திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

ஆம்பூர் காப்புக்காடுகளுக்கு அருகில் ஆந்திரம் அமைக்கும் வன உயிரினப் பூங்கா...!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் காப்புக் காடுகளை ஒட்டியுள்ள ஆந்திர வனப் பகுதியில் அம்மாநில அரசு சார்பில் வன உயிரினப் பூங்கா அமைக்கப்பட

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:52 am

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் காப்புக் காடுகளை ஒட்டியுள்ள ஆந்திர வனப் பகுதியில் அம்மாநில அரசு சார்பில் வன உயிரினப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கு  முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 ஆம்பூர் வனச்சரக காப்புக்காடுகளையொட்டி உள்ளது கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம்.  இந்தக் காடுகளில் நன்னியாலா அருகே "கும்கி' யானைகள் முகாம் உள்ளது.  இந்த முகாமில் இரண்டு யானைகளை ஆந்திர வனத் துறையினர் பராமரித்து வருகின்றனர். 
இம்முகாமில் உள்ள யானைகள் ஆந்திரத்தில் சித்தூர், கடப்பா, நெல்லூர், கர்னூல், அனந்தப்பூர், விஜயவாடா மாவட்ட  வனப் பகுதிகளில் உள்ள யானைகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வந்தால், அவற்றை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்ட இந்த கும்கி யானைகளை ஆந்திர வனத் துறையினர் பயன்படுத்துகின்றனர்.
 நன்னியாலா கும்கி யானைகளைக் காண பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளனர். ஆந்திர மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்தும் அன்றாடம் வருகின்றனர். விசேஷ நாள்கள், விடுமுறை நாள்களில் யானைகளைப் பார்க்க திருவிழாக் கூட்டம் போல் திரண்டு செல்கின்றனர்
 ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பம் தொகுதியில் இந்த நன்னியாலா "கும்கி' யானைகள் முகாம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட ஆந்திர வனத் துறையினர், முதல்வரின் கவனத்துக் கொண்டு சென்றனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு நன்னியாலா "கும்கி ' யானைகள் முகாமை மேலும் விரிவாக்க முடிவெடுத்தார்.
நன்னியாலா கும்கி யானைகள் முகாமை ஒட்டி சுமார்  50 ஏக்கர் பரப்பளவில் வன உயிரினப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்காக நிலத்தை சமன்படுத்தும் பணி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. 
 முதல் கட்டமாக இதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக வனத்
துறையினர் தெரிவித்தனர்.
இந்த உயிரின பூங்கா அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்னியாலா வர உள்ளார். 
அதற்காக அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தெலுங்கு தேச பிரதிநிதிகள் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டம் நன்னியாலா கும்கி யானைகள் முகாம் வளாகத்தில் திங்கள்கிழமை (ஜனவரி1) நடைபெற்றது.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி பொறுப்பாளர் மனோகரன் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியது: 
நன்னியாலாவில் அமைய உள்ள  "வன உயிரின பூங்கா "  ஆந்திர மாநில மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். 
இந்த உயிரினப் பூங்காவுக்கு ஆந்திர மாநில மக்கள் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து போக நெடுஞ்சாலைகள் புதியதாக போடப்பட்டு வருகின்றன. அதே போல் நன்னியாலா உயிரினப் பூங்கா அருகில் உள்ள இராமகுப்பத்தில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானமும் அமைய உள்ளது.  
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் அன்றே நடைபெற உள்ளது.  முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். தமது தொகுதியில் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார் என்றார்.
குப்பம் தொகுதியின் வனச்சரகர் கண்ணப்ப நாயுடு கூறுகையில் "நன்னியாலாவில் வன உயிரினப் பூங்கா சுமார் 50 ஏக்கரில் அமைய உள்ளது. 
விருந்தினர் விடுதிகள், உணவகங்கள், சிற்றுண்டியகம், சிறுவர் பூங்கா, மீன் பண்ணை, மான் பண்ணை, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான வனம் மற்றும் சுற்றுச்சூழுல் குறித்த கருத்தரங்கம், கூட்டங்கள் நடத்த இணைய தள வசதியுடன் கூடிய கருத்தரங்கக் கூடம், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளைப் பார்வையிட நடைப்பாதை, யானைகள் மேல் சவாரி செய்ய "யானைகள் அம்பாரி ',சுற்றுலாப் பயணிகள் மகிழுந்தில் சென்று வனவிலங்குகளை பார்வையிட வசதியாக பாதை வசதி, சுமார் 100 அடி உயரத்தில் கவுண்டன்யா வனத்தை பார்வையிட வசதியாக "பார்வை கோபுரம் ' ஆகியவை அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார்.
 தமிழக எல்லையில் சாலை வசதிக்கு கோரிக்கை :ஆம்பூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் இந்த வன உயிரினப் பூங்கா அமைய உள்ளது.  அம்மாநில எல்லை வரையில் ஆந்திர அரசு சாலை அமைத்துள்ளது.  ஆனால் தமிழக எல்லைப் பகுதியில் சாலை வசதி இல்லை.  
சுமார் 6 கி.மீ. தொலைவு வரையில் தமிழக எல்லையில் சாலை அமைத்துவிட்டால் ஆந்திர மாநிலத்திற்கு எளிதாகச் சென்று வரலாம்.  தமிழக மக்களும் அந்த வன உயிரினப் பூங்காவுக்கு சென்று வரமுடியும்.  எனவே தமிழக அரசு சுமார் 6 கி.மீ.  தொலைவுக்கு சாலை அமைக்க வேண்டுமென ஆம்பூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.