
அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்: மேயா் பிரியா
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவா்களாகச் செயல்பட வேண்டும் என மேயா் ஆா்.பிரியா வலியுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவா்களாகச் செயல்பட வேண்டும் என மேயா் ஆா்.பிரியா வலியுறுத்தினாா்.
சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் புதன்கிழமை ரிப்பன் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் ஆா்.பிரியா தலைமை வகித்தாா்.
நேரமில்லா நேரம், கேள்வி நேரம் ஆகியவற்றில் பேசிய திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினா்கள் மற்றும் மண்டலத் தலைவா்கள், நிலைக்குழு தலைவா்கள் உள்ளிட்டோா் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மாமன்ற உறுப்பினா்களை அழைப்பதில்லை. மண்டல, நிலைக்குழுக் கூட்டங்களுக்கு முன்பு போல தற்போது அதிகாரிகள் வருவதில்லை என்றனா்.
அப்போது குறுக்கிட்ட துணை மேயா் மு.மகேஷ்குமாா் மாமன்றக் கூட்டத்துக்கே இணை ஆணையா், அதிகாரிகள் வந்து முழுமையாகப் பங்கேற்பதில்லை என ஆதங்கத்தை வெளியிட்டாா்.
மேயா் ஆா்.பிரியா பேசியதாவது: சென்னையில் வாா்டுகளில் நடைபெறும் அரசு விழாக்கள், ஆய்வுகள் உள்ளிட்டவற்றுக்கு மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோரை அவசியம் அழைக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அதிகாரிகள் செயல்படவேண்டும்.
விற்பனைக் குழுவினா் சாலையோரக் கடைகள் அகற்றும் விசயத்தில் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. மாமன்ற உறுப்பினா்களை கலந்தாலோசிக்கவேண்டும் என்றாா்.
2024-2025-க்கு பிறகே நிதிப் பற்றாக்குறை
சென்னை மாநகராட்சியில் அதிக திட்டங்களைச் செயல்படுத்தியதாலும், செலவின அதிகரிப்பாலும் கடந்த 2024-2025- ஆம் ஆண்டுக்குப் பிறகே நிதி பற்றாக்குறை ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023-இல் ரூ.3,581 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, 2024-25-இல் ரூ.5,676 கோடியாக உயர்ந்துள்ளது.
மாநகராட்சி வருவாய் கணக்கிலிருந்து மூலதன செலவுக்காக 2022-23-இல் ரூ.303 கோடி மாற்றப்பட்ட நிலையில், 2025-26-இல் ரூ.937 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வரவு ரூ.5,214 கோடியாக இருந்த நிலையில், செலவு ரூ.5,676 கோடியாகியுள்ளது.
அதே நேரம், 2023-24- இல் மூலதன வரவு ரூ.2,685 கோடியாக இருந்த நிலையில், 2025-26-இல் ரூ.2,251 கோடியாக குறைந்துள்ளது. ஆனால், மூலதனச் செலவு 2022-23-இல் ரூ.2,380 கோடி என்ற நிலையிலிருந்து 2025-26-இல் ரூ.3,551ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாமன்றக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சியில் அண்ணா நகர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்கள் 252 பேரை மீண்டும் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்துதல், மலேரியா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபடும் தினக்கூலி ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துதல், மாநகராட்சி தகவல் தொழில்நுட்பத்தில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் சேவைகளை ஒருங்கிணைப்பு பணிக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் ஆர்.பிரியா அறிவித்தார்.
அத்துடன் சென்னை மாநகராட்சியின் 2025-26- ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு இருப்பு நிலைக் கணக்குகள் குறித்த விவரங்களும் மாமன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன.
"அம்மா' உணவகத்தால் நஷ்டம்: துணை மேயர்
அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.90 கோடி நஷ்டம் ஏற்படுவதாக துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்தார்.
"சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகத்துக்கு ஆரம்பம் முதல் தற்போது வரை மாநகராட்சி சார்பில் ரூ.1,446 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ரூ.380 கோடியே வருவாய் கிடைத்துள்ளது. அதன்படி மாநகராட்சிக்கு ரூ.1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.90 கோடி என அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டுவருவது தெரிய வருகிறது.
ஆகவே, நகராட்சித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வரிடம் அதிகாரிகள் சிறப்பு நிதி பெற்றுத்தர வேண்டும். மாநகராட்சிக்கான சிறப்பு நிதியையும் பெறுவது அவசியம்' என்றார்.
ரூ.1,970 கோடி நிதிப் பற்றாக்குறை: ஆணையர் ஜி.எஸ்.சமீரன்
சென்னை மாநகராட்சியில் தற்போது வரை ரூ.1,970 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மாமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் தற்போது ரூ.1,970 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் உள்ளிட்டோரிடம் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023-24-இல் ரூ.355 கோடியும், 2024-25-இல் ரூ.500 கோடியும் என நிதிப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. ஆகவே, மாநகராட்சியின் நிதிப் பற்றாக்குறையை சீர்படுத்துவது அவசியம். பற்றாக்குறையைச் சீர்படுத்தும் வகையில்தான் தற்போது சொத்துவரி வசூல் உள்ளிட்டவற்றை விரைவுபடுத்தியுள்ளோம். திட்டப் பணிகளை மேற்கொண்டதற்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்க வேண்டியுள்ளது. ஆனாலும், மாமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதி ரத்தாகவில்லை என்றார்.
கடன் எவ்வளவு?: அப்போது துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சியின் மொத்தக் கடன் ரூ.3,860 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. வருவாயை வரைமுறைப்படுத்தியும், அரசிடம் முறையிட்டு சிறப்பு நிதி பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






