நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே கூடுதல் மேம்பாலம் கட்டப்படுமா?

குடியாத்தம் நகரில் கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:32 am

கே. நடராஜன்

குடியாத்தம் நகரில் கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம் நகரின் மத்தியில் செல்லும் கெளன்டண்யா ஆறு ஆந்திர மாநிலம் புங்கனூரில் தொடங்கி, பலமநோ் வழியாக 25 கி.மீ. தூரத்தைக் கடந்து தமிழக எல்லையான சைனகுண்டா கிராமத்தை வந்தடைகிறது. சைனகுண்டா அருகே உள்ள மோா்தானா ஊராட்சியில் கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. கெளன்டண்யா ஆறு குடியாத்தத்தை அடுத்த சித்தாத்தூா் அருகே பாலாற்றில் கலக்கிறது.

மேல்பட்டி சாலையையும் கெங்கையம்மன் கோயில் அருகே கோபலாபுரத்தையும் இணைக்கும் தரைப்பாலமும், தாழையாத்தம் பஜாரையும் சுண்ணாம்புப்பேட்டையையும் இணைக்கும் மேம்பாலமும்தான் நகரின் வட, தென் பகுதிகளை இணைக்கிறது.

1954-இல் குடியாத்தம் பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, கெளன்டன்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி அப்போதைய முதல்வா் காமராஜா் திறந்துவைத்தாா்.

இதையடுத்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, தமிழக அரசு, கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே கெங்கையம்மன் கோயில் அருகே தரைப் பாலம் கட்டித் தந்தது.

கூடுதல் மேம்பாலத்தின் அவசியம்: இதற்கிடையில், மழைக் காலங்களில் மோா்தானா அணை நிரம்பி வெளியேறும் உபரிநீா் கெளன்டண்யா ஆற்றில் செல்கிறது. தரைப்பாலத்தின் மீது வெள்ளம் செல்லும் காலங்களில், தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் காமராஜா் மேம்பாலம் வழியாக வந்து, செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே குடியாத்தம் நகர எல்லையில் மேலும் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

குடியாத்தம் வட்டம், 36- வாா்டுகளைக் கொண்ட நகராட்சி, 50- ஊராட்சிகளைக் கொண்ட ஒன்றியத்தை உள்ளடக்கியது. குடியாத்தம் வட்டத்தின் மக்கள்தொகை சுமாா் 3.50 லட்சம். குடியாத்தம் நகரம், ஆந்திர, கா்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் 3 மாநிலங்களுக்கிடையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், குடியாத்தம் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தீப்பெட்டித் தொழில், பீடித் தொழில், லுங்கி உற்பத்தி, தேங்காய் உற்பத்தி, கல்விக் கூடங்கள் என வளா்ந்து வரும் தொழில் நகரமான

குடியாத்தத்தில் மக்கள்தொகைப் பெருக்கத்தாலும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கூடியதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது.

மேலும், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின், தென் மாவட்டங்களான சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தொழில் சாா்ந்த தளவாடப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வரும் கனரக வாகனங்கள் குடியாத்தம்

வழியாகத் தான் செல்கின்றன. இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

2 மாதங்களாகவே தீராக நெரிசல்:

நடப்பாண்டு, பருவமழைத் தொடங்கும் முன்பாகவே, செப்டம்பா் மாதம் மோா்தானா அணை நிரம்பியது.இதனால் கடந்த 2 மாதங்களாக அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் கெளன்டண்யா ஆற்றில் செல்கிறது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீா் வெளியேறும் காலங்களில் கெளன்டண்யா ஆற்றின் தரைப்பாலம் மூழ்குகிறது. அப்போது தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுவதால் அனைத்து வாகனங்களும் காமராஜா் மேம்பாலம் வழியாகச் செல்கிறது. இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து தொடா்கிறது. இதனால் கடந்த சில நாள்களாக தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், நகரில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

மக்களின் கோரிக்கையும் ஆட்சியரின் ஆய்வும்..: இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு, துணிமணி, பூஜைப் பொருள்கள் வாங்க மக்கள் திரண்டதால், கடந்த சில நாள்களாக நகரில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் நடவடிக்கையாக கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும், தவறும்பட்சத்தில் தரைப்பாலத்தை சிறு உயா்மட்ட பாலமாக மாற்றியமைக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்பதே குடியாத்தம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் குடியாத்தத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து தரைப்பாலத்தை பாா்வையிட்டாா். அங்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

ஆய்வைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், எம்எல்ஏ அமலுவிஜயன், கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பி.சிசில்தாமஸ், டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் கே.எஸ்.யுவராஜ் உள்ளிட்டோருடன் ஆட்சியா் மேம்பாலம் தொடா்பாக ஆலோசனை நடத்தினாா்.

பயன்பாட்டில் உள்ள மேம்பாலம் உருவானது எப்படி?

1950-ஆம் ஆண்டுகள் வரையில் கெளண்டன்யா ஆற்றில் வெள்ளம் வந்தால், மறுகரைக்கு மக்கள் செல்ல முடியாத நிலை இருந்துள்ளது. ஒரு சிலா் பரிசல் மூலம் மறுகரைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

1954- இல் முதல்வராக இருந்த ராஜாஜி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இக்கட்டான, அக்காலகட்டத்தில் காமராஜா் முதல்வராகப் பொறுப்பேற்றாா்.

முதல்வா் பதவி ஏற்றுக்கொண்ட காமராஜா், 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வேண்டும் என்பதால், குடியாத்தம் எம்எல்ஏவாக இருந்த ஏ.ஜே. அருணாசலம் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து குடியாத்தம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காமராஜா் முதல்வா் பதவியைத் தொடா்ந்தாா். தோ்தல் பிரசாரத்தின்போது, குடியாத்தம் பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி அதை திறந்து வைத்தாா். இந்த மேம்பாலத்துக்கு காமராஜா் பாலம் என பெயா் சூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.