/

திறக்கப்படாத எரி உலை: நீர்நிலைகளில் கோழிக் கழிவுகள்

திருப்பூர், ஆக.7: பல்லடம் பகுதி கோழிப்பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கோழிக் கழிவுகள் சுற்றுவட்டாரத்திலுள்ள நீர் நிலைகள், சாலையோரங்களிலும் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.  காழிக்கழிவுகளை அப்புற

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:02 pm

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், ஆக.7: பல்லடம் பகுதி கோழிப்பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கோழிக் கழிவுகள் சுற்றுவட்டாரத்திலுள்ள நீர் நிலைகள், சாலையோரங்களிலும் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.

 காழிக்கழிவுகளை அப்புறப்படுத்த பல்லடம் அருகே அமைக்கப்பட்ட எரிஉலையும் 3 ஆண்டாகியும் திறக்கப்படாததால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன.

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் 12 பிராய்லர் கோழிப் பொரிப்பகங்கள் உள்ளன. இதன் கீழ் சுமார் 4,000 பண்ணைகள் இயங்கி வருகின்றன. இப் பண்ணைகள் மூலம் நாளொன்றுக்கு 5 லட்சம் கோழிக்குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கறிக்காக வளர்க்கப்படுகின்றன.

  பெரிய அளவிலான கோழிப்பண்ணைகள், கழிவுகளை சுகாதாரமாக அப்புறப்படுத்த தனியாக எரிஉலைகள் அமைத்துள்ளன. ஆனால், சிறிய அளவில் இயங்கிவரும்

ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகளான இறகுகள், தோல்கள், இறந்த குஞ்சுகள், சாணங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த எரிஉலைகள் அமைக்கப்படவில்லை. அப்பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கால்வாய், விவசாய நிலங்கள், சாலையோர குழிகளில் கொட்டிச்சென்று விடுகின்றனர். இதனால் பல்லடம் சுற்றுவட்டாரத்தில் சுகாதார பாதிப்புகள் அதிகரிப்பதுடன், நீர் நிலைகளில் கொடுக்கப்படும் அக் கழிவுகளால் தண்ணீர் மாசுபடுகிறது. கழிவுகளை உண்ணும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும்  அதிகரித்தும் வருகிறது.

 இதுபோன்ற பாதிப்புகளைக் கருதி பல்லடம் பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பல்லடம்-பொள்ளாச்சி சாலை வெங்கிடாபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கோழிக்கழிவு எரிஉலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. நாளொன்றுக்கு 1,000 கிலோவுக்கும் அதிகமான கோழிக்கழிவுகளை எரித்து சாம்பலாக்கும் இந்த எரி உலை இன்றுவரை

திறந்து பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 நகரைவிட்டு சுமார் 7 கி.மீ. தொலைவில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இடத்தில் இந்த எரிஉலை அமைந்துள்ளது. அதிலுள்ள இயந்திரப் பாகங்கள்

உள்ளிட்டவை திருடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பயன்பாடின்றி கிடக்கும் அந்த ஆலையின் கட்டடச் சுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர லட்சக்கணக்கில் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 கிடப்பில் போடப்பட்ட கோழிக்கழிவு எரிஉலை குறித்து பல்லடம் பிராய்லர் ஒருங்கிணைப்புக் குழு செயலர் சின்னச்சாமி கூறியது:

 பெருகிவரும் சுகாதாரப் பாதிப்புகளை அடுத்து பெரிய பண்ணைகள் தாங்களாகவே எரி உலைகள் அமைத்துக்கொண்டுள்ளன. சிறிய அளவிலுள்ள பண்ணைகளின் தேவைகள் கருதி பிராய்லர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அமைத்துத்தரப்பட்ட வெங்கிடாபுரம் எரிஉலை இயங்க 1 மணி நேரத்துக்கு 5 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. தவிர, மின் சாரம், ஆட்கள் சம்பளம் என கூடுதல் செலவுகள் செய்ய வேண்டியுள்ளதால் கால்நடை பராமரிப்புத்துறை அதை கண்டுகொள்வதில்லை. அந்த எரிஉலையை முறைப்படி இயக்கி, கோழிப்பண்ணைகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தினால் சுகாதார பாதிப்புகளை தடுக்கலாம் என்றார்.

 தற்போது பல்லடம் பகுதியிலுள்ள சிறிய பண்ணைகளில் இருந்து கிடைக்கும் கோழிக்கழிவுகளுக்கு ஏற்ப வெங்கிடாபுரம் எரிஉலையில் கொள்திறன் இல்லை.

மேலும், பல்லடம் நகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதாலும் அந்த எரிஉலையை பண்ணையாளர்கள் பயன்படுத்த முன்வருவதில்லை. பல்லடம், பொங்கலூர் சுற்றுவட்டாரத்திலுள்ள நீர் நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் பாதிப்பை உணர்ந்து 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள வெங்கிடாபுரம் கோழிக்கழிவு எரிஉலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பல்லடம் பகுதியிலுள்ள பண்ணைகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான கழிவுகளுக்கு ஏற்ப கூடுதலாக எரிஉலைகள் அமைக்கவும் கால்நடைபராமரிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பல்லடம் சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.