/

தீராத தலைவலியான போக்குவரத்து நெரிசல் பயன்தராத தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்!

கோவை, பிப். 18: கோவை மாவட்டத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான நாகபட்டினம் - கூடலூர் சாலை (தே.நெ.எண்: 67) விரிவாக்கத்தில் 8 கிமீ தூரம் விரிவுபடுத்தும் திட்டத்தில் கைவிடப்பட்டுள்ளதால், இப் பகுத

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:33 pm

சிவ. மணிகண்டன்

கோவை, பிப். 18: கோவை மாவட்டத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான நாகபட்டினம் - கூடலூர் சாலை (தே.நெ.எண்: 67) விரிவாக்கத்தில் 8 கிமீ தூரம் விரிவுபடுத்தும் திட்டத்தில் கைவிடப்பட்டுள்ளதால், இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக தொடர்கிறது.

கோவை நகருக்குள் வரும் முக்கியச் சாலைகளில் ஒன்றாக  நாகபட்டினம் - கூடலூர் நெடுஞ்சாலை (திருச்சி சாலை) உள்ளது. கோவையில் இருந்து திருச்சி, மதுரை மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இச் சாலையையே பயன்படுத்துகின்றன.

இச் சாலையையொட்டி கோவையின் கிழக்குப் பகுதியில் நகர விரிவாக்கம் காரணமாக குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் கோவை - சூலூர் இடையே கல்லூரிகள், தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

புதிய தாலுகாவாக சூலூர் உருவாக்கப்பட்டுள்ளதால், அரசு அலுவலகங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, கோவை - சூலூர் இடையே போக்குவரத்து அதிகரித்து உள்ளது. கோவையில் இருந்து பல்லடம், திருப்பூர் பகுதிக்கு ஏராளமானோர் வேலைக்குச் சென்று வருவதால் பஸ் போக்குவரத்தும் மிக அதிகமாக உள்ளது. இக் காரணங்களால் திருச்சி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கரூர், பல்லடம், சூலூர் வரை திருச்சி சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு செம்மொழி மாநாட்டின்போது திருச்சி சாலையில் இருகூர் பிரிவில் இருந்து ராமநாதபுரம் பங்குச் சந்தை வளாகம் வரை சாலை விரிவுபடுத்தப்பட்டது.

ஆனால், இதற்கு இடைப்பட்ட 8 கிமீ தூரமுள்ள சாலை, விரிவாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளது. இது கோவை நகருக்குள் நுழையும் பகுதி என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. எந்த நோக்கத்துக்காக திருச்சி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதோ, அது தற்போது நிறைவேறாமல் போய்விட்டது.

  பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் சென்று வரக்கூடிய நெரிசல் மிகுந்த நேரங்களில் இப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆயிரக் கணக்கான வாகனங்கள் செல்லும் இச் சாலை இருவழிச் சாலையாகவும், குறுகிய பாலங்களுடனும் இருப்பதால் இப் பகுதியை வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கின்றன.

சிறிய விபத்து நிகழ்ந்தால் கூட, பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு இப் பகுதியில் நெரிசல் அதிகரித்துவிட்டது. அண்மையில் சிந்தாமணிபுதூர் அருகே ஏற்பட்ட விபத்தின்போது போக்குவரத்து சீராக 4 மணி நேரத்துக்கு மேல் ஆனது குறிப்பிடத் தக்கது.

  சூலூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 8 கிமீ சாலையானது விரிவாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளது. இப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பேரூராட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

காங்கேயம்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வரும் பகுதியில் தான் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆகவே, காங்கேயம்பாளையத்தில் இருந்து சிந்தாமணிபுதூர் எல் அண்ட் டி புறவழிச் சாலை வரை உடனடியாக அகலப்படுத்த வேண்டும் என்கின்றனர் இப் பகுதியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.