குடும்ப சேமிப்பே இந்தியாவின் பலம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு குடும்பங்களின் சேமிப்பே காரணம் என்று பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு குடும்பங்களின் சேமிப்பே காரணம் என்று பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.
பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி எழுதிய "மறைந்துபோன மார்க்சியமும், மங்கி வரும் மார்க்கெட்டும்' என்ற மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:
கம்யூனிஸ பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து உலகமயமாக்கல் என்ற பெயரில் சந்தைப் பொருளாதாரம் எங்கும் வியாபிக்கத் தொடங்கிய நேரத்தில் அது பற்றி நான் பேசியது இப்போது, "மறைந்துபோன மார்க்சியமும், மங்கி வரும் மார்க்கெட்டும்' என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது.
கம்யூனிஸ பொருளாதாரம் மறைந்து போனது போல சந்தைப் பொருளாதாரமும் காணாமல் போகும் என்று நான் அப்போது கூறினேன். அதுதான் இப்போது நடந்து வருகிறது.
சந்தைப் பொருளாதாரத்தில் குடும்பம், சமுதாயம், ஆன்மிகம், கலாசாரம் இதற்கெல்லாம் இடமில்லை. ஆனால், நமது நாட்டின் நடைமுறை குடும்பம், சமுதாயம், கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 1.2 சதவீதம் மட்டுமே அன்னிய முதலீடு வந்துள்ளது. 98.8 சதவீதம் நம் நாட்டில் திரட்டப்பட்ட முதலீடு மூலமே நமது பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.
மக்களின் சேமிப்பைக் குறைத்து தாராளமாக செலவு செய்ய வைக்கவும், வங்கிகளில் முதலீடு செய்வதைத் தடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைக்கவும் அரசு முயற்சி செய்தது எதுவும் மக்களிடம் எடுபடவில்லை.
வட்டி வீதத்தை பாதியாகக் குறைத்தால் வங்கிகளில் முதலீடு செய்வது குறையும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக வங்கிகளில் முதலீடு செய்வது மேலும் அதிகரித்தது. இது நமது நாட்டில் மட்டுமே நடக்கும் அதிசயம்.
இன்றும் 56 சதவீதம் வங்கிகளில்தான் மக்கள் முதலீடு செய்கின்றனர். பங்குச் சந்தை முதலீடு வெறும் 2 சதவீதம் மட்டுமே. வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பைக் கொண்டுதான் நமது அரசாங்கமே நடக்கிறது.
வெளிநாட்டுப் பொருள்களை இங்கு கொண்டு வந்து குவித்தால் இந்தியர்களைக் குறிப்பாக பெண்களை செலவு செய்ய வைத்தால் சேமிப்பது குறையும் என ஜெகதீஷ் பகவதி போன்ற பொருளாதார வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கினர். அதையும் அரசு செய்தது. ஆனால், சேமிப்பு 23 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாகக் அதிகரித்தது.
இந்தியாவின் பொருளாதாரம் குடும்பம், சமுதாயம், ஆன்மிகம், கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டு இருப்பதால்தான் இதனைச் சிதைக்க பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
2030-இல் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும், பொருளாதாரம், ராணுவம் என பல துறைகளில் வல்லரசு நாடாக இருக்கும் என உலக நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. குடும்பங்களின் சேமிப்பு மூலம் அது நிச்சயம் சாத்தியமாகும் என்றார் எஸ்.குருமூர்த்தி.
முன்னதாக மறைந்துபோன "மார்க்சியமும், மங்கி வரும் மார்க்கெட்டும்' என்ற நூலை தேசிய சுவாபிமான் ஆந்தோலன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.என். கோவிந்தாச்சாரியா வெளியிட, ராஜாஜி பொது விவகாரங்கள் மையத்தின் தலைவர் ஜி. நாராயணசாமி பெற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் எஸ். குருமூர்த்தி ஆற்றிய உரையின் குறுந்தகட்டை பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் வெளியிட மீனாட்சி மகளிர் கல்லூரியின் செயலாளர் லட்சுமி பெற்றுக் கொண்டார்.
பாஜக தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பேராசிரியர் ப.கனகசபாபதி, தேமுதிக எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் நம்பி நாராயணன், இணை அமைப்பாளர் இளங்குமார் சம்பத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...