கோவை, சின்னத்தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் தொழிற்சாலைகள் அனுமதியில்லாமல் இயங்கி வருவதாகத் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.
கோவையை அடுத்த சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், வீரபாண்டி, பன்னிமடை பகுதிகளில் 200-க்கும் அதிகமான செங்கல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் செங்கல் தொழிற்சாலைகள் செங்கல் உற்பத்திக்குத் தேவையான மண்ணை பட்டா நிலங்கள், பூமிதான நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், பஞ்சமி நிலங்களில் வெட்டி எடுத்து வருகின்றன. விளைநிலங்கள், நீர்நிலைகளிலும் மண்வளம் சுரண்டப்பட்டு வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. மண் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களால் எழும் புகையால் இப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு வருவதால், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னத்தடாகம் உள்பட அதனையொட்டியுள்ள 5 ஊராட்சிகளிலும் செயல்பட்டு வரும் செங்கல் தொழிற்சாலைகள் அனுமதியில்லாமல் இயங்கி வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தவிர, சின்னத்தடாகம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மனு அளித்துள்ளார்.
அதில், வனத்தினை ஒட்டியுள்ள பகுதிகளில் 3 முதல் 8 மீட்டர் வரை மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால் மலையடிவாரங்களில் தொடர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர முடியாத நிலையில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. தவிர, இடம் பெயரும்போது பள்ளங்களில் விழுந்து காயம் ஏற்படுவதும், உயிரிழப்பும் ஏற்படுகிறது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவும் யானை உள்பட வன விலங்குகளால் மனித - வன விலங்கு மோதல்களும் அதிகரிக்கின்றன. இதனால், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் தொழிற்சாலைகள், கூடுதல் ஆழத்தில் மண் எடுக்கும் தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சின்னத்தடாகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சு.கணேஷ் கூறியதாவது:
சின்னத்தடாகம், வீரபாண்டி உள்பட 5 கிராமங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. 600 டிப்பர் லாரிகளில் நாளொன்றுக்கு 8 ஆயிரத்து 400 லோடு வரை மண் எடுக்கின்றனர். பட்டா நிலம் மட்டுமின்றி அரசு புறம்போக்கு நிலங்கள், விளைநிலங்கள், விவசாய நிலங்களிலும் எடுத்து வருகின்றனர். மண் எடுத்து செல்லும் கனரக வானகங்கள் அசுர வேகத்தில் செல்வதால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகிறது.
செங்கல் உற்பத்தியின்போது கருவிகளில் மண் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க சோப்பு ஆயில் போன்ற ரசாயன கலவைகள், செங்கல்லை வேக வைக்க ரப்பர், தரமற்ற நிலக்கரி போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் ஏற்படும் புகை மாசு, ஆஸ்துமா உள்பட சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. கனிமவள விதிப்படி அனுமதி பெற்ற அரசு நிலங்களாக இருந்தாலும், பட்டா இருந்தாலும் 3 அடி ஆழத்துக்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும், கனரக வாகனங்களைப் பயன்படுத்த கூடாது, மற்ற நிலங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் மண் எடுக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. இதனால் நீர்வளம், கனிம வளம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயமும் முடங்கிப்போயுள்ளது.
செங்கல் தொழிற்சாலைகள் வருவாய், கனிம வளம், வனத் துறை, உள்ளூர் திட்டக்குழுமம், வேளாண் உள்பட 17 துறைகளில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள தொழிற்சாலைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, அனுமதியில்லாமல் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத் தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் மலைதளப் பாதுகாப்புப் பகுதியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருந்தும், கனிம வளம் சுரண்டல் இங்கு தாராளமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த் துறை, மாவட்ட ஆட்சியர் உள்பட அனைவரிடமும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்காகப் போராடுபவர்களை செங்கல் தொழிற்சாலை அதிபர்கள் இணைந்து மிரட்டும் நிலையே காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் இப்பகுதி மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நிலைக்கு மாறிவிடும். அதற்கு முன் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், கனிம வளக் கொள்ளை நடந்த தடாகம் பகுதியில் சென்னையிலிருந்து அரசு அதிகாரிகள் கொண்ட குழு வந்து ஆய்வு நடத்த இருப்பதாக வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை நஞ்சுண்டாபுரத்தில் செங்கல் சூளை உரிமையாளர்களுடன் கோவை வடக்கு கோட்டாட்சியர் சுரேஷ், பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி மணி உட்பட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கல் சூளை உரிமையாளர்கள் மத்தியில் பேசிய கோட்டாட்சியர், "தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மண் எடுக்கப்பட்ட இடம் கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தடாகம் பகுதியை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து அதிகாரிகள் குழு விரைவில் கோவைக்கு வருகிறது. எந்தெந்த இடங்களில் அதிக அளவு மண் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். பல்வேறு இடங்களில் அதிகப்படியான அளவில் மண் எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கிடைத்துள்ளன' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

