/

ஏற்றுமதி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளால்... பஞ்சு விற்பனையில் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு லாபம்!

கோவை, ஜூலை 27: பஞ்சு ஏற்றுமதி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளால் வெளிநாட்டு வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளனர். அதேசமயம், இந்திய பருத்திக் கழகத்துக்கும் நூற்பாலைகளுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:17 pm

ஆர். வேல்முருகன்

கோவை, ஜூலை 27: பஞ்சு ஏற்றுமதி தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளால் வெளிநாட்டு வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளனர். அதேசமயம், இந்திய பருத்திக் கழகத்துக்கும் நூற்பாலைகளுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 ÷கடந்த 2008 பிப்ரவரி வரை பஞ்சு, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் இருந்தது. அதன்பின் அச்சட்டத்தில் இருந்து பஞ்சு நீக்கப்பட்டது. அதையடுத்து வெளிநாடுகளில் இருந்து பஞ்சு வியாபாரிகள் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

 ÷பஞ்சுக்கான இறக்குமதி வரி 14.2 சதவீதமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் விளையும் பஞ்சைக் கொள்முதல் செய்து பதுக்கினர். அந்தச் சமயத்தில் சுமார் 88.5 லட்சம் பேல்களை ஏற்றுமதி செய்து, இந்தியாவில் போலியான பஞ்சுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். இதனால் பஞ்சின் விலை கடுமையாக உயர்ந்தது.

 ÷இதை எதிர்த்து 2008 ஜூலை 9-ல் நாடு முழுவதும் நூற்பாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. அப்போது இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது. உபரியாக உள்ள பஞ்சை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நூற்பாலை உரிமையாளர்கள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டனர்.

 ÷அப்போது, பஞ்சு ஏற்றுமதி செய்வதாக இருந்தாலும், இறக்குமதி செய்தாலும், இந்திய பருத்திக் கழகம் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும் என்று நூற்பாலை உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

 ÷வெளிநாட்டு வியாபாரிகளுக்கு அங்குள்ள வங்கிகள் 2 சதவீத வட்டியில் தேவையான அளவுக்கு கடன் கொடுக்கின்றன. ஆனால் இந்திய பஞ்சாலை உரிமையாளர்களுக்கு வங்கிகள் குறைந்தபட்சம் 7 சதவீத வட்டியில் அதுவும் 3 மாதங்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கின்றன.

 ÷மேலும் நூற்பாலை உரிமையாளர்கள் தங்கள் பங்குத் தொகையாக மொத்தத் தொகையில் 25 சதவீதத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் வெளிநாட்டு வியாபாரிகளுடனான போட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

 ÷இந்தச் சூழ்நிலையில் இறக்குமதி வரி விலக்கப்பட்டவுடன், பஞ்சுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த 2008-09ல் மார்க்கெட் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாக இருந்தது. மார்க்கெட் விலை குறைவாக இருக்கும்போது பருத்திக் கழகமே கொள்முதல் செய்யும்.

 ÷அந்தச் சமயத்தில் பருத்திக் கழகம் சுமார் 120 லட்சம் பேல் பஞ்சைக் கொள்முதல் செய்தது. இதனால் பருத்திக் கழகத்துக்கு சுமார் ரூ. 6,000 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

 ÷இந்தச் சமயத்தில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை ஏற்றுமதி செய்யப்பட்ட பஞ்சுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவு அக்டோபர் மாதத்தில் வெளியானது.

 ÷இந்தச் சலுகைத் தொகை நேரடியாக விவசாயிகளுக்குச் செல்ல வேண்டும். ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் இதை அறிவித்திருந்தால் விவசாயிகளுக்கு இச்சலுகை சென்றிருக்கும். ஆனால் அக்டோபர் மாதத்தில் அறிவித்ததால், வெளிநாட்டு வர்த்தகர்கள் சிலருக்கு மட்டுமே இச்சலுகையால் ரூ. 500 கோடி வரை லாபம் கிடைத்தது.

