கோடை விடுமுறையில் சாலை விபத்துகளைக் குறைக்க வாரம் ஒரு திட்டத்தை மாநகர போக்குவரத்துக் காவல் துறையினர் அமல்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இரண்டாவது பெரிய நகரமாக கோவை உள்ளது. கோவை மாநகரில் நாள்தோறும் 12 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 8.50 லட்சமாகும்.
மேலும், மாநகரில் நாள்தோறும் சுமார் 600-க்கும் மேற்பட்ட இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. கடந்த ஓராண்டில் எந்தவிதமான புதிய பாலங்களோ அல்லது புதிய சாலைகளோ அமைக்கப்படவில்லை. வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலை வசதி மேம்படுத்தப்படாததால், ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துகள் அதிகரித்து வருவதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாநகரில் கடந்த ஆண்டு மட்டும் 285 சாலை விபத்துகளில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், நடப்பு ஆண்டு கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த 72 சாலை விபத்துகளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு இதே மூன்று மாதங்களில் 63 விபத்துகளில் 65 பேர் இறந்துள்ளனர்.
வாரம் ஒரு திட்டம் அமல்: கோடை விடுமுறையில் விபத்துகளைக் குறைக்க வாரம் ஒரு திட்டத்தை கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் மார்ச் 27-ஆம் தேதி முதல் அமல்படுத்தி வருகின்றனர்.
இதில், மார்ச் 27 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் சென்றதாக 1,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1 லட்சத்து 6,800 வசூலிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை வாகன எண் பலகைகள் சரியான வகையில் எழுதப்பட்டுள்ளனவா என போக்குவரத்துக் காவல் துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) வரை 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று வரும் மே மாத இறுதி வரையிலும் பல்வேறு விதங்களில் சோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். கோவை மாநகரில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மாணவர்கள் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் மீது வழக்கு: 18 வயது பூர்த்தி அடையாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு, நீச்சல் முகாம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 18 வயது பூர்த்தி அடையாமல் வாகனம் ஓட்டும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அவ்வாறு வாகனம் ஓட்டும் மாணவர்கள், வாகனத்தின் உரிமையாளர் என இருவருக்கும் தலா ரூ.500 அபராதமாக விதிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். எனவே, பெற்றோர்களும் சிறுவர்களிடம் வாகனத்தைக் கொடுக்க வேண்டாம் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.சரவணன் கூறியதாவது: சாலை விபத்துகளைக் குறைக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கியதாக ரூ.2.5 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 32,200 தலைக்கவச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.32 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலேயே செல்கின்றனர். இதனால் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
கோவை மாநகரைப் பொருத்தவரை, கோடை விடுமுறையில் கடந்த ஆண்டு அதிக அளவு சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே, நடப்பு ஆண்டு ஏப்ரலில் விபத்துகளைக் குறைக்க மூன்று பேர் சென்றால் அபராதம், பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் உரிமையாளர்கள் மீதும் வழக்கு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துகளைக் குறைக்க இயலும். அதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.