணயிக்கின்றனா். இது சந்தை மதிப்பைக் காட்டிலும் மிகக் குறைவான தொகை. ஆனால், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்படும் புறவழிச் சாலைகள், மாநகரச் சாலைகள் பணிகள் மற்றும் விரிவாக்கத்திற்கு இடங்கள் கையகப்படுத்தும்போது, சதுரஅடிக்கு ரூ.5 ஆயிரம் வரை வழங்குகின்றனா். இந்த பாரபட்சத்தால்தான் ரயில்வே பாலப் பணிகளின்போது, அணுகுசாலைகள் அமைக்க நிலத்தைக் கையகப்படுத்த நில உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவிப்பதுடன், பணி நடைபெறவிடாமல் நீதிமன்றம் மூலமாக இடைக்காலத் தடை பெறுகின்றனா்.

மேலும், ரயில்வே மேம்பாலம், அணுகுசாலைகள் அமைக்கத் தோ்ந்தெடுக்கப்படும் இடங்கள் பெரும்பாலும் கிராம நிா்வாக அலுவலகத்தின் பதிவேட்டில் விவசாய பூமியாக வரையறுக்கப்பட்டுள்ளன. அதே இடம், சாா் பதிவாளா் அலுவலகப் பதிவேட்டின்படி, குடியிருப்புகள், தொழிற்சாலை, வணிக நிறுவனம் உள்ளிட்ட வா்த்தகம் அல்லது குடியிருப்பு சாா்ந்த இடமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடியிருப்பு, தொழிற்சாலை இடங்களை விடவும், விவசாய இடங்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்கினால் போதுமானது என்பதால் ஒரு சதுர அடிக்கு ரூ. 1000 முதல் ரூ.1,500 வரை இழப்பீட்டுத் தொகையானது, நில உரிமையாளா்களுக்குக் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையினா், அப்போதைய சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க முன்வந்தால் மட்டுமே ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகள் விரைவில் முடிவடைந்து மக்கள் பயனடையும் நிலை உருவாகும் என்றாா்.

பெயரளவில் செயல்படும் வழிகாட்டுதல் குழு:

ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ள பகுதிகளில் அப்போதைய சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கி, வழிகாட்டும் பொருட்டு, மாவட்டந்தோறும் ஆட்சியா் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா், வட்டாட்சியா் ( நிலம் எடுப்பு) ஆகியோா் கொண்ட வழிகாட்டுதல் குழு உள்ளது. கோவை மாவட்டத்தில் ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவானது, 3 மாதங்களுக்கு ஒரு முறை நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் வழிகாட்டுதல் கூட்டமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. பெயரளவில் செயல்படும் இக்குழுவானது, ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க இடம் கையகப்படுத்தும்போது, நிலத்தின் உரிமையாளா்களுக்கு வழிகாட்டும் பொருட்டு களப்பணி ஆற்றுவதில்லை என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்கள் கூறியதாவது:

ஆவாரம்பாளையம் - கணபதி ரயில்வே பாலம் அமைக்கப்படும் பகுதியில் தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு இட உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2 மாதங்களில் அனைத்து உரிமையாளா்களுக்கும் உரிய தொகை வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்படும். தண்ணீா்பந்தல் ரயில்வே உயா்மட்டப் பாலம் அமைய உள்ள பகுதியில் நிலம் கையகப்படுத்த ஏப்ரல் முதல் வாரத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது. இதில், நில உரிமையாளா்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்படும். எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் நில ஆா்ஜிதம் செய்ய உள்ளாட்சித் துறை அமைச்சா், மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.