 ÷கொள்முதல் செய்த பஞ்சை அதிக விலைக்கு விற்க முடியாததால் 2 லட்சம் பேல் கொள்முதல் செய்பவர்களுக்கு கண்டிக்கு ரூ. 650 தள்ளுபடி மற்றும் 6 மாத வட்டிச் சலுகையை இந்திய பருத்திக் கழகம் வழங்கியது. இதிலும் வெளிநாட்டு வர்த்தகர்கள் மட்டுமே பயன் பெற்றனர்.

 ÷ஒவ்வொரு வாரமும் பஞ்சு விலையை உயர்த்தியதும் வெளிநாட்டு வியாபாரிகளுக்குச் சாதகமாக அமைந்தது. இதனால் பஞ்சின் விலை மிகக் கடுமையாக உயர்ந்தது.

 ÷கடந்த 2009-10ல் 55 லட்சம் பேல் பஞ்சு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் முதல் ஜன. 15-ம் தேதி வரை 45 நாள்களுக்குள் இதை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டது. இந்தச் சமயத்தில் பருத்தி வரத்து சுமார் 25 முதல் 30 லட்சம் பேல்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 ÷ஏற்றுமதி உத்தரவு காரணமாக உள்நாட்டு உபயோகத்துக்குத் தேவையான பஞ்சு இல்லாததால் விலை மிகக் கடுமையாக உயர்ந்தது. அதே சமயத்தில் உலகச் சந்தையிலும் பஞ்சுத் தட்டுப்பாடு 10 சதவீதம் இருந்தது. இதனால் ஒரு கண்டி பருத்தி விலை ரூ. 39 ஆயிரத்தில் இருந்து ரூ. 65 ஆயிரம் வரை விலை உயர்ந்தது.

 ÷பஞ்சு விலை ரூ. 80 ஆயிரம் வரை உயரும் என்று வதந்தி பரவியதால் அனைத்துப் பஞ்சாலைகளும் 6 மாதத்துக்குத் தேவையான பஞ்சை ரூ. 55 ஆயிரம் முதல் ரூ. 65 ஆயிரம் வரையிலான விலையில் வாங்கி இருப்பு வைத்துக்கொண்டன.

 ÷ஆனால் அதன்பின் பஞ்சின் விலை குறைந்து வந்து ரூ. 35 ஆயிரமாகச் சரிந்தது. இதனால் நடப்பு மூலதனத்தில் மட்டும் இந்திய நூற்பாலைகளுக்கு ரூ. 6,000 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

 ÷பொதுவாக வணிகம், ஜவுளி, வேளாண்மை மற்றும் நிதித் துறை அமைச்சகங்கள் இடையே கடும் பனிப்போர் நிலவுவதாகக் கூறப்படுகிறது. அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்படாததால்தான் பஞ்சு ஏற்றுமதியில் கடும் குழப்பம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையில் பருத்திக் கழகத்துக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 ÷இதற்குத் தீர்வாக, பஞ்சு ஏற்றுமதி, இறக்குமதியை இந்திய பருத்திக் கழகமே செய்ய வேண்டும். மேலும், தனியாக வியாபாரிகளுக்கு பஞ்சைத் தராமல் நூற்பாலைகளுக்கு மட்டுமே கொடுத்தால் எந்தப் பிரச்னையும் வராது என்று நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

 கையிருப்பு அதிகரிக்கப்படுமா?

 பொதுவாக சீனா போன்ற நாடுகளில் ஓராண்டுக்குத் தேவைப்படும் பஞ்சின் அளவில் 40 சதவீதத்துக்கு மேல் இருப்பு வைத்துக் கொள்கிறார்கள்.

 ஆனால் இந்தியாவில் சுமார் 20 சதவீதம் பஞ்சு மட்டுமே இருப்பு வைக்கப்படுகிறது. இதனால் தான் அவ்வப்போது விலை உயர்வும், தேவையான அளவு இருப்பு இல்லாத நிலையும் ஏற்படுகிறது.

 இதைத் தவிர்க்க தொலைநோக்குப் பார்வையுடன் அரசு செயல்பட வேண்டும் என்பதே தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.