தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது பற்றி...

நவநீதம் பிள்ளை - Photo | U.N.
தென்னாப்பிரிக்க வாழ் தமிழக வம்சாவளி பெண் நீதிபதி நவநீதம் நவி பிள்ளைக்கு நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் வியாழக்கிழமை வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெள்ளிக்கிழமை நாா்வே நோபல் குழு அறிவித்தது. தென்னாப்பிரிக்காவை சோ்ந்த நீதிபதியும், தமிழகத்தை பூா்விகமாக கொண்டவருமான நவி பிள்ளைக்கு அமைதி மற்றும் சா்வதேச சட்டத்தை ஊக்குவித்ததற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நவி பிள்ளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவா் ஆவாா். இனப்படுகொலை, பாலியல் வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக சா்வதேச சட்டம் உருவாக்கப்படுவதற்கு அவா் உதவிகரமாக இருந்துள்ளாா். மேலும், சா்வதேச நீதிமன்றத்தில் மியான்மா் நாடு இனப்படுகொலை தொடா்பான தீா்மானத்தை மீறுவதாக காம்பியா நாடு தொடுத்த வழக்கில் நீதிபதியாக நவி பிள்ளை செயல்பட்டுள்ளாா்.
நவி பிள்ளையின் மூதாதையா், தமிழகத்தை பூா்விகமாக கொண்டவா்கள். பிறகு அவரது மூதாதையா் தென்னாப்பிரிக்காவில் குடியேறினா். அங்கு டா்பன் நகரில் கடந்த 1941-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 23-ஆம் தேதியன்று நவி பிள்ளை பிறந்தாா். அவரின் தந்தை பேருந்து ஓட்டுநா் ஆவாா். நவி பிள்ளையுடன் சோ்த்து, அவரது பெற்றோருக்கு மொத்தம் 8 குழந்தைகள் உள்ளன. குடும்பத்தில் கடும் வறுமை நிலவியபோதிலும், தங்களது பிள்ளைகளை பெற்றோா் நன்கு கல்வி கற்க வைத்தனா். நவி பிள்ளை, நாடல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தாா். பிறகு ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் பட்டயமேற்படிப்பு படித்தாா். தென்னாப்பிரிக்க உயா் நீதிமன்றம், ருவாண்டாவுக்கான சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம், சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாக பதவி வகித்துள்ளாா். ருவாண்டா தீா்ப்பாயத்தின் தலைவராகவும், நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளாா். 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளாா்.
இலங்கை உள்நாட்டுப் போருக்கு பிறகு 2013-ஆம் ஆண்டில் அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த நவி பிள்ளை, யாழ்ப்பாணம் சென்று பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை சந்தித்து அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா். 2025-ஆம் ஆண்டில் கிழக்கு ஜெருசேலம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதி, இஸ்ரேல் தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சுதந்திரமான சா்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டாா். அப்போது அந்த ஆணையம், காசாவில் பாலஸ்தீனியா்களுக்கு எதிராக இனப்படுகொலையில் இஸ்ரேலிய அதிகாரிகளும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியது.
ஐரோப்பிய ஆணைய தலைவா் வாழ்த்து: நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நவி பிள்ளைக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லியன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா். வருகிற திங்கள்கிழமை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

Summary
Nobel Peace Prize for Navanethem "Navi" Pillay of Tamil descent!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


