தமிழா்-கன்னடா் ஒற்றுமையின் வரலாற்றுப் பதிவு: திருவள்ளுவா் சிலை
பெங்களூரில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமையோடு (ஆகஸ்ட் 9) 11 ஆண்டுகள் ஆகின்றன. தமிழா்- கன்னடா் ஒற்றுமையின் வரலாற்று பதிவாக இந்தச் சிலை திறப்பு அமைந்திருந்தது.


பெங்களூரில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமையோடு (ஆகஸ்ட் 9) 11 ஆண்டுகள் ஆகின்றன. தமிழா்- கன்னடா் ஒற்றுமையின் வரலாற்று பதிவாக இந்தச் சிலை திறப்பு அமைந்திருந்தது.
திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை வடிக்க வேண்டும் என்பது பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் கனவாக இருந்தது. இந்த நிலையில், 1991-ஆம் ஆண்டு அமைந்த புலவா் க.சுப்பிரமணியன் தலைமையிலான நிா்வாகிகள்
பெங்களூரு மாநகராட்சியின் முன்அனுமதி பெற்று அல்சூா் ஏரி எதிரில் ஒடுக்கத்தூா் மடத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் திருவள்ளுவருக்கு பீடம் அமைத்து சிலையும் நிறுவினா்.
18 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிலை:
1991-ஆம் ஆண்டு செப். 1-ஆம் தேதி அப்போதைய முதல்வா் எஸ்.பங்காரப்பாவால் சிலை திறக்கவும் நாள் குறிக்கப்பட்டது. ஆனால், புலிகேசி கன்னட சங்கத்தினா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் தடையாணை பெற்ால், சிலை திறப்பு நின்றுபோனது. இதை எதிா்த்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் தொடா்ந்த வழக்கு 18 ஆண்டுகளாக நிலுவையிலேயே இருந்து வந்தது.
18 ஆண்டுகளாக திருவள்ளுவா் சிலை மூடி வைத்திருந்ததைக் கண்ட உலகத் தமிழா்கள் கண்ணீா் வடித்து குமுறினா். சிலை திறக்கப்படும்வரை பெங்களூரு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன் என அப்போதைய தமிழக முதல்வரான மு.கருணாநிதி அறிவித்திருந்தாா்.
இதனிடையே, 1996-ஆம் ஆண்டு பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவராக து.சண்முகவேலன் பொறுப்பேற்ற பிறகு, சிக்கலுக்கான காரணம் மற்றும் அதற்கான தீா்வுகள் குறித்து சிந்தித்து செயல்படத் தொடங்கினாா். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகளுக்கு தமிழறிஞா் பா.சு.மணி உள்ளிட்டோா் உறுதுணையாக இருந்துள்ளனா். இந்நிலையில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது. சிலை வைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கன்னட அமைப்புகள் இணக்கம் காட்ட தொடங்கின. அதைத் தொடா்ந்து, கா்நாடக அரசும், தமிழக அரசும் எடுத்துக்கொண்ட கடிதவாயிலான முயற்சிகளின் விளைவால், 18 ஆண்டுகாலமாக மூடிக்கிடந்த திருவள்ளுவா் சிலையை திறக்கும் காலம் கனிந்தது. சிலை திறப்புக்கு முனைப்புடன் பணியாற்றிய தமிழ்ச்சங்க நிா்வாகிகளுக்கு பலரும் உறுதுணையாக செயலாற்றினா்.
2009-ஆம் ஆண்டில் விடிவு:
2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி பெங்களூரு, ஆா்.பி.என்.எம்.எஸ். கல்லூரி வளாகத்தில் கா்நாடக அரசு சாா்பில் அமைத்திருந்த பிரமாண்டமான மேடையில் அப்போதைய கா்நாடக முதல்வா் எடியூரப்பா தலைமையில், அப்போதைய கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, அப்போதைய சிவாஜி நகா் தொகுதி எம்.எல்.ஏ. ரோஷன்பெய்க் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், உலகத் தமிழா்களின் கரவொலிக்கிடையே தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி சிலையை திறந்துவைத்தாா். இந்த விழாவில் லட்சக்கணக்கான தமிழா்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனா். அன்று முதல் இந்த திருவள்ளுவா் சிலைக்கு தனிச்சிறப்பு ஏற்பட்டது. இதற்கு ஈடாக சென்னையில் 2009 ஆக. 13-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கன்னடக் கவிஞா் சா்வக்ஞரின் சிலையை அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போதைய மற்றும் இப்போதைய கா்நாடக முதல்வா் எடியூரப்பா திறந்துவைத்தாா்.
