//

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை: முழுமையாகச் செயல்படுத்த கணிப்பொறி சாதனங்கள் வழங்கப்படுமா?

அரசுப் பள்ளிகளில் வரும் ஜூன்-1ஆம் தேதி முதல் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை செயல்படுத்த கருவிகள் விநியோகம் செய்த நிலையில்,

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:57 am

எஸ். பாண்டியன்


அரசுப் பள்ளிகளில் வரும் ஜூன்-1ஆம் தேதி முதல் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை செயல்படுத்த கருவிகள் விநியோகம் செய்த நிலையில், அதற்கென கணிப்பொறி உள்ளிட்ட பொருள்களை வழங்காததால், செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதில், ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆனால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தாமதமாகச் செல்வதால் மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. இதேபோல், தொலை தூர கிராமங்களில் பேருந்து வசதியைக் காரணம் காட்டி தாமதமாகச் செல்லும் சூழ்நிலை இருந்து வந்தது. இவற்றைத் தவிர்த்து, பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதை முறைப்படுத்துவதற்காக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் சரியான நேரத்துக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், கடந்த ஜனவரி மாதம் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பெரும்பாலான  பள்ளிகளில் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், ஜூன் 1 முதல் இத்திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதற்கிடையே வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 7,726 அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும்  பயோமெட்ரிக் கருவிகளை விநியோகம் செய்துள்ளது. 
 இதுகுறித்து திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பயோமெட்ரிக் கருவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே வழங்கிய பழைய   கணிப்பொறியைக் கொண்டு பயோமெட்ரிக் முறையைச் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மற்ற மாநில எல்லையோர கிராமங்களில் தகவல் தொடர்பு வசதி, மின்சார வசதி இல்லாமல் இருப்பதால் முழுமையாக பயோமெட்ரிக் கருவியை செயல்படுத்த முடியாத நிலையுள்ளது. இக்குறைபாடுகளைப் போக்கும் வகையில், மின்தடை நேரத்திலும் தொடர்ந்து கணினியை இயக்க பயன்படும் யு.பி.எஸ். கருவி, தனியாக கணினி, அச்சு இயந்திரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றார்.    
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் கூறியது: 
 ஜூன் 1 முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோர் குறிப்பிட்ட நேரத்துக்குள் வருவதை உறுதி செய்யும் நோக்கில், சரியான நேரத்தில் பதிவு செய்வதற்காக பயோமெட்ரிக் முறையை (தொடு உணர்வு கருவி) செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது. அதேபோல், மாணவ, மாணவிகளின் முழு விவரத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளும் வழங்கப்பட உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 25 பள்ளிகளில் இம்முறை செயல்படுத்தப்பட்டது. அப்போதே இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டத்தில் பயோமெட்ரிக் செயல்படுத்தும் வகையில், 299 பள்ளிகளுக்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், தனியாக பயன்படுத்தும் வகையில் கணிப்பொறி மற்றும் மின்சாரம் இன்றி தொடர்ந்து இயங்கும் வகையில் யு.பி.எஸ். கருவி மற்றும் அச்சு இயந்திரம் ஆகியவற்றின் தேவை பட்டியலை பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.