தள்ளிப் போகும் பருவ மழை: கோவையில் வறண்ட குளங்கள்
தமிழகத்தில் தள்ளிப் போகும் தென்மேற்குப் பருவ மழையால், கடந்த ஆண்டு நிரம்பி வழிந்த குளங்கள் தற்போது வறண்டு மழைக்காக காத்திருக்கின்றன.


தமிழகத்தில் தள்ளிப் போகும் தென்மேற்குப் பருவ மழையால், கடந்த ஆண்டு நிரம்பி வழிந்த குளங்கள் தற்போது வறண்டு மழைக்காக காத்திருக்கின்றன.
கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கோவை, திருப்பூர் உள்பட 4 மாவட்டங்களை கடக்கும் நொய்யல் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு உக்குளம், புதுக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, பேரூர் பெரியகுளம், செங்குளம் உள்ளிட்ட 25 குளங்கள் கோவை மாவட்டத்தில் உள்ளன.
மாவட்டத்தின் வேளாண் சாகுபடிக்கும், நிலத்தடி நீருக்கும் மலையடிவாரத்தில் தொடங்கி சூலூர் வரையில் உள்ள குளங்களே ஆதாரமாக உள்ளன. ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் சிறு, சிறு ஓடைகள் மூலமாக நொய்யலில் கலந்து, நொய்யல் வழியாக குளங்கள் நிரம்புகின்றன. பருவ மழையில் நிரம்பும் குளங்கள், கோடை மழையின்போது உயிர்ப்பித்துக் கொண்டு அடுத்த பருவ மழையில் மீண்டும் நிறைந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் இருக்கும்.
ஆனால், தற்போது பேரூர் பெரியகுளம், வெள்ளலூர் குளம், கோளராம்பதி குளம், புதுக்குளம், கங்கநாராயணன் சமுத்திரம், சொட்டையாண்டிக் குட்டை உள்பட 10 க்கும் மேற்பட்ட குளங்களில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு காட்சியளிக்கின்றன.
உக்குளம், குறிச்சிக் குளம் உள்பட ஒரு சில குளங்களில் கடந்த ஆண்டு பருவ மழையின்போது தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரே தற்போதும் உள்ளது.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் தென்மேற்கு மழையின் தீவிரத்தால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிந்தன.
பருவ மழை தள்ளிப்போவதால் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. குளங்கள் வறண்டதால் கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு கடல்போல் காட்சியளித்த குளங்கள் தற்போது வறண்டு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இது தொடர்பாக நொய்யல் பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (பொதுப் பணித் துறை - நீர்வள ஆதாரம்) சே.க.ஜெயபிரகாஷ் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 25 முறைசார்ந்த குளங்கள், 7 முறைசாரா குளங்கள் உள்ளன. இதில் 8 குளங்களை மாநகராட்சி குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது. முறைசார்ந்த 25 குளங்களுக்கும் நொய்யல் ஆற்றில் இருந்து சித்திரைச்சாவடி வாய்க்கால், குனியமுத்தூர் வாய்க்கால், சேத்துமா வாய்க்கால், குறிச்சி வாய்க்கால் மற்றும் வெள்ளலூர் ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டுச் சென்று தேக்கி வைக்கப்படுகிறது.
பருவ மழை இல்லாததால் கடந்தாண்டு நூறு சதவீதம் தண்ணீர் இருந்த குளங்கள் தற்போது ஒரு சொட்டுக் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் மழைப்பொழிவே குளங்களுக்கு ஆதாரமாக உள்ளன. தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழைப் பொழிவு இல்லாமல் குளங்கள் வறண்டுள்ளன.
பருவ மழையை எதிர்பார்த்து குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்நிலையில், தென்மேற்குப் பருவ மழை தள்ளிப்போகும் என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது மக்களுக்கும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப.ராமநாதன் கூறியதாவது: தென்மேற்குப் பருவ மழை ஜூன் 8 ஆம் தேதி கேரளத்தில் தொடங்கியது. பருவ மழை தொடங்கியதும் தொடர்ந்து மழை கிடைக்கும்.
ஆனால், நடப்பு ஆண்டில் பருவ மழையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை என்பது சராசரியாக 42.8 மி.மீ. இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு 54 மி.மீ. மழை பதிவானது. ஆனால், நடப்பு ஆண்டில் இதுவரை 10 மி.மீ. மட்டுமே கிடைத்துள்ளது.
ஜூன் இறுதியில் அரபிக் கடலில் தாழ்வழுத்தம் உருவாகி அதன்மூலம் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 15 ஆம் தேதிக்குப்பின் பருவ மழை தீவிரமெடுத்து ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தொடர்மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் சராசரியாக கணிக்கப்பட்டுள்ள 210 மி.மீ. மழைப் பொழிவு கிடைக்கும் என்றார்.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் 100 சதவீதம் கொள்ளளவுடன் இருந்த முக்கியமான குளங்களில் தற்போதைய தண்ணீர் இருப்பு நிலை
உக்குளம்
கொள்ளளவு .........24.42 மில்லியன் கன அடி
இருப்பு .........12.21 மில்லியன் கன அடி.
நரசம்பதி குளம்
கொள்ளளவு .........9.5 மி. கன அடி
இருப்பு ......... 2.8 மி.கன அடி
பேரூர் பெரியகுளம்
கொள்ளளவு .........51.94 மி.கன அடி
இருப்பு ......... 12 மி.கன அடி
குனியமுத்தூர் செங்குளம்
கொள்ளளவு ......... 30.57 மி.கன அடி
இருப்பு ......... 3 மி.கன அடி
குறிச்சி குளம்
கொள்ளளவு ......... 60 மி.கன அடி
இருப்பு ......... 24 மி.கன அடி
வெள்ளலூர் குளம்
கொள்ளளவு .........15 மி.கன அடி
இருப்பு ......... 3 மி.கன அடி
மேலும், கடந்த ஆண்டு முழு கொள்ளளவுடன் காட்சியளித்த புக்குளம், கோளராம்பதி, கிருஷ்ணாம்பதி, குமாரசாமி, செல்வம்பதி, சொட்டையாண்டிக்குட்டை, கங்கநாராயணன் சமுத்திரம், குனியமுத்தூர் சின்னக்குளம், ஒட்டர்பாளையம் குளம் உள்பட குளங்கள் சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டுபோயிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...