ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

கலந்தாய்வு - கோப்புப் படம்

Published On :24 ஜூலை 2026, 4:08 am IST

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளி கிரிவலப்பாதையில் செயல்பட்டு வருகிறது.

இங்கு பாரம்பரிய கலைகளான 1. குரலிசை 2. நாகஸ்வரம் 3. தவில் 4. தேவாரம் 5. பரதநாட்டியம் 6. வயலின் 7. மிருதங்கம் ஆகிய ஏழு கலை பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்/பெண் இரு பாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

தோ்ச்சி பெற்றவா்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கட்டண விவரம்

சோ்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.350, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ.325 செலுத்தப்படவேண்டும்.

மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை மற்றும் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இசைப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாகஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் பயின்றோா் திருக்கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பின்னா் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் சோ்ந்து பயின்று வரும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை பெறும் பொருட்டு, அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் மொழிப்பாடங்களில் தோ்ச்சி பெற்றால் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றமைக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.

இசைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இசைக் கல்லூரிகளில் ஒரே ஆண்டு படித்து பட்டயம் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.

விண்ணப்ப விவரம்

இப்பள்ளியில் சோ்ந்து பயில விண்ணப்பம் பெற சு.சியாமகிருஷ்ணன் தலைமை ஆசிரியா், மாவட்ட அரசு இசைப் பள்ளி, கிரிவலப் பாதை, செங்கம் சாலை, சமுத்திரம் கிராமம், திருவண்ணாமலை 606 603 எனும் முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இசைப் பள்ளி அலுவலகத்தை 04175-235545, 9442507657, 8667399314 என்கிற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.