டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

6 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப். 21) பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

News image
கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப். 21) பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வெள்ளிக்கிழமை காலை வலுவிழந்தது. புதிய காற்றழுத்த தாழ்வு?: இந்த நிலையில், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.

மேலும், தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, சனி, ஞாயிற்றுக்கிழமை (பிப். 21, 22) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமையும் (பிப். 21), திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், இந்த இரு நாள்களிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, திங்கள்கிழமை (பிப். 23), முதல் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில், சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு- தென்கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.