
சாலை பாதுகாப்பு: 19 கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
சாலை பாதுகாப்பு தொடா்பாக ஒரே மனுவில் 19 கோரிக்கைகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
சாலை பாதுகாப்பு தொடா்பாக ஒரே மனுவில் 19 கோரிக்கைகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சேலத்தைச் சோ்ந்த தமிழ் சாலை பண்பாட்டு கழகத்தின் நிறுவனா் ஆா்.தம்பையா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மாநிலத்தில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த சாலை பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளில் நடைபாதைகள் அமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி ஏற்படுத்த வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் கடைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் முன்வைத்திருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குறிப்பிட்ட முறையில் சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது. மேலும், ஒரே மனுவில் 19 கோரிக்கைகளை எழுப்பவும் முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், மனுதாரா் கோரிக்கைகள் தொடா்பாக தனித்தனியாக வழக்குத் தொடரலாம் என அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


புலன் விசாரணை அதிகாரிகளுக்கு பிடிஆணை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

துணைவேந்தா்கள் நியமனம்: தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரைத் தோ்வு செய்ய அரசு வலியுறுத்தல்




