அரசு ஐ.டி.ஐ.களில் உதவித் தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி: ஆர்வம் காட்டாத மாணவர்கள்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த


அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், இலவச மடிக்கணினி, மாதம் ரூ.500 உதவித் தொகை உள்ளிட்டவற்றை வழங்கி மாணவர் சேர்க்கையைக் கூட்ட அரசு முடிவு செய்தது.
முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் தொழிற்பயிற்சிக்கு அரசு பல்வேறு சலுகைகள் வாரி வழங்கியபோதும், மாணவர்கள் ஐ.டி.ஐ.யில் சேர ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 67 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) உள்ளன. கோவையில் இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இதில் மகளிர் தொழிற்பயிற்சி நிலையமும் அடங்கும்.
தொழில் நிறுவனங்களுக்கு போதிய தொழிலாளர்களை உருவாக்குவதில் ஒரு காலத்தில் ஐ.டி.ஐ.-கள் முக்கியப் பங்காற்றின. தற்போது டிப்ளமோ மற்றும் பி.இ., மோகம் காரணமாக ஐ.டி.ஐ.களில் மாணவர்கள் சேர போதிய ஆர்வம் காட்டுவது இல்லை. அதேநேரத்தில், ஐ.டி.ஐ.களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.
அரசு சலுகைகள்: பயிற்சிக் கட்டணம் இல்லை. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இலவச தங்கும் விடுதி, மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.500, இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி, இலவச சீருடை, காலணி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
மகளிர் ஐ.டி.ஐ.: தமிழகத்தில் கோவை மகளிர் ஐ.டி.ஐ.யில் மட்டுமே தகவல் தொழில்நுட்ப பயிற்சி (ஐ.டி.) வழங்கப்பட்டு வருகிறது. ஹார்டுவேர், நெட்வொர்க்கிங், வெப் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்படிப்பில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
இதுதவிர இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், டி.டி.பி.ஓ. மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி, துணி வெட்டுதல் மற்றும் தைத்தல் ஆகிய 6 வித பயிற்சி படிப்புகள் (படம்) வழங்கப்படுகின்றன.
மகளிர் ஐ.டி.ஐ.யில் சேர பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இதனால், திருமணமான பெண்கள் 35 சதவீதத்திற்கு மேல் தொழிற்பயிற்சி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஐ.டி.ஐ. பிரிவில் மொத்தம் 272 மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். இதில் ஐ.டி. பிரிவில் மட்டும் 125 மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.டி. பிரிவுகளில் கணினி மையம் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி பயிற்சி பெற பல்வேறு நவீன உபகரணங்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.3.5 கோடி செலவில் திறன்மிகு மையமாக தரம் உயர்த்தப்பட்டு மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்: மகளிர் ஐ.டி.ஐ. எதிரே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் சேர்ந்து படிக்கலாம். இங்கு மொத்தம் உள்ள 21 பிரிவுகளில் 856 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டு கலந்தாய்வு முறையில் ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இங்கு 856 இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 1533 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு ஐ.டி.ஐ.களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 29ஆம் தேதியாகும்.
மகளிர் ஐ.டி.ஐ.யில் மொத்தம் 272 இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 165-க்கும் மேலான மாணவிகள் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், 0422-2642041. மகளிர் ஐ.டி.ஐ. தொலைபேசி எண் 0422-2645778. ஐ.டி.ஐ.களில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் திறன்சார்ந்த தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
ஐ.டி.ஐ-களில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிய தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. ஐ.டி.ஐ. பாடப் பிரிவுகளை எடுத்து படிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விடுதி வசதி இல்லை!
கோவையில் உள்ள இரு அரசு ஐ.டி.ஐ.களிலும் சேர்த்து சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், போதிய இட வசதி இருந்த போதிலும் மாணவ, மாணவிகள் தங்கி படிக்க போதிய விடுதி வசதி இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
வெளியூர்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள அரசு விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். ஐ.டி.ஐ.களில் சேரும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களாக இருப்பதால் இரு ஐ.டி.ஐ.களில் விரைவிலேயே விடுதி கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...