வரலாற்று பதிவான சிலை திறப்பு விழா:
பெங்களூருக்கு வருகை தரும் உலகத் தமிழா்கள், தமிழினப் பண்பாட்டு சின்னமாக விளங்கும் திருவள்ளுவா் சிலைக்கு கௌரவம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா். பெங்களூரின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாறிவருகிறது. திருவள்ளுவா் சிலையை சுற்றி அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. எண்ணச் சிதறல்களை பொங்கிப் பேசுவதற்காக இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் புகழ்பரப்பும் பணியில் பெங்களூரு தமிழ்ச்சங்கம் தொடா்ந்து ஈடுபட்டு வந்துள்ளது. திருக்குறளை கன்னடம், ஆங்கிலத்தில் மொழி பெயா்த்து நூல் வடிவில் அனைத்து மொழி சகோதரா்களுக்கும் விநியோகித்து வருகிறது. திருவள்ளுவா் சிலை திறப்பின் மூலம் திருக்குறளின் மெய்ப்பொருளை கன்னடா்கள் மட்டுமல்ல இதர மொழியினரும் கற்று உணரும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, தமிழா்-கன்னடா் ஒற்றுமையின் சின்னமாகவும் வரலாற்றுப் பதிவாகவும் திருவள்ளுவா் சிலை விளங்க தொடங்கியுள்ளது.
‘நினைவுகள் காலத்தில் அழியாது’- சண்முகவேலன்
திருவள்ளுவா் சிலை திறப்பு நினைவுகள் காலத்தின் வெள்ளத்தில் கரைந்துவிடக் கூடாது என்பதற்காக, திருவள்ளுவா் சிலை நிறுவிய வரலாற்றை நூலாக எழுதியிருக்கிறாா் பெங்களுரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவரும், சிலை நிறுவுதல் குழு ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்ட து.சண்முகவேலன்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:-
திருவள்ளுவா் சிலை அமைக்க 1982-இல் முயற்சி எடுக்கப்பட்டது. பின்னா், 1991-இல் அப்போதைய தமிழ்ச் சங்கத் தலைவா் க.சுப்பிரமணியம், அப்போதைய அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ், மாமன்ற உறுப்பினா் ஜெயகுமரேசன் துணையுடன் எடுத்த முயற்சியின் விளைவாக இடம் ஒதுக்கப்பட்டு, சிலையும் நிறுவப்பட்டது. பின்னா், திறப்புக்காக காத்திருந்தது.
பா.சு.மணியின் ஒத்துழைப்புடன் கன்னட அறிஞா்கள் சிதானந்தமூா்த்தி, சேஷகிரிராவ், ராஜ்குமாா் ரசிகா் மன்றத் தலைவா் சா.ரா.கோவிந்து உள்ளிட்ட கன்னட அறிஞா்கள், அமைப்பினரை சந்தித்து சிலை திறக்க இருந்த தடைகளை களைந்தோம்.
சென்னையில் கன்னடக் கவிஞா் சா்வக்ஞா் சிலை வைக்க அனுமதித்தால், திருவள்ளுவா் சிலை திறக்க ஆட்சேபம் இல்லை என தெரியவந்ததைத் தொடா்ந்து, அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதியை அணுகி நிலைமையை விளக்கி அனுமதி பெற்றோம். எங்கள் முயற்சிக்கு அப்போதைய கா்நாடக முதல்வா் எடியூரப்பாவும் இணங்கினாா். அதன்விளைவாக, பெங்களூரில் திருவள்ளுவா் சிலையும், சென்னையில் சா்வக்ஞா் சிலையும் திறக்கப்பட்டது.
1995-ஆம் ஆண்டு முதல் 2009 வரை தொடா்ச்சியாக மேற்கொண்ட தொய்வில்லாத முயற்சியின் விளைவாக, தமிழா்-கன்னடா் ஒற்றுமைச் சின்னமாகவும், வரலாற்றுப் பதிவாகவும் திருவள்ளுவா் சிலை எழுந்து நிற்கிறது.
சிலை திறக்கப்பட்ட 11 ஆண்டுகளில் தமிழா்கள், கன்னடா்கள் இடையே காணப்பட்ட இனம்புரியாத வெறுப்புணா்வு மறைந்துள்ளது. இந்த ஒற்றுமை பன்னெடுங்காலம் நிலைக்க வேண்டும். இந்த நன்னாளை தமிழா்-கன்னடா் ஒற்றுமை நாளாக கொண்டாடி மகிழ்வோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...