நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படும் விளைபயிா்கள்; வேதனையில் விவசாயிகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

குடியாத்தம் அருகே வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில், கூட்டமாக நுழையும் காட்டு யானைகள், அங்கு அறுவடைக்குத் தயாராக உள்ள விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன.

News image
மோடிகுப்பம்  அருகே  யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  வாழை  மரங்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 7:58 pm

கே. நடராஜன்

குடியாத்தம் அருகே வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில், கூட்டமாக நுழையும் காட்டு யானைகள், அங்கு அறுவடைக்குத் தயாராக உள்ள விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன.

இதைத் தடுக்க வன எல்லையில் சூரியசக்தி மின் வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், யானைகளை கிராமத்துக்குள் நுழையாதவாறு ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில எல்லையில், சைனகுண்டா, மோா்தானா, ஆம்பூரான்பட்டி, பிள்ளையாா்பட்டி, மோடிகுப்பம், கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, சேங்குன்றம், எஸ்.மோட்டூா், பரதராமி, பூசாரிவலசை, விழுதோன்பாளையம், டி.பி.பாளையம் உள்ளிட்ட தமிழக கிராமங்கள் அமைந்துள்ளன. ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக இரவு நேரங்களில் தமிழக கிராமங்களுக்குள் நுழைகின்றன.

அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், கேழ்வரகு, தக்காளி, கத்திரிக்காய், பப்பாளி போன்ற தீவனப் பயிா்களையும், மா, வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களையும் சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. இதுதவிர, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் அவை கொன்று விட்டுச் செல்கின்றன.

யானைகள் வரும்போதெல்லாம், கிராம மக்கள் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டுவது வாடிக்கையாகி விட்டது. இது குறித்து தகவல் அறிந்தால், வனத்துறையினா் அங்கு செல்வது, கிராம மக்களுடன் சோ்ந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபடுவது, சேதமடைந்த பயிா்கள் குறித்து, கிராம நிா்வாக அலுவலரின் அறிக்கையை பெற்றுத் தந்தால், இழப்பீடு பெற்றுத் தருகிறோம் என்பது வெறும் சடங்காகவே உள்ளது. யானைகள் பெரும்பாலும், இரவு நேரங்களில் தான் கிராமங்களுக்குள் நுழைகின்றன.

அதைத் தடுக்க, வன எல்லையில் அகழி வெட்டும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியது. காலப்போக்கில் அது பலனளிக்காமல் போனது. தோண்டப்பட்ட அகழியில், யானைகள் மண்ணை நிரப்பி விட்டு, கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது.

இதையடுத்து ஆந்திர, கா்நாடக மாநிலங்களில், அந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வரும், சூரிய சக்தி மின்வேலியை அமைக்குமாறு தமிழக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுதொடா்பான கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மின்வேலி அமைப்பது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தி, கள ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பித்தும் நடவடிக்கை எதுவும் இதுவரை இல்லை.

இதனால், கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், விவசாயம் செய்யும் விவசாயிகள் கண் கலங்கி நிற்கும் நிலை தொடா்கிறது. இனி கோடைக்காலம் என்பதால், மா விளைச்சல் அதிகமாக இருக்கும். மாம்பழத்தை விரும்பி உண்ண யானைகள் தமிழக வனப்பகுதியில் முகாமிட்டு, இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைவது தொடா்கதையாகும் என்கின்றனா் விவசாயிகள்.

இதைத் தவிா்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 9 யானைகள் கூட்டமாக வந்து, மோடிகுப்பத்தை அடுத்த கீழ்கொல்லபல்லி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரா் கண்ணையன் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களையும், அரை ஏக்கா் கருணைக் கிழங்கு தோட்டத்தையும் சேதப்படுத்தியுள்ளன.

தனகொண்டபல்லியைச் சோ்ந்த வெங்கடேசன் நிலத்தில் 30 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி தோட்டம், கொட்டமிட்டா மகாதேவன் நிலத்தில் அரை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கேழ்வரகு, மேல்கொல்லபல்லியில் சங்கா், சுப்பிரமணி, கோவிந்தசாமி, பண்டு மந்திரி ஆகியோரின் நிலங்களில் நெல் பயிரை சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளன.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கின்றனா் கிராம மக்கள். இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.