பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

தொடர் மழையிலும் நிரம்பாத மோர்தானா அணை: விவசாயிகள் வேதனை

அண்மையில் பெய்த தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் குடியாத்தம் அருகே உள்ள  மோர்தானா அணை நீரின்றி காட்சியளிப்பது விவசாயிகளை

News image
தொடர்  மழையிலும்  நிரம்பாத  மோர்தானா  அணை.
Updated On :31 ஜனவரி 2024, 9:52 am

கே. நடராஜன்


அண்மையில் பெய்த தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் குடியாத்தம் அருகே உள்ள  மோர்தானா அணை நீரின்றி காட்சியளிப்பது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தானா அணை குடியாத்தத்தில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநில எல்லையில், தமிழக வனப்பகுதியில் கௌன்டன்யா  ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் நீளம் 392 மீட்டர். உயரம் 23.89 மீட்டர். நீர்த்தேக்க அளவு 13.50 மீட்டர். அணையின் நீர் கொள்ளளவு 262 மில்லியன் கனஅடி. 
இந்த அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஜிட்டபல்லியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. அங்கிருந்து வலது, இடதுபுறக் கால்வாய்கள், கௌன்டன்யா ஆறு வழியாக  ஏரிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கௌன்டன்யா ஆற்றில் வரும் தண்ணீர் சேம்பள்ளி, மீனூர், அக்ராவரம் வழியாக பெரும்பாடியில் உள்ள தடுப்பணையை அடைகிறது. 
அங்கிருந்து குடியாத்தம் பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நெல்லூர்பேட்டை ஏரிக்கு தண்ணீர் செல்லும். தடுப்பணையில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் போடிப்பேட்டை வழியாக குடியாத்தம் நகருக்குள் சென்று வேப்பூர் அருகே பாலாற்றில் கலக்கிறது.
இடதுபுறக் கால்வாய் வழியாகச் செல்லும் தண்ணீர் பாக்கம், கொண்டசமுத்திரம், சேத்துவண்டை, காங்குப்பம், கே.வி.குப்பம் வழியாகச் சென்று லத்தேரி அருகே உள்ள ராஜாதோப்பு அணையில் நிறைவடைகிறது. வலதுபுறக் கால்வாய் லிங்குன்றம், செட்டிகுப்பம், மேல்முட்டுகூர், கூடநகரம், மேலாலத்தூர், பட்டு, ஒலக்காசி, சித்தாத்தூர் வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது. 
குடியாத்தம், கே.வி. குப்பம் பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த அணைக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள புங்கனூர், பலமநேர், மதனாப்பள்ளி ஆகிய பகுதிகளிலும், அதையொட்டிய வனப்பகுதியில் பெய்யும் மழையாலும் தண்ணீர் வரும். ஆந்திர மாநில அரசு அம்மாநில வனப்பகுதியில் ஆங்காங்கே ஏராளமான தடுப்பணைகளைக் கட்டிவிட்டதால் கடந்த சில ஆண்டுகளாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. 
ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பினால் மட்டுமே மோர்தானா அணைக்கு தண்ணீர் வரும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் அண்மையில் பெய்த தொடர் மழையிலும் அணைக்கு தண்ணீர் வரவில்லை. சுமார் ஒரு அடி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்துள்ளது. 
மேலும், அணையின் கரையோரங்களில் உள்ள மலைகளில் இருந்து கற்களும், மண்ணும் சரிந்து அணைப்பகுதியில் விழுந்துள்ளன. கடந்த 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட இந்த அணை இதுவரை 6 முறை நிரம்பியுள்ளது. கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு நிரம்பியது. இந்த அணை கட்டப்பட்டது முதல் இதுவரை தூர்வாரவில்லை. 
இந்த அணையிலிருந்து நெல்லூர்பேட்டை ஏரி, செட்டிகுப்பம் ஏரி, தட்டாங்குட்டை ஏரி, அக்ராவரம் ஏரி, பெரும்பாடி ஏரி, எர்த்தாங்கல் ஏரி, அம்மணாங்குப்பம் ஏரி, வேப்பூர் ஏரி, கீழாலத்தூர் ஏரி, நெட்டேரி, பசுமாத்தூர் ஏரி, காவனூர் ஏரி, சித்தேரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.
இந்த அணை மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், மேற்குறிப்பிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கினால் குடியாத்தம் நகரம், ஒன்றியம், கே.வி.குப்பம் ஒன்றியத்தின் ஒரு பகுதி என நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்களின் குடிநீர்த் தேவையும் பூர்த்தியடையும்.  அண்மையில் பெய்த தொடர் மழையிலும் மோர்தானா அணைக்கு நீர்வராதது இப்பகுதி விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. 
தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுடன் பேசி அம்மாநில வனப்பகுதியில் கட்டியுள்ள தடுப்பணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.