திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள்...!

ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:00 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் அரங்கல்துருகம், சுட்டக்குண்டா, பொன்னப்பல்லி, காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, பாரதி நகர், அபிகிரிப்பட்டரை, காரப்பட்டு, பழைய அரங்கல்துருகம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் அரங்கல்துருகம் கோட்டை தர்கா, மத்தூர் கொல்லை நந்திசுனை நீர்வீழ்ச்சி, காட்டு வெங்கடாபுரம் முனியப்பன் ஏரி நீர்வீழ்ச்சி, பொன்னப்பல்லி இடையன்கல், சுட்டக்குண்டா ராணுவ முகாம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன.
இதில் சுட்டக்குண்டா கிராமம் அருகே அக்காலத்தில் ராணுவத்தினர் பயன்படுத்திய முகாம் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த முகாம் உள்ளது. 
அக்காலத்தில் ராணுவத்தினர் ஆம்பூர், பாங்கி ஷாப், வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, ராள்ளக்கொத்தூர், மங்கம்மா கிணறு, செட்டேரி , இடையன் கல், பொன்னப்பல்லி, தொட்டிக்கிணறு, சுட்டக்குண்டா, சிலாமரம் பாறை, தொட்டி மடுவு, பாலாமணி நெட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள 89 பெத்தூர் வரை தங்களுக்காக பிரத்தியேகமாக சாலையை உருவாக்கி  "ராணுவ சாலை' என்று பெயரிட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். இச்சாலையில் பயணிக்க கால்நடை மேய்ப்போர், விறகு சேகரிப்போர், தமிழக பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம், செல்வோர், அங்கிருந்து தமிழக பகுதிகளுக்கு வருவோர் என பொதுமக்களையும் ராணுவ சாலையை பயன்படுத்த அனுமதித்துள்ளனர்.
தமிழக மலையோர எல்லைக் கிராமமான சுட்டக்குண்டாவில் இருந்து, ஆந்திர மலையோர எல்லை கிராமமான 89 பெத்தூர் வரை சுமார் 6 கி.மீ. தூரமே வனப்பகுதியில் இச்சாலை உள்ளதால், பெரும்பாலானோர் இதை போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்தனர். அக்காலத்தில் ராணுவ சாலை நெடுகிலும் மைல்கல்கள் நடப்பட்டிருந்தது. அதேபோல் ராணுவ சாலையில் ஜல்லிக்கல் சாலை அமைக்க பயன்படுத்திய உருளை கல்களும் ஆங்காங்கே உள்ளன.
ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, மாதனூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆந்திரம், கர்நாடக மாநிலப் பகுதிகளுக்கு செல்வோர் இச்சாலையைப் பயன்படுத்தி வந்தனர். மேலும், குறைவான நேரத்திலும்,  குறைவான தூரத்திலும் உள்ளதால் 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் இச்சாலையைப் பயன்படுத்தி வந்தனர். 
இந்த வனப்பகுதியில் செல்லும் மங்கம்மா கிணறு, செட்டேரி, தொட்டிக்கிணறு, சிலாமரம் பாறை, தொட்டி மடுவு, பாலாமணிநெட்டு பகுதிகளில் பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட நீர்நிலைகள் வழிப்போக்கர்கள் நீர் அருந்தவும் வசதியாக இருந்துள்ளது.
இந்நிலையில் ராணுவ சாலையையும், சுட்டக்குண்டா கிராமத்தில் இருந்த ராணுவ முகாமையும் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளதால், படிப்படியாக வனப்பகுதியில் உள்ள இச்சாலை பாழடைந்து போனது.
 மேலும், வாகனங்ளில் செல்வோர், கால்நடையாய் செல்வோர்,  ஆடு மாடுகள் மேய்ப்போர், விறகு சேகரிப்போர், விவசாயத் தேவைகளுக்காக இலை தழை பறிப்போர், தேன் எடுப்போர், கிழங்கு தோண்டுவோர் இந்த ராணுவ சாலையைப் பயன்படுத்தி வருவதும் குறைந்தது. வனப்பகுதியில் கொடிய விலங்குகளின் நடமாட்டம், வனத் துறையின் கெடுபிடி அதிகரித்ததும் இச்சாலையை பயன்பாட்டில் இல்லாமல் போனதற்கு காரணம்  எனக் கூறப்படுகிறது.
சுமார் 6 கி.மீ.தூரமே உள்ள இச்சாலையில் பெண்களையோ, குழந்தைகளையோ பாதுகாப்பு கருதி அழைத்து செல்வது இல்லை. தமிழக எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஆந்திர மாநில கிராமங்களுக்குச் செல்வோர் 6 கி.மீ.தூரம் செல்ல 60 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.  
இந்நிலையில் ஆந்திர மாநில பகுதியில் வனப்பகுதியில் உள்ள ராணுவ சாலையை ஒட்டி அமைந்து உள்ள பகுதிகளில் உள்ள நன்னியாலாவில் கும்கி யானை முகாம், வன உயிரின பூங்கா, வீரணமலை நீர்வீழ்ச்சி,  விஜிலாபுரத்தில் அமைய உள்ள குப்பம் உள்ளூர் விமான நிலையம், ராமகுப்பம் விளையாட்டு அரங்கம், அம்மா பகவான் ஆசிரமம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வசதியாக ஆந்திர அரசு இரு வழிச்சாலையை அண்மையில்  அமைத்துள்ளது. புதியதாக அமைக்கப்பட்ட இச்சாலைகள் ஆந்திர மலையோர கிராமமான 89 பெத்தூர் வரை அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல் தமிழக வனப்பகுதியில் இருந்து 3 கி.மீ.தூரம் மட்டும் உள்ள சாலையை தமிழக அரசும், ஆந்திர வனப்பகுதியில் 3 கி.மீ.தூரம் உள்ள சாலையை ஆந்திர அரசும் புனரமைத்தால் இரு மாநில மக்களின் சாலைப் பிரச்னை தீரும். 
செல்லிடப்பேசி, இணையதளம், ஏவுகனை தொழில்நுட்பம் என தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் இந்த விஞ்ஞான யுகத்தில், படித்த  இளைஞர்கள் கூட காட்டு வழியில் கால்நடையாய் நடந்து செல்லும் அவலம் தொடர்ந்து கொண்டே உள்ளது.
எனவே, பழைய ராணுவ சாலையை புனரமைத்து சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.