அரசு மருத்துவமனை வளாகத்தில் "குப்பை மலை
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நகராட்சியின் மெத்தனப் போக்கால் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.


செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நகராட்சியின் மெத்தனப் போக்கால் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, காசநோய் பரிசோதனைப் பிரிவு பகுதியில், ஏராளமான குப்பைகளும், மருத்துவமனைக் கழிவுகளும் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உளளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் தான் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு பொது மருத்துவமனை உள்ளது. செங்கல்பட்டு -விழுப்புரம் ஜிஎஸ்டி சாலையில் 320 ஏக்கரில் இம்மருத்துவமனை உள்ளது.
இம்மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இருப்பதால், தாம்பரம்- விழுப்புரத்துக்கு இடையே விபத்துகளால் பாதிக்கப்படுபவர்கள் எளிதாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் முதல் வாயிலில் பழைய மருத்துவமனை கட்டடம் உள்ளது. இரண்டாவது வாயிலில் மகப்பேறு மருத்துவப்பிரிவு உள்ளது. மூன்றாவது வாயிலில் புறநோயாளிகளுக்கான புதிய கட்டடம் உள்ளது.
நான்காவது வாயிலில் நவீனமாக அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக பிரதான மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளி வார்டுகள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இதன் முகப்பிலேயே அவசர சிகிச்சைக்கு தனிப்பிரிவு உள்ளது.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மகப்பேறு, சாலை விபத்துகள், பாம்புக்கடி சிகிச்சைகளுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக தினசரி ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து இங்கு உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
இவ்வளவு பெரிய அரசு பொதுமருத்துவமனையில் குவியும் குப்பைகள், கழிவுகள், பயன்படுத்தும் ஊசிகள், அறுவைச்சிகிச்சைக் கழிவுகள் உள்ளிட்டவை, பழைய கட்டடம் உள்ள முதல் வாயில் வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்படும் குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகின்றன.
ஆனால் இந்த குப்பைத் தொட்டிகளையும் மீறி வெளியே குப்பைகளைக் கொட்டும் வரை, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதில்லை.
இதனால் ஏராளமான குப்பைக்கழிவுகள் துர்நாற்றத்துடன் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இதனால், நோய் தீர்க்கும் மருத்துவமனையே நோய் பரப்பும் இடமாக மாறி வருகிறது.
இங்கு பணிபுரியும் மருத்துவர்களும் ஊழியர்களும் மூக்கில் துணியைக் கட்டிக்கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். நோயாளிகளின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால், மருத்துவமனை வளாகத்தில் தினசரி குப்பைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒவ்வொரு முறை குப்பைகளின் குவியல் அதிகரிக்கும் போதும் நகராட்சி நிர்வாகத்திடம் கூறுகிறோம். அப்போதும் உடனடியாக வந்து அகற்றுவதில்லை. புகார் சொல்லி 3 தினங்களுக்குப் பிறகே குப்பைகளை எடுக்கின்றனர். 10 நாள்கள் இடைவெளியில் குப்பைகளை அகற்றுவதால், மருத்துவமனையில் குப்பைகள் அதிகரிக்கின்றன என்றனர்.
நகராட்சி நிர்வாகிகள் மருத்துவமனையிலிருந்து அன்றாடம் குப்பைக் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், மருத்துவமனை நிர்வாகமும் இதில் உறுதியாக இருந்து தூய்மையான சுகாதாரமான மருத்துமனையாகச் செயல்பட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத் துறையும் மாவட்ட நிர்வாகமும் வாரந்தோறும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...