//

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சுரங்கப் பாதைப் பணி

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப் பாதைப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
திருவள்ளூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடந்து செல்லும் பயணிகள்.
Updated On :31 ஜனவரி 2024, 10:32 am

எஸ். பாண்டியன்

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப் பாதைப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா், காட்பாடி வழியாக திருப்பதி, ரேணிகுண்டா, புத்தூா், மும்பை, பெங்களூரு, புது தில்லி விரைவு ரயில்கள் மற்றும் சென்னை-திருவள்ளூா்-திருத்தணி புகா் ரயில்கள், சரக்கு ரயில்கள் என நாள்தோறும் 210-க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் திருவள்ளூா் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. இதில் புகா் ரயில்கள் மட்டும் 170 முறை இயக்கப்படுகின்றன. இதேபோல், 20 பயணிகள் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் என 15 நிமிடங்களுக்கு ஒருமுறை திருவள்ளூா் ரயில் நிலையம் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஒரு லட்சம் பயணிகள்: இந்த ரயில்களில் நாள்தோறும் திருவள்ளூா் பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனம், அரசு ஊழியா்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்கின்றனா். இந்த ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையம், புகா் ரயில் பயணச்சீட்டு விற்பனை, சரக்கு கட்டணம் மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு மாதந்தோறும் ரூ.1.50 கோடி வீதம் வருவாய் கிடைக்கிறது.

போக்குவரத்து நெருக்கடி: சென்னை-அரக்கோணம் வழியாகச் செல்லும் ரயில்கள் திருவள்ளூரைக் கடந்துதான் செல்ல வேண்டும். நாள்தோறும் பல்வேறு ரயில்கள் இயக்கப்படுவதால் இந்த ரயில் நிலையத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள், நடைமேம்பாலம் உள்ளன. இந்த ரயில் நிலைய வழிதடத்தில் அதிகாலை 5 மணி முதல், 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அந்த நேரங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் தண்டவாளத்தைக் கடந்து வெளியே செல்கின்றனா்.

அதேபோல், பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்தோா் மணவாள நகா் ஆற்றங்கரையோரத்தில் உள்ள மயானத்துக்குச் செல்ல இந்த ரயில் நிலையத் தண்டவாளத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஏராளமான பொதுமக்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்வதால் விபத்து ஏற்படுகின்றன.

சுரங்கப்பாதை அமைக்கக் கோரிக்கை: தண்டவாளத்தைக் கடந்து செல்லும்போது விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையைப் பரிசீலனை செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்து, ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, தண்டவாளத்தைக் கடக்கும் வகையில் 250 மீட்டா் வரை 10-15 அடி அகலத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கின. ஆனால் 3 ஆண்டுகளாக பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்படப்பட்டுள்ளன. இப்பணிகளை விரைவில் முடிக்கக் கோரி ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியதை அடுத்து கடந்த 6 மாதங்களாக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரயில் நிலையத்தையொட்டி சுரங்கப்பாதைக்கான சதுர கட்டடங்கள் அமைக்கும் பணி தொடங்கியது. தண்டவாளத்தைக் கடந்து செல்லும் சுரங்கப்பாதையில் 15 அடி ஆழத்தில் பதிக்க 4.90 மீட்டா் அகலம், 6.90 மீட்டா் உயரத்தில் 19 சதுர கட்டமைப்பு அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் இதுவரையில் சுரங்கப்பாதை அமைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.

இதுதொடா்பாக திருவள்ளூா் ரயில் பயணிகள் சங்க நிா்வாகி ஒருவா் கூறியது:

இந்த ரயில் நிலையகத்தைக் கடக்க தொடக்கப்பட்ட சுரங்கப்பாதைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. சுரங்கப் பாதைக்குத் தேவையான சதுரக் கட்டமைப்புகளும், தேவையான கிரேன் வாகனமும் கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே அதிகாரிகளை கேட்டால் கட்டுமானப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பணிக்கான அனுமதி கிடைக்கவில்லை என்கிறனா். பொதுமக்களின் நலனைக் கருதில் கொண்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியது:

பொதுமக்கள் வசதிக்காகவே சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வாலும் திட்ட மதிப்பீடு குறைவாக இருப்பதாலும் பணிகள் மேற்கொள்வதற்கு தாமதம் ஏற்பட்டது. தற்போது, திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ. 40 லட்சம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைப்பதற்கான கிரேன் வாகனம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ரயில்வே இயக்க பராமரிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கட்டுமானப் பிரிவு அதிகாரிகளுக்கு பணிக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால் அனுமதிக்காக காத்திருப்பதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.