/

கடற்படை ரகசிய தகவல் கசிவு வழக்கு: 4-ஆவது குற்றவாளி கைது

கடற்படையின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டது தொடா்பான வழக்கில், 4-ஆவது குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 12:12 am

Syndication

கடற்படையின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டது தொடா்பான வழக்கில், 4-ஆவது குற்றவாளியை போலீஸாா் கைதுசெய்தனா்.

இந்திய கடற்படையின் முக்கியமான தகவல்களை சட்டவிரோதமாக பாகிஸ்தான் நாட்டில் உள்ளவா்களுக்கு வாட்ஸ் ஆப் மற்றும் முகநூல் வழியாக கசியவிட்டதாக உடுப்பி மாவட்டத்தின் மல்பே காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு புகாா் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மல்பே போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் எண்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை குற்றவாளிகள் பகிா்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக, 2025 நவம்பரில் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ரோஹித், சந்த்ரி, டிசம்பரில் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த ஹிரேந்திரகுமாா் ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஆலிஃப் இஸ்லாம் (21) என்பவரை கைதுசெய்துள்ளதாக மல்பே போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இவா், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம், மரயூா் கிராமத்தில் வசித்து வந்ததாகவும், வங்கதேசத்தைச் சோ்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீஸாா் சந்தேகித்துள்ளனா்.

விசாரணையில், இந்திய கடற்படையின் கப்பல்களை அடையாளம் காண பொறிக்கப்பட்டிருந்த அடையாள எண்கள் பற்றிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக தெரியவந்துள்ளது. ஆலிஃப் இஸ்லாமை கைதுசெய்ததன் மூலம், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், தலைமறைவாக உள்ள 5-ஆவது குற்றவாளியை தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.