திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுமா?
திருவள்ளூர் நகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை நவீன முறையில் தரம் பிரிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் ரூ.5.94


திருவள்ளூர் நகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை நவீன முறையில் தரம் பிரிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் ரூ.5.94 கோடியில் அமைக்கப்பட்ட பசுமை உரக்குடில் மையம் சரியாகச் செயல்படாததால் அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சியில் நாள்தோறும் வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், ஒவ்வொரு நாளும் 27 வார்டுகளில் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் மொத்தம் 22 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
அவற்றை பொதுமக்களிடம் இருந்து வாங்கும்போதே மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கப்படுகின்றன. அதன்படி 11 டன் குப்பைகள் மக்கும் குப்பையாகவும், 11 டன் மக்காத குப்பையாகவும் உள்ளன.
அவை லாரிகளிலும், குப்பை அள்ளும் வாகனங்களிலும் சேகரிக்கப்பட்டு தலாக்காஞ்சேரி மற்றும் பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை உரக்குடில் மையங்களில் கொட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து மக்கும் குப்பைகள் இயற்கை உரங்களைத் தயாரிக்கவும், மக்காத குப்பைகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் மறுசுழற்சிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ரூ.5.94 கோடியில் பசுமை உரக்குடில்: நகராட்சியில் சேரும் குப்பைகளை அகற்றி நகரை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கு தூய்மை இந்தியா திட்டமும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டமும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் குப்பைகளைச் சுத்திகரிக்கும் நோக்கில் நுங்கம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5.94 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் பசுமை உரக்குடில் மையம் அமைக்கப்பட்டது. இங்கு உரக்கிடங்குகளும், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அரைப்பதற்கு நவீன இயந்திரமும் உருவாக்கப்பட்டன.
அதேபோல், பசுமை உரக்குடில் மையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இங்கு ஆள்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் மரக்கன்றுகள் பராமரிப்பின்றி வாடிக் கிடக்கின்றன. அவற்றுக்கான தடுப்புகள் சாய்ந்துள்ளன.
குறைந்த அளவில் பணியாளர்கள்: நகராட்சிப் பகுதியில் உள்ள துப்புரவுப் பணியாளர்களில் 19 பேர் நாள்தோறும் குப்பைகளைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதேபோல், மக்கும் குப்பைகளை அரைத்து இயற்கை உரமாகத் தயார் செய்து வந்தனர். பசுமை உரக்குடில் மையங்களில் தயார் செய்யப்பட்ட இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக பசுமைக் குடில் மையம் செயல்படாமல் இருந்து வருகிறது. இதன் விளைவாக தலாக்காஞ்சேரியில் குப்பைகள் குவிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பராமரிப்பின்றி.....: இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமச்சந்திரன் கூறியது:
ஒவ்வொரு நகராட்சியையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காக நாள்தோறும் குப்பைகளை அகற்றும் நோக்கத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் திருவள்ளூர் நகராட்சிக்கான பசுமை உரக்குடில் மையம் நுங்கம்பாக்கம் கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இங்கு மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணியில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குறைந்த அளவிலேயே ஈடுபட்டனர்.
அதுவும் கடந்த சில நாள்களாக பணியாளர்கள் வராத நிலையில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி காய்ந்து வருவதோடு, அவற்றின் தடுப்புகள் சாய்ந்து விட்டன. எனவே எந்த நோக்கத்திற்காக பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தலாக்காஞ்சேரியில் மலை போல் குப்பைகள் குவிந்து வருகின்றன என்றார் அவர்.
59 டன் இயற்கை உரம் தயார்: இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது:
திருவள்ளூர் நகராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் தலாக்காஞ்சேரி பகுதியிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள பூங்காக்களில் உரக்குடில்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், திருவள்ளூர் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தில் பசுமை உரக்குடில் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நகராட்சி துப்புரவுப் பணியாளர்களே, மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் அப்பணியில் ஈடுபட முடியாத நிலையும் உள்ளது. குறைந்த அளவில் துப்புரவுப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டாலும் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி 59 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இதற்கு முன்பு இயற்கை உரங்கள் இலவசமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன. தற்போது, விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்குவதால் ஒரு டன் ரூ.1,000 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 32 டன் இயற்கை உரங்களை அவர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். மீதம் 27 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த உரங்கள் மூலம் கிடைக்கும் தொகை துப்புரவுப் பணியாளர்களுக்கே பிரித்து அளிக்கப்படுகிறது.
இதேபோல் தலக்காஞ்சேரியில் குவிக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத குப்பைகளைப் பிரிப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அப்பணிகள் முடிந்ததும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...