/

உற்பத்தியை நிறுத்தி தனியாரிடம் விலைக்கு வாங்கும் மின்வாரியம்

சேலம், ஜன.11: தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்று காரணம் காட்டி தனியாரிடம் மின்சாரத்தை விலைக்கு வாங்க முடிவு செய்துள்ள மின்வாரியம், சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 1:59 pm

க. தங்கராஜா

சேலம், ஜன.11: தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்று காரணம் காட்டி தனியாரிடம் மின்சாரத்தை விலைக்கு வாங்க முடிவு செய்துள்ள மின்வாரியம், சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) அதிகாலை முதல் மேலும் ஒரு யூனிட்டில் மின் உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்துள்ளது.

மேட்டூரில் 4 யூனிட்டுகள் கொண்ட அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு யூனிட்டில் இருந்து ஒரு நாளைக்கு அதிகபட்சம் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்நிலையில் அனல் மின் நிலையத்தின் மூலப் பொருளான நிலக்கரி சென்னையில் இருந்து மேட்டூருக்கு வருவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2-ம் தேதியில் இருந்து அனல் மின் நிலையத்தின் 3-வது யூனிட் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்பட்டது.

இரண்டு யூனிட்டுகள் நிறுத்தம்

அனல் மின் நிலையத்துக்கு நாளொன்றுக்கு 14 ஆயிரம் டன்கள் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு சுமார் 7 ஆயிரம் டன்கள் மட்டுமே நிலக்கரி வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலக்கரி இருப்பிற்கு ஏற்ப யூனிட்டுகள் நிறுத்தி வைத்து இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகவே 3-வது யூனிட் நிறுத்தப்பட்டது. இருப்பினும் எந்திரக் கோளாறு காரணமாக யூனிட் நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவற்றை சரி செய்யும் முயற்சிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் முதலாவது யூனிட்டும் நிறுத்தப்பட்டுவிட்டது.

பராமரிப்புக்காக நிறுத்தம்

இதுகுறித்து மேட்டூர் அனல் மின் நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறியது: அனல் மின் நிலையத்தின் முதலாவது யூனிட் எந்திரத்தை சுத்தப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சுத்தப்படுத்தும் பணி ஆண்டுதோறும் நடக்கும் ஒன்றுதான். மேலும் விரைவில் பொங்கல் விடுமுறை வருவதால் மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும். இதனால் அதிகளவில் மின் உற்பத்தி தேவைப்படாது என்பதால் உற்பத்தியை குறைக்கும் விதமாக யூனிட் மூடப்பட்டுள்ளது என்றார்.

எந்திரத்தை சுத்தப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டாலும் நிலக்கரி பற்றாக்குறையால்தான் யூனிட் நிறுத்தப்பட்டதாக அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்த யூனிட் ஆண்டுதோறும் பழுது பார்ப்பதற்காக ஜனவரி 18-ம் தேதியில்தான் நிறுத்தப்படும். தமிழகத்தில் மின்பற்றாக்குறை அதிகம் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு வாரம் முன்கூட்டியே நிறுத்தி 210 மெகா வாட் மின்சார உற்பத்தியை இழப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் நிலக்கரி ஏற்றுமதி பற்றாக்குறையை தீர்க்கும் முயற்சியாக மேட்டூரில் இருந்து கூடுதலாக ஆள்களை சென்னைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 60 மெகா வாட் பாதிப்பு

மேட்டூரில் கடந்த இரண்டு வாரங்களாக 840 மெகா வாட்டுக்கு பதிலாக 480 மெகா வாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது (மூன்று யூனிட்டுகளில் தலா 180 மெகா வாட் வீதம்). இந்நிலையில் மேலும் ஒரு யூனிட் நிறுத்தப்பட்ட நிலையில், இயங்கி வரும் இரண்டு யூனிட்டுகளும் முழு அளவு (தலா 210 மெகா வாட்) மின்சாரத்தை தயாரிக்கின்றன. எனவே கடந்த வாரத்தைக் காட்டிலும் இப்போது மேலும் 60 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஒட்டு மொத்த மின் தேவையான நாளொன்றுக்கு 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தில் (இது இப்போது மேலும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது) 9 ஆயிரம் மெகா வாட் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி குறைவால் தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தினசரி இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உயர் அழுத்த மின் இணைப்புகள் எதுவும் இயங்காத நிலை இருந்தது. பெரிய ஆலைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வெளிச்சத்துக்காக 5 சதவீத மின்சாரம் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தனியாரிடம் பெற அனுமதி

இந்நிலையில் தொழில் நிறுவனங்கள், மாலை நேரத்தில் உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளுக்கு தேவையான மின்சாரத்தை கூடுதலாக வெளிச்சந்தையிலிருந்து மின்வாரியம் பெற்று விநியோகிக்க வேண்டுமென்றும், அவ்வாறு வழங்கப்படும் மின்சாரத்திற்கு உரிய கூடுதல் கட்டணம் செலுத்த முன்வருவதாகவும் இந்திய தொழில் கூட்டமைப்பினர் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடந்த 7-ம் தேதி தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதாவது தமிழகத்தில் மின்பற்றாக்குறை இருப்பதால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.8 முதல் ரூ.17 வரையிலான விலைக்கு வாங்கியே மின்வாரியம் தமிழகத்துக்கு வழங்கி வருகிறது. அப்படி இருக்கும்போதும் இங்கு அறிவிக்கப்பட்ட மின் வெட்டு தொடர்ந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே ரூ.9 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டும் தமிழக மின்வாரியம், யூனிட் வெறும் ரூ.2.13 செலவில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதற்கு அக்கறை காட்டாமல், வெளி மார்க்கெட்டில், தனியாரிடம் பணம் கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.