தனகுப்தன் என்ற வணிகன் ரத்தினவல்லி என்ற கன்னியுடன் திருப்புறம்பயத்துக்கு வந்து, வன்னி மரத்தடியில் இளைப்பாறினான். அந்தச் சமயம் பாம்பு தீண்ட, தனகுப்தன் இறந்துவிடுகிறான். இதைக் கண்ட ரத்தினவல்லி வேதனையுற்று புன்னை வனநாதரிடம் மனமுருகி வேண்டினாள். வணிகனை உயிர்ப்பித்து தானே முன்னின்று இருவருக்கும் மணம் முடித்து வைத்தான்.
இதுகுறித்து மதுரையில் வாழ்ந்து வந்த தனகுப்தனின் முதல் மனைவி வழக்கு தொடுத்தபோது, இறைவனும் மடைப்பள்ளி , வன்னிமரம், கிணறு சகிதமாய் திருப்புறம்பயத்துக்கு வருகை தந்து காட்சி தந்து சாட்சி உரைத்தார். இந்தச் சம்பவம் குறித்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஈசான்ய பகுதியில் கற்றளியாக காட்சி அமைந்துள்ளது. திருவிளையாடல் புராணத்திலும், சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, மற்றொரு கதையும் கூறப்படுகிறது. ரத்தினவல்லி என்ற வணிகப் பெண்ணுடன் தனகுப்தன் என்ற வணிகனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவரும் திருப்புறம்பயம் வரும்போது, பாம்பு தீண்ட தனகுப்தன் இறக்க நேர்ந்தது.
இதனால் மனமுடைந்த ரத்தினவல்லி இறைவனிடம் முறையிட்டார். அப்போது தரிசனம் செய்ய வந்த திருஞானசம்பந்தர் இதையறிந்து, பதிகம் பாடி இறைவன் துணையுடன் உயிர்ப்பித்தார். பின்னர், திருமணம் நடக்க, இறைவன் சாட்சியாக நின்று அருள்புரிந்தார்.
இதனால் இறைவனுக்கு "சாட்சிநாதர்' என்ற பெயர் வழங்கப்படுவதாகவும் கூறுவர்.
இதேபோல மகத நாட்டு அரியத்துவசனுக்கு துருவாச மன்னரின் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் இத்தலத்தில்தான் நீங்கியது.
கிருதாயுக முடிவில் ஏற்பட்ட பிரளயத்திலிருந்து இத்தலத்தை காக்க இறைவன், விநாயகரைப் பணிக்கிறார். தந்தையின் ஆணையை ஏற்ற விநாயகர், ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடலின் சீற்றத்தையும் ஒரே கிணற்றில் அடக்கி காத்தருளினார். இதற்கு சான்றாக ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ள குளத்தை அடுத்து கிழக்கே ஏழுகடல் கிணறு அமைந்துள்ளது. பிரளயத்தை அடக்கியதால் "பிரளயம் காத்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார். இவர் வருணனின் திருமேனியிலிருந்து சங்கம், நத்தான் கூடு, கிளிஞ்சல் ஆகிய கடல்சார் பொருள்களால் நிர்மாணிக்கப்பட்டவர்.
இவருக்கு விநாயகர் சதுர்த்தியன்று நடைபெறும் தேன் அபிஷேகத்தின்போது ஊற்றப்படும் அவ்வளவு தேனையும் விநாயகரே தன் திருமேனிக்குள் உறிஞ்சிக் கொள்கிறார் என்றும் இதைக் காண்போரின் வேண்டுதல் அடுத்த ஆண்டு அபிஷேகத்துக்குள் நிறைவேறும் என்றும் ஐதீகம்.
தட்சிணாமூர்த்தியின் 24 தலங்களுள் முக்கியத் தலமாக இது திகழ்கிறது.
ஆறுமுகம் கொண்ட குகப் பெருமானை குழந்தை வடிவில் தன் இடையில் ஏந்தி அரவணைக்கும் அழகிய கோலமாக அன்னை குகாம்பிகை காட்சி தருகிறாள். இந்த அன்னைக்கு சாம்பிராணித் தைலம் மட்டுமே சாற்றப்படுகிறது. திருமணம் நடக்கவும், குழந்தைப் பேறு கிடைக்கவும், சுகப் பிரசவத்துக்கும் ஒப்பற்ற தெய்வமாக "குகாம்பிகை' விளங்குகிறாள். இத்தலத் துர்க்கை எண் கரங்களுடன் பேரழகியாக காட்சிதருகின்றாள்.
ஐந்து நிலை ராஜ கோபுரத்தை நோக்கிய வண்ணம் கிழக்கு முகமாய் எழிலான தோற்றத்தில் மூலவர் சாட்சிநாதர் காட்சி தருகிறார். இவருக்கு "புன்னைவன நாதர்' என்ற பெயரும் உண்டு.
கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் கிழக்கே தட்சிணாமூர்த்தி சந்நிதியும், பிரம்ம தீர்த்தம் எனப்படும் திருக்குளமும், அதன் கிழக்கே பிரளயம் புகுந்த ஏழு கடல் கிணறும் அமைந்துள்ளன. தலவிருட்சம் புன்னை மரமாகும்.
பிற்காலச் சோழப் பேரரசு உருவாக ஆதாரமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புறம்பயம் போர் இவ்வூரில் நிகழ்ந்ததாகும். போரில் கிடைத்த தன் வெற்றியின் நினைவாக செங்கல் கோயிலாக இருந்த கோயிலை கருங்கல் கோயிலால் சோழமன்னன் எழுப்பியுள்ளான்.
கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்' என்ற நாவலில் திருப்புறம்பயம் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் என நால்வரால் பாடல்பெற்றதாகவும், கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் திருப்புறம்பயம் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நூறு கோடி பேர் பார்த்த காணொலி

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

பங்குனி உத்திர சிறப்புகள் ஒன்றா இரண்டா..!

மணப்பேறு, மகப்பேறு அருளும் மயில்வாகனன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

