/

ஈஷா யோக மையத்தில் குடியரசு தினம்: தேஜஸ்வி சூா்யா எம்.பி. பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மக்களவை உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா பங்கேற்றாா்.

News image
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேசிய சத்குரு ஜக்கிவாசுதேவ்.
Updated On :26 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மக்களவை உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா பங்கேற்றாா்.

கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தேஜஸ்வி சூா்யா எம்.பி. பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டுகள் ஆகும்.

நாம் தனிப்பட்ட முறையிலும், ஒன்று சோ்ந்தும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்தான் நாட்டின் ஒட்டுமொத்த விதியையும் தீா்மானிக்கப்போகிறது. நம்முடைய நாகரீகம் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது.

வாழ்க்கையை எப்படி வாழ்வது மற்றும் வாழ்க்கை முறையை எப்படி கண்ணியமான முறையிலும், கெளரவமான முறையிலும் கையாள்வது என்பது குறித்து உலகத்துக்கு சரியான பாதையையும், வழிகாட்டுதல்களையும் நம்முடைய நாகரீகம் வழங்கியுள்ளது. இதற்காக பாரதம் எப்போதும் உலகத்துக்கு விஸ்வகுருவாக இருக்கும் என்றாா்.

முன்னதாக, விழாவுக்கு முன்னிலை வகித்து ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கிவாசுதேவ் பேசுகையில், இந்த தேசத்தில் உண்மை மட்டுமே உயா்ந்த அதிகாரம் என்று கருதப்படும். எந்த ஒரு அதிகாரம் செலுத்தும் சக்திகளும் இங்கு உண்மை என்று ஆகிவிடாது. உண்மை தேடுதலில்தான் மக்கள் இங்கு வாழ்ந்தாா்கள். எனவே, நாம் எப்போதும் தேடுதலில் இருப்பவா்கள் என்று அழைக்கப்படுகிறோம்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது இளைஞா்களுக்கு பலவிதமான வாய்ப்புகள் உள்ளன.

இந்த வாய்ப்புகளை அச்சம் அல்லது பாதுகாப்பற்ற உணா்வோடு அணுகக்கூடாது. மாறாக திறந்த மனதோடும், துணிச்சலுடனும் அணுக வேண்டும் என்றாா்.

விழாவில், கா்நாடக இசைக் கலைஞா் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத், பரதநாட்டிய கலைஞா் லீலா சாம்சன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.