//

கழிப்பறை வசதி: ரயிலும் இல்லை, நிலையத்திலும் இல்லை: பயணிகள் கடும் அவதி

வேலூரில் இருந்து சென்னை செல்லும் புறநகர் ரயில்களில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில்களில் மட்டுமன்றி, வேலூர் கண்டோன்மென்ட் ரயில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:09 pm

என். தமிழ்ச்செல்வன்

வேலூரில் இருந்து சென்னை செல்லும் புறநகர் ரயில்களில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில்களில் மட்டுமன்றி, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலும் கழிப்பறைகள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
வேலூர் நகரில் இருந்து சென்னைக்கு பணி நிமித்தமாகவும், உயர் கல்விக்காகவும் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இவர்கள் பெருமளவில் ரயில்களையே பயன்படுத்துகின்றனர். அதிலும், வேலூரிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை சென்று, அங்கிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை செல்லும் புறநகர் ரயிலில் அதிகளவில் மக்கள் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், சென்னைக் கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயிலானது வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் அதிகாலை 6 மணியளவில் புறப்படுகிறது. ஆனால், அந்த ரயிலில் கழிப்பறை வசதி இல்லாததால், அதிகாலை நேரத்தில் அவசர கதியில் வீடுகளிலிருந்து கிளம்பி வருவோர், பயண நேரத்தில் இயற்கை உபாதையால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இரவு 11 மணியளவில் வேலூருக்கு வரும் அந்த புறநகர் ரயில் கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் சற்று தள்ளி ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், அதிகாலையில் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ரயில் எங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் குழப்பமடைகின்றனர்.
மேலும், ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கும், ரயில் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கும் இடைவெளி மிக அதிகமாக உள்ளது. இதனால், அதிகாலை நேரத்தில் அவசர கதியால் வருவோர் ரயில் நிலைய கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு புறநகர் ரயிலில் ஏறுவதற்கு பெரும் சிரமமடைகின்றனர். பல நேரங்களில் ரயில் புறப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் கழிப்பறையைப் பயன்படுத்தாமலேயே மக்கள் அவதியுடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இதுகுறித்து வேலூர் நகர ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் என்.அசோகரன் கூறியதாவது:
வேலூர் ரயில் நிலையத்தில் அதிகாலை 6 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில் சென்னைக் கடற்கரைக்கு 9.30 மணிக்கும், பிறகு காஞ்சிபுரத்துக்கு 11 மணியளவிலும் சென்றடைகிறது. இந்நிலையில், அதிகாலை நேரத்தில் அவசரகதியில் வருவோர் பெரும்பாலும் ரயில் நிலைய கழிப்பறையையே பயன்படுத்துகின்றனர்.
ஆனால், கழிப்பறை ரயில் நிலையத்தின் மேற்குப்புற எல்லையில் இருப்பதுடன், புறநகர் ரயிலானது கிழக்குப்புற எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதால் அதிகாலை நேரத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பயணிகளின் இந்த சிரமங்களை கவனத்தில் கொண்டு வேலூர் கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக் கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயிலில் கழிப்பறை வசதி ஏற்படுத்திடவும், ரயில் நிலையத்தில் கூடுதல் கழிப்பறைகளை அமைக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேலூர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலை பயணிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்றார். இதுகுறித்து வேலூர் கன்டோன்மெண்ட் ரயில் நிலையக் கண்காணிப்பாளர் ஜி.அரங்கநாதன் கூறியதாவது:
புறநகர் ரயிலில் கழிப்பறை வசதி செய்வது தொடர்பாக பயணிகளின் கோரிக்கைகள் உயரதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
அதிகாலை நேரத்தில் அந்த ரயிலை பயணிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலை நேரத்தில் ரயில் நிலைய பொதுக் கழிப்பறையை மட்டுமன்றி பயணிகள் தங்கும் அறையிலுள்ள கழிப்பறையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.