தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கோவையில் 2,530 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள்: முற்றிலும் அகற்ற ரூ.1.50 கோடி நிதி கேட்கிறது மாவட்ட நிர்வாகம்

வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய எதிரியாக உள்ள சீமைக் கருவேல மரங்களை கோவை மாவட்டத்தில் இருந்து முற்றிலும்

Updated On :7 ஜனவரி 2017, 3:10 am

வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய எதிரியாக உள்ள சீமைக் கருவேல மரங்களை கோவை மாவட்டத்தில் இருந்து முற்றிலும் அழிப்பதற்கு ரூ.1.50 கோடி செலவாகும் என்று, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
 வேலிகாத்தான், காட்டுக் கருவேலம், சீமை உடை, சீமைக் கருவை, வேலிக் கருவை, டெல்லி முள், முள்மரம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சீமைக் கருவேல மரம், ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (Prosopis juliflora) என்ற அறிவியல் பெயர் கொண்டதாகும். மெக்ஸிகோ, கரீபியன் தீவுகள், தென் அமெரிக்க நாடுகளைத் தாயகமாக கொண்ட இவை, தற்போது ஆசிய, ஆஸ்திரேலிய கண்டங்களில் அதிக அளவில் பரவி உள்ளன.
 இந்தியாவில் கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வேலிக்காகவும், எரிபொருள் தேவைக்காகவும் இதன் விதைகள் இறக்குமதி செய்யப்பட்டு தூவப்பட்டன. இவை தற்போது பல்கிப்பெருகி சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மைக்கும் பல்வேறு வகைகளில் எதிரியாக வளர்ந்துள்ளன.
 தமிழகத்தில் உள்ள விளைநிலங்களில் சுமார் 25 சதவீத பரப்பில் இந்த மரங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளதாகவும், குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில், விளைநிலங்கள், நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகளின் இருபுறங்களையும் ஆக்கிரமித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலத்தடி நீருக்கு ஆபத்து:  இந்த மரத்தின் வேர்கள் பலநூறு அடி ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மேலும், மழை நீர் நிலத்துக்குள் செல்லாதவாறு தடுக்கும் தன்மை கொண்ட இவை, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி, வறட்சிக்கு அனைத்து வழிகளிலும் காரணமாக இருக்கின்றன.
 அதேபோல், இதன் அடியில் வேறு தாவரங்கள் வளர முடியாதவாறு தடுக்கும் தன்மை கொண்ட இந்த மரங்கள், எந்த பூச்சி நோய் தாக்குதலுக்கும் ஆட்படாத தன்மை கொண்டவை. அத்துடன் கால்நடைகள், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக் காற்றை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.
 இவ்வாறு பல வகையிலும் கேடுவிளைவிப்பதாக இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
 இந்த நிலையில், இது தொடர்பான பொதுநல வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இவற்றை அழிப்பதற்கான திட்டம், வழிமுறைகள் கொண்ட அறிக்கையை அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று  2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக உத்தரவிடப்பட்டது.
 இதற்கான பணிகளில் பொதுப்பணித் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, உள்ளாட்சி, வருவாய்த் துறையினர் சுணக்கம் காட்டி வந்த நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வரும் 10-ஆம் தேதிக்குள் அகற்றி, அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.
 இதற்கான பணிகள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில், கோவை உள்ளிட்ட இதர மாவட்டங்களிலும் எவ்வளவு இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் உள்ளன, அவற்றை அகற்றுவதற்கு எவ்வளவு செலவாகும் என்ற விவரத்தை உடனடியாக சமர்ப்பிக்கும்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டது.
8 வட்டங்களில் 2,530 ஏக்கரில்:  இதையடுத்து கோவையில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடைபெற்று வந்த ஆய்வுப் பணி அண்மையில் நிறைவடைந்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, பேரூர், மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 8 வட்டங்களில் மொத்தம் 2,530 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
 கோவை தெற்கு, வால்பாறை வட்டங்களில் இந்த மரங்கள் இல்லை என்பதும், அதிகபட்சமாக அன்னூர் வட்டத்தில் மட்டும் சுமார் 1,100 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அத்துடன், மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் மட்டும் 1,340 ஏக்கரில் இந்த மரங்கள் உள்ளன என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், 2,500 ஏக்கரில் உள்ள மரங்களை அகற்ற அரசுக்கு சுமார் ரூ.4.25 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த மரங்களை விற்பனை செய்வதால் ரூ.2.81 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், இந்தத் தொகையை செலவில் கழித்துவிட்டால் அரசாங்கம் தனது கையில் இருந்து ரூ.1.43 கோடியை வழங்கினால் கோவை மாவட்டத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட முடியும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிரந்தரத் தீர்வு தேவை:  கோவையில் சில தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே சிறிய அளவில் இந்த மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், அவை நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த போதுமானதாக இல்லை.
 இந்நிலையில் தற்போது, பருவமழை இல்லாமல் மாவட்டம் வறட்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மாநில அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, ஊரக வேலை உறுதித் திட்டப் பணி மூலமாகவும், தனிப்பட்ட விழிப்புணர்வு இயக்கம் மூலமாகவும் பணியை முடுக்கிவிட்டால் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க முடியும்.
 இதன் மூலம் நீர் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயத்துக்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி. இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கூறும்போது, சுற்றுச்சூழலுக்கும் மற்ற தாவரங்களுக்கும் இடையூறாக உள்ள சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்று அரசு கேட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைந்து முடித்து அறிக்கை அனுப்பியுள்ளோம். நிதியுதவி கிடைத்ததும் அந்த மரங்களை அகற்றும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.