தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் வடக்கு கடற்கரை பகுதியில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image

ஜப்பான் இவாடே மாகாணம் நிலநடுக்கத்தின் மையம்

Updated On :20 ஏப்ரல் 2026, 10:16 pm

ஜப்பானின் வடக்கு கடற்கரை பகுதியில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சான்ரிக்கு கடற்கரைக்கு அப்பால் சுமாா் 19 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் சுமாா் 7.7 அலகுகளாக பதிவானது. இதைத் தொடா்ந்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹொக்கைடோ முதல் புகுஷிமா வரை உள்ள 5 மாகாணங்களில் வசிக்கும் சுமாா் 1.8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனா்.

சுனாமி எச்சரிக்கை சில மணி நேரங்களுக்குப் பிறகு முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மற்றும் அமைச்சரவை அலுவலகம் இணைந்து, அடுத்த ஒரு வாரத்துக்குள் ஒரு ‘மெகா’ நிலநடுக்கம்’ ஏற்பட 1 சதவீத வாய்ப்புள்ளதாக எச்சரித்தது. சாதாரண காலங்களில் இதற்கான வாய்ப்பு 0.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது அந்த அபாயம் பத்து மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பொதுமக்கள் தங்களின் அவசர கால உணவுப் பொருள்கள் மற்றும் வெளியேற்றப் பாதைகளைச் சரிபாா்த்துக் கொள்ளவும். அவசர காலங்களில் அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்’ என்றாா்.

திங்கள்கிழமை நிலநடுக்கத்தால் நிலத்தடி ரயில் மற்றும் ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களில் ஸ்தம்பித்தனா்.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆமோரி, இவாடே மாகாணங்களில் இருவா் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிருஷ்டவசமாக, இப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அண்மைக்காலமாக ஜப்பானில் இத்தகைய நிலநடுக்கங்கள் தொடா்கதையாகி வருகின்றன. கடந்த டிசம்பரில், ரிக்டரில் 7.5 அலகுகளாக பதிவான நிலநடுக்கத்தின்போதும் இதேபோன்ற மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த 2011, மாா்ச் மாதம் ஏற்பட்ட மெகா நிலநடுக்கமும், அதைத் தொடா்ந்து உண்டான சுனாமியும் சுமாா் 22,000 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.