/

தொழில்துறையில் மின்வெட்டால் கிடைத்தது மின்சேமிப்பு!

கோவை, ஜூலை 7: தொழில்நிறுவனங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டபின் மின்சேமிப்பு அதிகரித்து வருகிறது.   தமிழகத்தில் ஏற்பட்ட மின்பற்றாக்குறை காரணமாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்ப

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:36 pm

ஜெபலின்ஜான்

கோவை, ஜூலை 7: தொழில்நிறுவனங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டபின் மின்சேமிப்பு அதிகரித்து வருகிறது.

  தமிழகத்தில் ஏற்பட்ட மின்பற்றாக்குறை காரணமாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டால் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.

  தொழில்வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்நிறுவனங்களில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், தொழில்நிறுவனங்களில் உற்பத்தி குறைந்து ஆயிரக்கணக்கான

தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

  தொழில்நிறுவனங்களில் உற்பத்தி இழப்பு ஏற்படுவதுடன், மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் உற்பத்திச் செலவு உயர்ந்துவிட்டது. இதனால், தொழில்நிறுவனங்களின் லாபம் குறைந்து வருகிறது. சந்தையில் இருக்கும் பலமான போட்டி காரணமாக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லை.

   இந்நிலையில் உற்பத்திச் செலவை குறைக்கும் நடவடிக்கையில் கோவை தொழில்நிறுவனங்கள் இறங்கியுள்ளன. முதல்கட்டமாக ஆற்றல் தணிக்கையாளர்கள் (உய்ங்ழ்ஞ்ஹ் அன்க்ண்ற்ர்ழ்ள்) உதவியுடன் மின்சார செலவு குறைக்கப்பட்டுள்ளது. பெரிய, நடுத்தர மற்றும் சிறு தொழில்நிறுவனங்களில் மின்சாரத்தை சேமிக்க புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  பஞ்சாலைகள், பவுண்டரிகளில் அதிகமாக மின்சேமிக்க முடிகிறது. அதேநேரத்தில் குறுந்தொழில்கூடங்களில் மின்சேமிப்புக்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர் தொழில்நிறுவன உரிமையாளர்கள்.

  "பவுண்டரிகளில் பெரிய பர்னர்கள் மூலம் மூலப்பொருட்கள் சூடேற்றும்போது அதிக மின்சாரம் செலவாகும். அதுபோன்ற பர்னர்களில் அலாரம் பொருத்தப்பட்டு சரியான நேரத்தில் பர்னர்களை அணைத்து வருவதால் ஓரளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. அதேபோல அதிக மின்விரயமாகும் பல்புகளுக்கு பதில், மின்செலவு குறைவாகும் பல்புகளை பொருத்தியுள்ளோம். புதிதாக பெரிய அளவில் முதலீடு செய்யாமல் இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின்செலவை குறைத்து  வருகிறோம். சிறு நிறுவனங்களில் மொத்த உற்பத்திச் செலவில் 30 சதவீதம் மின்சாரத்துக்கே செலவிடப்படுகிறது. இப்போது மின்சேமிப்பு 5 சதவீதம்

ஏற்பட்டுள்ளதால் 3 சதவீத லாபம் அதிகரித்துள்ளது' என்கிறார் கோவை சிறுதொழில்கள் சங்கத் (கொடிசியா) கே.இளங்கோ.

  "பெரிய தொழில்நிறுவனங்களில் மின்சேமிப்பு சாத்தியம். ஆனால், கோவையில் இயங்கும் 25 ஆயிரம் குறுந்தொழில்கூடங்களில் 70 சதவீதம் சப்-மீட்டர்களை பொருத்தி இயக்கப்படுகின்றன. ஒரே வளாகத்தில் ஒரு மின்இணைப்பில் 10 அல்லது 15 நிறுவனங்கள் இயங்குவதால் மின்சேமிப்பு செய்ய சாத்தியம் இல்லை. இருப்பினும் அரசு  உதவி செய்து மின்சேமிப்பு செய்ய ஆற்றல் தணிக்கையாளர்களை நியமித்தால் குறுந்தொழில்கூடங்களிலும் மின்சாரம் சேமிக்கப்படும்' என்கிறார் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ்.

 "நூற்பாலைகளில்தான் முதலில் ஆற்றல் தணிக்கையாளர்கள் உதவியுடன் மின்சேமிப்பு

துவக்கப்பட்டது. இந்த ஆலைகளில் இப்போது நாளொன்றுக்கு 1,000 யூனிட் வரை மின்சாரம் சேமிக்கப்படுகிறது. கோவை மண்டலத்தில் 1,600 உயர்மின்அழுத்த இணைப்புகள் (தொழில்நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள்) உள்ளன. கோவை மண்டலத்தில் ஒரு நாளைக்கு 1,400 மெகாவாட் மின்சாரம் விநியோகம்

செய்யப்படுகிறது. இதில் 560 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து தொழில்நிறுவனங்களும் மின்சேமிப்பில் ஈடுபட்டால் மின்விநியோகம்

குறையும். மின்பற்றாக்குறையை சமாளிக்க இதுபோன்ற புதிய வழிமுறைகளையும் கையாள வேண்டும். தெருவிளக்குகளை காலையும், மாலையும் உரிய நேரத்தில் அணைத்தால் மின்சாரம் சேமிக்கப்படும்' என்கிறார் தமிழ்நாடு மின்வாரியத்தின் கோவை மண்டல தலைமைப் பொறியாளர் ஆ.தங்கவேலு.  எந்தத் தீமையிலும் ஓரு நன்மை உண்டு என்பதை போல மின்வெட்டு அமல்படுத்தப்பட்ட பின்னர்தான் மின்சேமிப்பு பற்றி தொழில்நிறுவனங்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோல தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் தொழில்நிறுவனங்களும், மின்நுகர்வோரும் மின்சேமிப்பு செய்ய முயற்சி செய்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.