பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் தொழிற்சாலைகள்:அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை

மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பால், அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க முடியாமல் 300 தொழிற்சாலைகள் திணறி வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:54 am

எஸ். பாண்டியன்

மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பால், அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க முடியாமல் 300 தொழிற்சாலைகள் திணறி வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

தொடர் மழை, வெள்ளம் காரணமாக, அம்பத்தூர், வில்லிவாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழைநீர் புகுந்தது. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கும் வேலையிழப்பும் ஏற்பட்டது.

அம்பத்தூரில் 90 ஆயிரம் தொழிலாளர்கள்..: அம்பத்தூர், அத்திப்பட்டு, முகப்பேர், பட்டரவாக்கம், பாடி, கொரட்டூர் ஆகிய பகுதிகளில் 1,440 ஏக்கர் பரப்பளவில் 2,400 சிறு தொழிற்சாலைகளும், சுமார் 250 குறு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

இவை லூகாஸ், சுந்தரம் பாசனர்ஸ், வீல்ஸ் இந்தியா, அசோக் லேலண்ட் ஆகிய பல்வேறு பெரிய நிறுவனங்களை நம்பி தொடங்கப்பட்டவையாகும். மேலும், பன்னாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களின் வரவால், ஆசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன.

இந்த தொழிற்சாலைகளில் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நாள் ஒன்றுக்குச் சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.1.50 கோடி அளவுக்குப் பொருள்கள் உற்பத்தி செய்து உள்நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்கள் பாதிப்பும்..: இதில், அம்பத்தூர் சிட்கோ வடக்கு, பட்டரவாக்கம், அத்திப்பட்டு, தெற்கு ரயில் நிலைய ஓரப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள 800-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அண்மையில் வெள்ளம் புகுந்ததால் நவீன இயந்திரங்களும், உற்பத்தி செய்த பொருள்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் தொழிற்சாலைகள் செயல்படவில்லை. 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் தரப்படாத நிலை தொடர்கிறது.

ரூ.20 கோடி நஷ்டம்: இதுகுறித்து தீயணைப்பு நவீனக் கருவிகள் தயார் செய்யும் தொழிற்சாலையின் நிர்வாக மேலாளர் பெருமாள் கூறியதாவது: எங்கள் தொழிற்சாலையில் 150 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மழைக்குப் பின் சில இயந்திரங்கள் பழுது நீக்கத்துக்குப் பிறகு, 25 சதவீத உற்பத்தி மட்டுமே தொடங்கியுள்ளது. தொழிலாளர்களுக்கும் வேலை தரமுடியாத நிலை உள்ளது.

தொழிற்சாலையை ஒரு மாதம் இயக்க முடியாமல் போனதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி முடங்கியதால் ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வெளி மாநில, வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கு அம்பத்தூர் சிட்கோ தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உதிரிப் பாகங்களை உரிய காலக்கெடுவுக்குள் அனுப்ப வேண்டிய கட்டாயம் எப்போதும் உள்ளது. வெள்ளப் பாதிப்பு காரணமாக உரிய காலக்கெடுவுக்குள் உதிரிப் பாகங்களை அனுப்ப முடியாமல் போகும் நிலையில், வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிற்சாலைகளுக்கு தங்களது "ஆர்டரை' வாடிக்கையாளர்கள் அனுப்பும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது என்றார்.

மொத்தம் ரூ.1,000 கோடி உற்பத்தி பாதிப்பு: இதுதொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜு கூறியாதவது: தொழிற்சாலைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன் ஆகியோர் பார்வையிட்டு சென்றனர்.

மழைக்காலங்களில் மழைநீர் புகுவதைத் தடுக்க கால்வாய்களில் எளிதாக நீர் செல்லும் வகையில் தூர்வார வேண்டும். மழையைத் தொடர்ந்து கடந்த 40 நாள்களாக தொழிற்சாலைகளில் ரூ.1000 கோடி வரையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. இதற்கு இழப்பீடும், தொழிற்சாலைகளின் உற்பத்திக்கேற்ப தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வட்டியில்லா குறுகிய காலக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்க வேண்டும் என்பதை அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

இரு மாதங்களுக்குள் பிரச்னையைத் தீர்க்காவிட்டால்...

தொழிற்சாலைகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

"பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை மறு நிர்மாணம் செய்வதற்கு உரிய முதலீட்டுத் தொகை உதவியை மத்திய, மாநில அரசுகள் இரண்டு மாதங்களுக்குள் செய்யாவிட்டால் தொழிற்சாலைகளை நெல்லூருக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்;

இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம்' என உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.