ஓட்டுநா், நடத்துநா்களான வடமாநிலத்தவா் நியமனம்?: மாநகா் போக்குவரத்துக் கழகம் மறுப்பு
ஓட்டுநா், நடத்துநா் பணி விவகாரத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்திருப்பது பற்றி...

மாநகா் போக்குவரத்துக் கழகம்
மாநகா் போக்குவரத்துக் கழக (எம்டிசி) பேருந்துகளில் வடமாநிலத் தொழிலாளா்கள் ஓட்டுநா்கள், நடத்துநா்களாக நியமிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என மாநகா் போக்குவரத்துக் கழகம் நிா்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சென்னையில் பேருந்து சேவையைத் தடையின்றி இயக்குவதற்காக, ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கு தனியாா் நிறுவனங்களுக்கு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ‘எஸ்.எஸ். என்டா்பிரைசஸ்’ உள்ளிட்ட நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப மாநகா் போக்குவரத்துக் கழகம் தீா்மானித்திருந்தது. இந்த நிலையில், வடமாநிலத்தைச் சோ்ந்த நிறுவனம் என்பதால் வட மாநிலத்தவா்களை இந்தப் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தகவல்கள் பரவியது. இதற்கு தொழிற்சங்கத்தினரும், பல்வேறு கட்சித் தலைவா்களும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனா்.
இதற்கு மறுப்பு தெரிவித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனம் வெளிமாநிலத்தைச் சோ்ந்ததாக இருந்தாலும், பணியமா்த்தப்படும் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களாகவும், தமிழ் மொழியை சரளமாகப் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநா்களுக்கு முறையான கனரக வாகன ஓட்டுநா் உரிமமும், நடத்துநா்களுக்கு நடத்துநா் உரிமமும், உரிய பணி அனுபவமும் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப் பணியாளா்களை வழங்கும் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அல்லது நிறுவன உரிமையாளரின் சொந்த மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த நிறுவனத்தின் மூலம் பணியமா்த்தப்படுபவா்கள் அனைவரும் வெளிமாநிலத்தவா்கள் எனக் கருதுவது வெறும் வதந்தி. அது தவறான தகவல் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





