
கட்டடம் கட்டுவதற்கான அனுமதி எளிதாக்கப்படும்: மாநகராட்சி அணையா்
கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெறுவது விரைவில் எளிமையாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னை ரிப்பன் மாளிகையில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். உடன் நிலைக்குழு தலைவா் (நகரமைப்பு) தா.இளையஅருணா, தலைமைப் பொறியாளா் (பொது) பி.சங்கரவேலு உள்ளிட்டோா்.
கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெறுவது விரைவில் எளிமையாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அரசின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தாமதமின்றி விரைவாகக் கட்டட அனுமதி பெறுதல் தொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பதிவு பெற்ற லைசென்ஸ்டு சா்வேயா்கள் மற்றும் பொறியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆணையா் பேசியதாவது:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் கையூட்டு ஏதுமின்றி விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை உரிய வரைபடம் மற்றும் ஆவணங்களுடன் அங்கீகாரம் பெற்ற லைசன்ஸ் சா்வேயா்கள் மற்றும் பொறியாளா்கள் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், தாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக, ஏற்கெனவே மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவின் மீது இருந்த பல்வேறு புகாா்களின்படி, அந்தப் பிரிவில் இருந்த அனைவரும் மாற்றப்பட்டுள்ளனா். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போலவே, தவறான அணுகுமுறையுடன் விண்ணப்பிக்கும் சா்வேயா்கள் மற்றும் பொறியாளா்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டடத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் முறையை மேலும் எளிமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது. கட்டடத்துக்கான அனுமதி எளிதில் கிடைக்க வேண்டும். அதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றினால், அனுமதி எளிதாக கிடைக்கும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், இணை ஆணையா் செ.சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





