/

அரசு சாலைக்கு தனியார் நிறுவனம் சுங்கம் வசூல்!

சேலம், ஆக. 1: சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் 2007-ல் அமைக்கப்பட்ட நான்கு வழிச் சாலைக்கு தனியார் நிறுவனம் சுங்கம் வசூலிக்கவுள்ள பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த பாஜக ஆட்சிய

News image
Updated On :25 டிசம்பர் 2023, 2:59 pm

க. தங்கராஜா

சேலம், ஆக. 1: சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் 2007-ல் அமைக்கப்பட்ட நான்கு வழிச் சாலைக்கு தனியார் நிறுவனம் சுங்கம் வசூலிக்கவுள்ள பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த பாஜக ஆட்சியின்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ.) சார்பில் நாடு முழுவதும் நான்கு வழிப் பாதை திட்டம் (தங்க நாற்கரச் சாலை) தொடங்கப்பட்டது.

இதில் சில இடங்களில் அரசு மூலமும், சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள் மூலமும் சாலை அமைக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர்கள் அவர்கள் அமைக்கும் சாலைகளில் சுங்க வசூல் மையம் அமைத்து குறிப்பிட்ட காலம் (20 ஆண்டுகள்) வரை செலவு செய்த தொகையை வசூலித்துக் கொள்ளலாம்.

நாட்டின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலையான என்.எச்.7 (வாரணாசி- கன்னியாகுமரி) சாலை சேலம் வழியாகச் செல்கிறது. இதில் சேலம் மாவட்டம் ஆரம்பிக்கும் பகுதியான தொப்பூர் அருகேயுள்ள பாளையம் பகுதியில் இருந்து, சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதி வரை 2007-ம் ஆண்டிலேயே பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இதில் பாளையம் முதல் தும்பிப்பாடி வரையிலான சாலையை அரசும், தும்பிப்பாடி முதல் குரங்குசாவடி வரையிலான சாலையை பகீரதா என்ற நிறுவனமும், குரங்குசாவடி முதல் சீலநாயக்கன்பட்டி வரையிலான சாலையை ரங்கநாதன் அன் கோ நிறுவனமும் அமைத்தன.

அரசு வழங்கிய பணம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் மேற்கண்ட இரண்டு நிறுவனங்களுக்கும் சுங்கம் வசூலிக்கும் உரிமம் தரப்படவில்லை.

இதேபோல் அரசு அமைக்கும் சாலைகளில் சுங்கம் வசூலிக்கப்படுவதும் இல்லை. இதற்கிடையே சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் முதல் நாமக்கல் வரை உள்ள 41 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்க எம்.வி.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு கடந்த 2006 ஆகஸ்டில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

ரூ.243.76 கோடி திட்ட மதிப்பீட்டில் 24 மாதங்களில் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டு, இப்போது ஏறத்தாழ பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் இந்த சாலைக்கு சுங்கம் வசூலிப்பதில் இப்போது பிரச்னை கிளம்பியுள்ளது.

தான் அமைத்த சீலநாயக்கன்பட்டி முதல் நாமக்கல் வரையிலான சாலையில் சுங்கச் சாவடி அமைப்பதற்கு பதிலாக, தும்பிப்பாடி முதல் குரங்குச்சாவடி வரை 2007-ல் அரசு அமைத்த சாலைக்கு பெரியார் பல்கலைக்கழகம் அருகே எம்.வி.ஆர். நிறுவனம் இப்போது சுங்கச் சாவடி அமைத்துள்ளது.

இங்குள்ள சுங்கச் சாவடி பல்வேறு சட்ட விதிகளை மீறி அமைந்துள்ளதாகவும், இதை அகற்ற வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பஸ், லாரி உரிமையாளர் சங்கத்தினர், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பாஜக சேலம் புறநகர் மாவட்டத் தலைவரும், வழக்கறிஞருமான பி.சிவராம் கூறியது:

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பதற்கு விதிகள் உள்ளன.

மாநகராட்சி எல்லைக்கு 10 கி.மீட்டருக்கு அப்பாலும், பேரூராட்சி, நகராட்சி பகுதிக்கு 5 கி.மீட்டருக்கு அப்பாலும்தான் சுங்க வசூல் மையம் அமைக்கப்பட வேண்டும்.

இதேபோல் சுங்கச் சாவடிகளுக்கு இடையில் 50 கி.மீ. தூரம் இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் பெரியார் பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ள சுங்கச் சாவடி, தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகேயுள்ள பாளையம் சுங்கச் சாவடியில் இருந்து 34-வது கி.மீட்டரில் உள்ளது.

