/

கோவையில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பட்டுப்புழு முட்டைகள் பாதுகாப்பு மையம்

கோவை சின்னவேடம்பட்டியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பட்டுப்புழு முட்டைகள் பாதுகாப்பு மையம்

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:00 am

ம.முனுசாமி

கோவை சின்னவேடம்பட்டியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பட்டுப்புழு முட்டைகள் பாதுகாப்பு மையம்  அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் இளம்புழு வளர்ப்பவர்கள் முட்டைக்காக ஒசூர், கிருஷ்ணகிரி செல்ல வேண்டியதில்லை என பட்டு வளர்ச்சித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேனி, ஈரோடு உள்பட 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 3.5 லட்சம் முதல் 4 லட்சம் கிலோ பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பட்டுக்கூடுகள் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. பட்டுக்கூடு உற்பத்தி ஒரு சங்கிலி தொடரமைப்பு போன்றது. விதைக்கூடு உற்பத்திக்குத் தேவையான முட்டைகளை விவசாயிகளுக்கு பட்டு வளர்ச்சித் துறையினர் வழங்குகின்றனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைக் கூடுகளை பட்டு வளர்ச்சித் துறை கொள்முதல் செய்கிறது. இந்த விதைக் கூடுகள் கோவை, கிருஷ்ணகிரி, ஒசூரில் உள்ள அரசு முட்டை உற்பத்தி மையத்தில் வைத்து வளர்க்கப்படும்.
இதில் இருந்து பட்டுக்கூடு உற்பத்திக்குத் தேவையான முட்டைகள் உற்பத்தி செய்யப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பட்டுப்புழு முட்டைகள் பாதுகாப்பு மையத்தில் வைத்து பாதுகாக்கப்படும். 
இங்கு பாதுகாக்கப்படும் முட்டைகள் இளம்புழு வளர்ப்பு மனைகளுக்கு வழங்கப்படும். முட்டைகள் 6 மாதம், 9 மாதம் மற்றும் ஓராண்டு என மூன்று நிலைகளில் பாதுகாத்து வழங்கப்படுகின்றன.
இளம்புழு வளர்ப்பு மனைகளில் முட்டைகளைப் பொரித்து அதில் இருந்து வெளிவரும் புழுக்களை 7 நாள்கள் வரை வளர்த்து பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இளம் புழுக்களாக வழங்குவர். 
இளம் புழுக்களை விவசாயிகள் 21 நாள்கள் வளர்த்து பட்டுக் கூடுகளாக உற்பத்தி செய்கின்றனர். 28 நாள்கள் சுழற்சியில் கூடுகளை அறுவடை செய்து அரசு கொள்முதல் மையம் அல்லது பட்டுநூற்பு ஆலைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் மட்டுமே பட்டுப்புழு முட்டைகள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் பட்டுப்புழு முட்டைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படுகிறது.
இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி உள்பட தென் மாவட்டங்களில் இளம்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தேவையான முட்டைகள் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், முட்டைகளுக்கான தட்டுப்பாடும் குறைந்து, கூடு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக கோவை பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் முருகானந்தம் கூறியதாவது:  
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய இரு இடங்களில் மட்டுமே முட்டை பாதுகாப்பு மையம் செயல்படுவதால் மேற்கு, தென் மாவட்டங்களில் இளம்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒவ்வொரு முறையும் முட்டைக்காக ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் வீண் அலைச்சல், நேர விரயம்,  கூடுதல் செலவு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. 
குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் திண்டுக்கல் உள்பட மேற்கு மாவட்டங்களில் பட்டுக்கூடு உற்பத்தி அதிகமாக உள்ளது. 
எனவே மேற்கு மாவட்டங்களில் பட்டுப்புழு முட்டைகள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் பட்டுப்புழு முட்டைகள் பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 
இதற்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 6 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும். இந்த மையத்தின் மூலம் 4 லட்சம் முட்டைகள் வரை பாதுகாக்க முடியும். இதனால் பட்டுப் புழு முட்டைகளுக்குத் தட்டுப்பாடு குறைவதுடன் மேற்கு மாவட்டங்களில் பட்டுக் கூடுகள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.