எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

கனவாகிப் போனபுதை சாக்கடைத் திட்டம்

குடியாத்தம் நகரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதை சாக்கடைத் திட்டம் கனவாகிப் போனது. இதைச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:29 am

கே. நடராஜன்

குடியாத்தம் நகரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதை சாக்கடைத் திட்டம் கனவாகிப் போனது. இதைச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

குடியாத்தம் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல்கட்ட நிதி ரூ. ஒரு கோடி திரும்பப் பெறப்பட்டதால், திட்டம் முடங்கி விட்டது. மீண்டும் இத்திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

36 வார்டுகளைக் கொண்டது குடியாத்தம் நகராட்சி. இந்நகரம் சுமார் 10 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்நகரில் புதை சாக்கடை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிதியிலிருந்து ரூ. 21 லட்சம் மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து முதல்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கின.

இத்திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரை மறுபயன்பாட்டுக்கு உள்படுத்த கால்வாய்கள் அமைக்கவும், சுமார் 40 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.

அதற்காக, இந்திரா நகர், உள்ளி, அம்மணாங்குப்பம், எர்த்தாங்கல், உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை தேர்வு செய்யும் பணி பல மாதங்கள் நடைபெற்றது. இதில் இந்திரா நகர், அம்மணாங்குப்பம் ஆகிய கிராமங்களில் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்திரா நகர் நிலம், கௌண்டன்யா நதியின் ஆற்றுப் படுகை என்பதாலும், அம்மணாங்குப்பம் கிராமம் நீர்வரத்துப் பகுதி என்பதாலும், அந்த இடங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன. அதையடுத்து இத்திட்டத்துக்கான ஆய்வுப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், குடியாத்தம் நகரில் புதை சாக்கடைத் திட்டம் அமைக்கப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

முதலில் ரூ. 38 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் திருத்திய மதிப்பீடான ரூ. 47 கோடிக்கு திட்டம் மாற்றம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து முதல் தவணையாக சில ஆண்டுகளுக்கு முன் ரூ. ஒரு கோடி குடியாத்தம் நகராட்சிக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே நகரில் புதை சாக்கடைத் திட்டம் அமைக்க வேண்டுமென்றால் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு 90 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், நாள்தோறும் குறைந்த அளவில் குடிநீர் விநியோகிக்கப்படுவதால், இத்திட்டத்தை குடியாத்தத்தில் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று அவர்கள் கூறி விட்டனர். மேலும் 90 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கிவைக்கத் தேவையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளோ, நீருந்து நிலையமோ, நீரேற்று நிலையமோ இல்லை என்பதாலும், இதற்கு போதிய நீராதாரமும், உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாததாலும், இத்திட்டத்தை நிராகரிக்க அரசுக்குப் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய முதல்கட்ட நிதி ரூ. ஒரு கோடியை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால் குடியாத்தம் நகரில் புதை சாக்கடைத் திட்டம் முடங்கி விட்டது. இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.