20 ஆயிரம் பேருக்கு புதிய ஏ.டி.எம். கார்டு
சென்னை, ஜன.7: ஏ.டி.எம். கார்டு மோசடியைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்னையில் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பழைய கார்டுகளைச் செயல் இழக்கச் செய்து புதிதாக கார்டுகளை வழங்கி உள்ளன. இதைக் காவல்து


சென்னை, ஜன.7: ஏ.டி.எம். கார்டு மோசடியைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்னையில் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பழைய கார்டுகளைச் செயல் இழக்கச் செய்து புதிதாக கார்டுகளை வழங்கி உள்ளன. இதைக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு மாதத்துக்கு முன்பு வரை ஏ.டி.எம். கார்டு மோசடி அதிகமாக இருந்தது. குறிப்பாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சென்னைப் பெருநகரக் காவல்துறைக்கு தினமும் 20 ஏ.டி.எம். கார்டு குறித்த மோசடிப் புகார்கள் வந்தன. இவ்வாறு 3 மாதங்களில் சுமார் 300 புகார்கள் வரை வந்தன.
இதில் ரூ. 3 கோடி வரை மோசடிகள் நடைபெற்றிருந்தன. இந்த மோசடிகள் ஒரே விதத்திலேயே நடைபெற்றன. ஸ்கிம்மர், என்கோடர், எம்போசர் ஆகிய கருவிகள் மூலம் போலி கார்டுகள் தயாரிக்கப்பட்டு, பணம் திருடப்பட்டன. ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் பொருத்தப்பட்டு, கார்டுகளில் இருந்த தகவல்கள் திருடப்பட்டன.
இக் கருவிகள் கள்ளச்சந்தையில் எளிதாகக் கிடைத்ததால், ஏ.டி.எம். மோசடியைத் தடுப்பதில் காவல்துறைக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. ஏ.டி.எம். மையங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா இல்லாமலும், பாதுகாவலர் இல்லாமல் இருந்ததினாலும் மோசடி கும்பல்கள் தங்களது வேலையை எளிதாகச் செய்தன.
இக் குறைபாடு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே அதிகமாக இருந்தது. காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்த மோசடியில் ஈடுபட்ட 3 கும்பல்களைக் கைது செய்தது.
சென்னைக்குள் 27 ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி மூலம் இந்த கும்பல்கள் தகவல்களைத் திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்ட நாள்களிலிருந்து அந்த மையங்களை எத்தனை பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள், அவர்கள் யார் என்ற பட்டியலை அந்தந்த வங்கி நிர்வாகங்கள் தயாரித்தன.
20 ஆயிரம் பேருக்கு ஏ.டி.எம். கார்டு: இந்த மோசடியில் வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த ஏ.டி.எம்.களின் சேவையையும் முடக்கி வைத்தனர்.
வாடிக்கையாளர்கள், வைத்திருந்த ஏ.டி.எம்.கார்டின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்ததால், அவற்றைச் செயல் இழக்கச் செய்தனர். அவர்களுக்கு படிப்படியாக புதிய ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு 20 ஆயிரம் பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவிக்கிறார். இரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களிலே ஸ்கிம்மர்கள் அதிகமாக பொருத்தப்பட்டிருந்தன.
இப்போது ஏ.டி.எம். மையங்களை முழு கண்காணிப்பில் வைத்திருப்பதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...