இதேபோல் சேலம் மாநகராட்சி எல்லையில் இருந்து 4-வது கி.மீட்டரிலும், ஓமலூர் பேரூராட்சியில் இருந்து 3-வது கி.மீட்டரிலும் உள்ளது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக எம்.வி.ஆர். நிறுவனம் அமைத்த சாலையில் இந்த வரி வசூல் மையம் அமையாமல், சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு முன்னதாகவே அமைந்துள்ளது. இதற்குக் காரணம், சேலம்- நாமக்கல் சாலையில் வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவு. ஆனால் சேலத்தில் இருந்து தருமபுரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அங்கிருந்து சேலம் வழியாக கோவை, கேரளம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.

இதன் மூலம் ஏராளமான வருவாய் கிடைக்கும். இதற்காகவே விதிகளை மீறி தாங்கள் அமைக்காத சாலையில் சுங்க வரி வசூல் மையம் அமைத்துள்ளனர்.

இதேபோல் இந்தச் சாலைக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க வரியும் மிக அதிகமாக உள்ளது. ஓமலூரில் இருந்து சேலம் வரும் ஒருவர் வெறும் 8 கி.மீ. பயணம் செய்ய 68 கி.மீ. பயணிப்பதற்கான முழு தொகையையும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வாகன ஓட்டிகள், பஸ் -லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இந்த சுங்க வசூல் மையத்தை அகற்றி, விதிகளின்படி, அவர்கள் அமைத்துள்ள சேலம்- நாமக்கல் சாலையில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் மையத்தை அமைக்க வேண்டும் என்றார்.

இது குறித்து இத் திட்ட இயக்குநர் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) பொன்னையா கூறியது:

எம்.வி.ஆர். நிறுவனம் சேலம் -நாமக்கல் வரையிலான சாலையை மட்டுமே அமைத்துள்ளது உண்மைதான். இருப்பினும் கடந்த 2007-ல் அரசு அமைத்த ஓமலூர் -சேலம் சாலையை பராமரிக்கும் பணியையும் அவர்கள் கூடுதலாக பெற்றுள்ளனர்.

இதேபோல் கருப்பூர் ரயில்வே மேம்பாலத்தையும் அவர்கள்தான் கட்டி வருகின்றனர். இந்த சாலையில் அரசு சுங்க வசூல் மையம் அமைப்பதற்கு பதிலாக எம்.வி.ஆர். நிறுவனம் அமைத்துள்ளனர்.

வரும் 10-ம் தேதி முதல் இங்கு சுங்கம் வசூலிக்கப்படும். வசூலிக்கப்படும் தொகையில் சாலை பராமரிப்புக்கு 20 சதவீதம் போக, மீதி 80 சதவீதத்தை அவர்கள் அரசுக்கு செலுத்துவார்கள் என்றார்.

2007-ல் அரசு அமைத்த சாலைக்கு 2009-ல் தனியார் சுங்கம் வசூலிக்க அனுமதி அளித்தது எப்படி என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

சுண்டைக்காய் கால் பணம், சுமைக் கூலி முக்கால் பணம்...

சேலம்- தருமபுரி சாலையில் மாநகராட்சி எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சுங்க வசூல் மையம் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த வழியாக ஓமலூர் செல்பவர்கள்கூட பணம் செலுத்த வேண்டும்.

ஆனால் எம்.வி.ஆர். நிறுவனம் அமைத்த சேலம்- நாமக்கல் நெடுஞ்சாலையில் சுங்க வசூல் மையமே அமைக்கப்படவில்லை. இதனால் சேலம் -நாமக்கல் சாலையில் செல்பவர்கள் இலவசமாகவும், அதற்கு சம்பந்தமே இல்லாத சேலம்- தர்மபுரி சாலையில் செல்பவர்கள் சுங்கம் செலுத்த வேண்டும் என்ற வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேலத்துக்கு மிக அருகில் உள்ள ஓமலூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து சேலத்துக்கு தினசரி காய்கறிகள் வேன்களில் கொண்டு வரப்படுகின்றன.

ஒரு லிட்டர் டீசல் 37 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் மிகக் குறைந்த தொலைவு (8 கி.மீ.) உள்ள இந்த சாலையை ஒரு முறை கடக்க, ஒரு வாகனம் ரூ.34 செலுத்த வேண்டும் என்ற இழிநிலை உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.