/

தமிழகத்தில் தஞ்சம்: கல்விக்கு ஏக்கம்!

ஈரோடு, செப். 6: சொந்த ஊரில் வறுமையில் போராடி வந்த நிலையில், பிழைப்பை தேடி தமிழக கிராமங்களில் கரும்புவெட்டும் தொழிலாளர்களாய் தஞ்சமடைந்துள்ள பிற மாநிலத் தொழிலாளர்கள், தங்களது குழந்தைகளின் கல்விக்கு வழி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:25 pm

கே.விஜயபாஸ்கா்

ஈரோடு, செப். 6: சொந்த ஊரில் வறுமையில் போராடி வந்த நிலையில், பிழைப்பை தேடி தமிழக கிராமங்களில் கரும்புவெட்டும் தொழிலாளர்களாய் தஞ்சமடைந்துள்ள பிற மாநிலத் தொழிலாளர்கள், தங்களது குழந்தைகளின் கல்விக்கு வழி தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

  தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.  விவசாயக் கூலியை விட இங்கு இரு மடங்கு அதிக கூலி கிடைப்பதால் கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்தில் விவசாயப் பணிகளுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைப்பது குறைந்துகொண்டே வருகிறது.

 இந்நிலையில்,  விவசாயப் பணிகளுக்கு கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த மலை கிராம மக்கள், பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களை,  விவசாயிகள் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்.  கரும்புவெட்டும் வேலைக்கு ஊள்ளூரில் தொழிலாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வெளி மாநில தொழிலாளர்களை இந்த வேலைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.  

  ஆலைகளுக்கு கரும்புவெட்டிக் கொடுக்கும் ஒப்பந்ததாரர்கள், வேலைக்கு ஆட்களை அழைத்து வருபவர்களுக்கு நூற்பாலைகள் கமிஷன் கொடுப்பதை போல, வெளிமாநிலங்களிலிருந்து, தொழிலாளர்களை அழைத்துவரும், அந்த மாநிலத்தை சேர்ந்தவருக்கு கமிஷன் கொடுத்தும், தொழிலாளர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தும், தொழிலாளர்களின் எண்ணிக்கையை பெருக்கிக்கொண்டனர்.

 கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல், ஆலைகள் இயங்கும் மாதங்களில் அந்தப் பகுதிகளில் தங்கி, இத் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கூட கிடைப்பதில்லை. ஒரே ஊரில் 5 நாட்களுக்கு மேல் தங்க வாய்ப்பில்லை என்பதாலும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5 மாவட்டத்திற்கு இடம் மாற வேண்டி இருப்பதாலும் இந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க இயலாத நிலை உள்ளது.  

  தமிழகத்திற்கு வந்த பிறகு பிறந்த பல குழந்தைகள், இப்போது 15 வயது முடிந்துள்ள நிலையில், அவர்களும் தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.  இந்த குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கூட கிடைக்கவில்லை என ஆதங்கப்படுகின்றனர் பெற்றோர். கல்வி கிடைக்காத காரணத்தால் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

  இதுகுறித்து கொள்ளேகால் பகுதியை சேர்ந்த கரும்புவெட்டும் தொழிலாளி நஞ்சப்பா தெரிவித்தது:

 கரும்புவெட்டும் தொழிலில் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 1000 குடும்பங்களைச்  சேர்ந்தவர்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர்.  ஈரோடு, சேலம், கோவை, கரூர், மதுரை மாவட்டங்களில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மொழியை நன்றாகப் பேசும் அளவிற்கு மாறிவிட்ட இத்தொழிலாளர்கள், சொந்த ஊருக்குச் செல்வதை கூட தவிர்த்துவிட்டனர் என்றார்.

  மலைப் பகுதிகளில் உள்ளதுபோன்று, இத் தொழிலாளர்கள் அதிகமாக தங்கிவேலைபார்க்கும் வட்டாரங்களில் உண்டு, உறைவிடப் பள்ளிகளைத் தொடங்கி, தொழிலாளர்களின் குழந்தைகளை இந்தப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.  இவ்வாறு தொடங்கப்படும் பள்ளிகள், இந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.