எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நியூட்ரினோ ஆய்வுக்கு பாதாள அறிவியல் கூடம் அமைக்க எதிர்ப்பு

 உதகை, அக். 1: பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு என்பது குறித்து ஆய்வு செய்ய இந்தியாவில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் சிங்காரா பகுதியில் நியூட்ரினோ அடிப்படை துகள்களை ஆய்வு செய்யும் பாதாள

News image
Updated On :26 டிசம்பர் 2023, 7:02 am

ஏ. பேட்ரிக்

 உதகை, அக். 1: பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு என்பது குறித்து ஆய்வு செய்ய இந்தியாவில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் சிங்காரா பகுதியில் நியூட்ரினோ அடிப்படை துகள்களை ஆய்வு செய்யும் பாதாள அறிவியல் கூடம் அமைக்கும் திட்டத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 இத்திட்டத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவளித்தாலும், தமிழக அரசு இத்திட்டத்துக்கான அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. நீலகிரியில் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தவுள்ள இத்திட்டத்தை நீலகிரியில் செயல்படுத்த வேண்டாமென்பதே சுற்றுச்சூழலியலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் எதிர்பார்ப்புமாகும்.

 இந்திய "நியூட்ரினோ அறிவியற்கூடம்' என்ற பெயரில் ரூ.917 கோடி செலவில் அமையவுள்ள இந்த பாதாள அறிவியல் கூடத்தை அமைப்பது குறித்து இந்தியாவிலுள்ள பல்வேறு அறிவியல் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இணைந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அவர்களோடு இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

 அண்மைக்காலமாக பெüதிக அறிவியலிலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் நியூட்ரினோ குறித்த பல்வேறு விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விநாடியும் ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் நம் ஒவ்வொருவரின் உடலிலும் புகுந்து வெளியேறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை நியூட்ரினோக்கள் எடையற்றவை என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால், கடந்த 1998-ம் ஆண்டில்தான் நியூட்ரினோக்களுக்கும் எடை உள்ள விவரம் தெரியவந்தது.

 இந்த நியூட்ரினோக்கள் குறித்த மேலும் பல அரிய உண்மைகளை கண்டுபிடிக்க பலத்த போட்டிகளுக்கு மத்தியில் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதற்காகவே உலகெங்கிலும் நியூட்ரினோ அறிவியற் கூடங்களை கட்டும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

 நியூட்ரினோ அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா ஏற்கெனவே பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளது. கடந்த 1965-ம் ஆண்டில் கர்நாடகத்திலுள்ள கோலார் தங்க சுரங்கத்தில்தான் நியூட்ரினோக்கள் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அந்த சுரங்கங்கள் தற்போது மூடப்பட்டுவிட்டதால் இத்திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்த தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 இதற்காக மலை உச்சியிலிருந்து 1.3 கி.மீ. ஆழத்திற்கு பெரிய பாதாள குகை தோண்டப்படுவதோடு, மலையின் வெளிப்பாகத்திலிருந்து 2.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக இந்த குகையை அடைய வேண்டும். இந்த பாதாள குகையில் சுமார் 50,000 டன் எடையுள்ள இரும்பிலான நியூட்ரினோ காணும் இயந்திரம் பொருத்தப்பட்டு, முதற்கட்டமாக காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

 அமெரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலுள்ள அதிஆற்றல் அலைகள் உண்டாக்கும் நியூட்ரினோக்கள் பூமியினுள்ளே ஊடுருவி சிங்காரா ஆய்வுக்கூடத்தை சென்றடையும் வகையிலான இத் திட்டத்தில், பூமியினுள்ளே ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் கடந்து வரும் இந்த நியூட்ரினோக்கள் பல புதிய அறிவியல் உண்மைகளை விளக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் எவ்விதமான கதிர் வீச்சு பொருள்களும் பயன்படுத்தப்படமாட்டாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதோடு, நியூட்ரினோ ஆராய்ச்சிக்கும், அணு ஆராய்ச்சிக்கும் எவ்வித தொடர்புமில்லையென கூறுகின்றனர். ஆனால் உலகின் 10 செழிப்பு மிகுந்த பல்லுயிர் பெருக்க மண்டலங்களில் ஒன்றான நீலகிரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

 இதுதொடர்பாக நீலகிரி சுற்றுச்சூழல் சங்க செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.ஜெயப்பிரகாஷ் கூறுகையில், அறிவியல் ஆய்வு தொடர்பான இத்திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும் 300 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்தியாவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியை தேர்வு செய்திருப்பது ஏற்க முடியாததாகும்.

 இத்திட்டம் செயல்படவுள்ள பகுதிக்கு மிக அருகில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. ஆசிய யானைகளின் வாழ்விடமான இப்பகுதியில் தற்போது புலிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்காகவே மத்திய அரசு பல நூறு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்துக்காக தோண்டப்படும் மண் குவியல்களை அப்புறப்படுத்துவதால் வன விலங்குகளுக்கும், மாயார் ஆற்றுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும். இதன் விளைவு பவானிசாகர் வரை எதிரொலிக்கும்.

 ஏற்கெனவே மசினகுடி பகுதியில் கட்டுப்பாடற்ற சுற்றுலாவினால் மக்கள் பெருக்கம் அதிகரித்துவரும் சூழலில் இத்திட்டம் மேலும் பல சிக்கல்களை உருவாக்கும் என்பதால் இதை நீலகிரியில் செயல்படுத்தக்கூடாது என தெரிவித்தார்.

 அதேபோல தமிழக பசுமை இயக்கத்தின் இணைச் செயலர் ஜெயச்சந்திரன் கூறுகையில், மத்திய அரசு இப்பகுதியில் புலிகளை பாதுகாப்பதற்காக கோடிக் கணக்கான ருபாய்களை ஒதுக்கியுள்ள சூழலில், இப்பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும் பல நூறு கோடி ரூபாய்களை செலவழிப்பதாக குற்றம் சாட்டினார்.

 பூகம்பம் ஏற்படக்கூடிய பகுதிகளில் 4-வது மண்டலத்தில் இடம் பெற்றுள்ள நீலகிரியில், ஏற்கெனவே பைக்காரா புனல் நீர் மின் திட்டத்திற்கான மத்திய சுற்றுச் சூழல் துறையின் ஒப்புதல் கிடைக்காத நிலையில் மேலும் ஒரு பாதாள சுரங்கத்தை தோண்டுவது நமக்கு நாமே அழிவை தேடிக்கொள்ளும் செயலெனவும் தெரிவித்தார்.

 இத்திட்டத்திற்காக தோண்டப்படும் 6 லட்சம் டன் மக்குகளை வெளியேற்ற அருகில் எங்குமே இடமில்லாத சூழலில், இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக இத்திட்டத்திற்காக ஆய்வு நடத்திவரும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேத்தமேடிக்கல் சயின்ஸ் அமைப்பினர் நீலகிரியை தெரிவு செய்துள்ளது உள் நோக்கம் கொண்டதெனவும், இரண்டு சரணாலயங்களில் புலிகள் பாதுகாப்பு திட்டப்பகுதியை கடந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம் நீலகிரியில் எச்சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டமெனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.